Wednesday, September 21, 2016

கௌரி அக்கா!


10ம் வகுப்பில் எங்களுக்கு தமிழ் ஆசிரியையாக சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கடமையாற்றியவர். அவரை கௌரி மிஸ் என்று அழைத்ததை விட கௌரி அக்கா என்று அழைக்கும் மாணவிகளே அங்கு அதிகம். மிகவும் இளமையானவர். அழகானவர்; அருமையான குரல் வளம் மிக்கவர்;
அவருடனான எனது முதல் அறிமுகமே என்னை வகுப்பில் எழுப்பி தண்டனை தந்ததுடன் தான் ஆரம்பித்தது. அதே கௌரி அக்காவே என்னுடைய தமிழ் திறமையை மெச்சியாகவேண்டுமென்ற வெறியுடன் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தை படித்து முடித்தேன்.. கம்பராமாயணம், மஹாபாரதம் இரண்டையும் சிலபஸில் இணைத்த தமிழ் பாடத்திட்டம் அது.
ஒரு வகையில் சிறுகதைகள் நான் எழுதக் காரணம் கூட கௌரி அக்கா தான். அப்போதெல்லாம் தமிழ் பரீட்சையில் கட்டுரை பகுதியில் கட்டுரையும் எழுதி அதே தலைப்பில் சிறுகதையும் எழுதி சமர்ப்பிப்பேன் கௌரி அக்கா மெச்ச வேண்டும் என்ற காரணத்திற்காகவே... எதிர்பார்த்த மாதிரியே கௌரி அக்காவின் கவனம் என் மேல் விழுந்து என்னுடைய தமிழ் எழுத்துத் திறமையின் மெருகையும் கூட்டி யது.
இலங்கையில் சர்வ சன வாக்குரிமை கிடைத்து 50 வருட பூர்த்தியின் முகமாக அகில இலங்கை ரீதியாக மும் மொழியிலும் மாணவ மாணவிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் என்னை கலந்து கொள்ள ஊக்குவித்து , அக் கட்டுரைப் போட்டியில் 2ம் பரிசு பெற்று ஜே.ஆர்.ஜெயவர்தனே தலைமையில் சுகததாஸ மண்டபத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் விருது பெற என்னை மேடையேற்றிய பெருமை கௌரி அக்காவைச் சாரும். நன்றி கௌரி அக்கா!
இத்தனை வருடங்களின் பின் கௌரி அக்காவை இந்தப் படத்தில் காண சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
Thanks : Anusha Rajasingham Kumar for the picture. (படத்தில் கௌரி அக்காவும் தோழி அனுஷியாவும்)