Saturday, November 14, 2015

தினம் ஒரு ஈழத் தமிழ் சொல்.

உறவுகளை இழந்தோம்; வீடு மனை வளவு சொத்து என்று எல்லாவற்றையும் துறந்து வந்தோம்;நாட்டையும் பறிகொடுத்தோம்.ஆனாலும் எம்முடன் கூடவே  நாம் சுமந்து வந்தது எமது   மொழியை  மட்டும் தான். ஆனால் புலம் பெயர் தேசங்களில் சடுதியில் இயந்திரமயமாகிப் போன வாழ்கையோடு போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாத நிலையில் கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு கை கழுவிவிட்டு நின்று பேசக் கூட  நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

அப்படி எங்கே  ஓடுகிறோம் என்ற இலக்கு எவருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை... எனது மொழியில் எனக்கு பேசும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறேன்.. கூட இருந்து பேச ஆள் கிடையாவிட்டால் எனது மொழி எனக்கே மறந்து போய்விடுமோ என்ற பயம் இருக்கிறது..

புலனற்ற சுழிக்குள்ளிலிருந்து விடுவித்து சற்றேனும் ஆசுவாசமாக இருக்க இணையத்தின் தமிழும் தமிழறிந்த மனிதர்களும் உதவுகிறார்கள்.
அவர்களுடனான என் தொடர்புகள் பயனுள்ளதாக இருக்கும் பொருட்டு எனது பங்களிப்பாக இதை எழுதத் தொடங்குகிறேன்.

அதாவது ஈழத்தின் வட்டாரப் பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களை ஊரில் வாழ்ந்த போது எந்த வகையில் பேசித் திரிந்தோமோ அதே அழகுடன் , அதே பாணியில் முடிந்த வரையில் ஒவ்வொரு சொற்களையும் அதன் விளக்கங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

எங்கள் வட்டாரப் பேச்சு வழக்கில் பெரும்பாலான வார்த்தைகள் பண்டைய தமிழ் சொற்களின் மருவலாகவும்  வேறு சில பிறமொழிகளின் சொற்சேர்க்கைகளாகவும்  இருக்கும்.  எல்லா வார்த்தைகளும் எங்கனம் தோன்றியது , எப்படி மருவியது அல்லது எந்தச் சொல்லிலிருந்து மருவியது என்று எல்லாம் எனக்கு விபரமாக தெரியாது. தெரிந்தவற்றை மட்டும் பகிர்கிறேன். பலவற்றை இணையத்தில் தேடி எடுத்தும் பகிர்கிறேன்.

பழகிய மொழி...பிறந்து வளர்ந்ததிலிருந்து பேசிய மொழியும் அதன் வார்த்தைகளையும் அப்படியே அதே இயல்புடன் சுமந்து திரிகிறேன்.  அவற்றை கூடிய வரையில் நல்ல ஒரு படைப்பாக தர முயற்சிக்கிறேன்.

No comments:

Post a Comment