Wednesday, September 21, 2016

கௌரி அக்கா!


10ம் வகுப்பில் எங்களுக்கு தமிழ் ஆசிரியையாக சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கடமையாற்றியவர். அவரை கௌரி மிஸ் என்று அழைத்ததை விட கௌரி அக்கா என்று அழைக்கும் மாணவிகளே அங்கு அதிகம். மிகவும் இளமையானவர். அழகானவர்; அருமையான குரல் வளம் மிக்கவர்;
அவருடனான எனது முதல் அறிமுகமே என்னை வகுப்பில் எழுப்பி தண்டனை தந்ததுடன் தான் ஆரம்பித்தது. அதே கௌரி அக்காவே என்னுடைய தமிழ் திறமையை மெச்சியாகவேண்டுமென்ற வெறியுடன் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தை படித்து முடித்தேன்.. கம்பராமாயணம், மஹாபாரதம் இரண்டையும் சிலபஸில் இணைத்த தமிழ் பாடத்திட்டம் அது.
ஒரு வகையில் சிறுகதைகள் நான் எழுதக் காரணம் கூட கௌரி அக்கா தான். அப்போதெல்லாம் தமிழ் பரீட்சையில் கட்டுரை பகுதியில் கட்டுரையும் எழுதி அதே தலைப்பில் சிறுகதையும் எழுதி சமர்ப்பிப்பேன் கௌரி அக்கா மெச்ச வேண்டும் என்ற காரணத்திற்காகவே... எதிர்பார்த்த மாதிரியே கௌரி அக்காவின் கவனம் என் மேல் விழுந்து என்னுடைய தமிழ் எழுத்துத் திறமையின் மெருகையும் கூட்டி யது.
இலங்கையில் சர்வ சன வாக்குரிமை கிடைத்து 50 வருட பூர்த்தியின் முகமாக அகில இலங்கை ரீதியாக மும் மொழியிலும் மாணவ மாணவிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் என்னை கலந்து கொள்ள ஊக்குவித்து , அக் கட்டுரைப் போட்டியில் 2ம் பரிசு பெற்று ஜே.ஆர்.ஜெயவர்தனே தலைமையில் சுகததாஸ மண்டபத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் விருது பெற என்னை மேடையேற்றிய பெருமை கௌரி அக்காவைச் சாரும். நன்றி கௌரி அக்கா!
இத்தனை வருடங்களின் பின் கௌரி அக்காவை இந்தப் படத்தில் காண சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
Thanks : Anusha Rajasingham Kumar for the picture. (படத்தில் கௌரி அக்காவும் தோழி அனுஷியாவும்)

Thursday, March 10, 2016

பரம சிவன் கழுத்து பாம்பும் - பெண்ணும்...

பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடல் இன்று வரை ஆண் பெண் பேதமின்றி விரும்பிக் கேட்கும் பாடல் .
ஆனால் எனக்கு கேட்ட நாளிலிருந்து நான் வெறுத்த பாடல் இது...
சூரியகாந்தி படத்தில் வரும் இந்தப் பாடல்..
தன்னை விட மனைவி உயர்வாக இருப்பதை விரும்பாத ஒரு கணவனின் தாழ்வு மனப்பான்மையையும் ,
 முட்டாள் தனத்தையும் சித்தரிக்கும் படம் அது. 

அப்படிப்பட்ட கணவனின் மனதில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்
அவனுடைய தாழ்வு மனப்பான்மையை இன்னும் அதிகமாக  மூட்டிவிடுவது போல்
” அதில் அர்த்தமுள்ளது” “அதில் அர்த்தமுள்ளது” என்று கண்ணதாசன்   பாடுவார்.

வரிக்கு வரி ஆணாதிக்கமானது பெண்னின் முன்னேற்றத்தை தடுக்க இயலாத இயலாமையை
 ஏதோ  தத்துவம் போல் சொல்லும் இந்தப் பாடல் வரிகள்.


’பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌகியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது...அதில் அர்த்தமுள்ளது.

அதாவது பொம்பிள்ளை எண்டால் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் ...அல்லது சமமாக இருக்க முயன்றால் ஆணுக்கு பிரச்சினையாகிவிடும்..  அப்படித் தானே அர்த்தம் கொள்ள வேண்டும்?
”உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்.
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று
மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில் அர்த்தமுள்ளது”
அதாவது மனைவியை விட உய்ர்வாய் கணவன் இருந்தால் தான் வெளியாட்களால் மதிக்கப்படுவான். மனைவி கொஞ்சம் யரே பொனால் இவன் நிலமை தாழ்ந்து போய்விடுவானா?
மனைவியை மட்டுப்படுத்தி வைக்கமுடியாத கணவன் மானமுள்ள மனிதனாக கருதப்பட மாட்டானா?
அவ்வையார் இருதிருந்தால் கண்ணதாசன் தலையில் தன் கைத்தடியால் ஒரு போடு போட்டிருப்பார்.
.’

”வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சின்னதென்றால்
எந்த வண்டி ஓடும்?
உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தமுள்ளது.

எத்தனை சின்னத்தனமான எண்ணம்? தாழ்ந்தோர் எப்பவும் தாழ்வாகவே இருக்க வேண்டும்.
உயர்ந்தோரை சாரக் கூடாது அல்லது உயர்ந்தோருடன் உறவாட கூடாது ..என்று மனிதர்களிடையே பேதத்தையும் ,
ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தும் வரிகள்..



”நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது அதில் அர்த்தமுள்ளது.”
அதாவது பெண்ணானவள் மனைவி என்ற நிலையில் இருப்பதால் கணவனை விட மட்டுப்படுத்தப்பட்டவளாகவே இருக்க வேண்டும்..இல்லையேல் இல்வாழ்கை சிறக்காது;
நீ மனைவியாக இருக்கத் தகுதியற்றவள்...
என்னவொரு மிலேச்சத்தனமான தத்துவம்?
என்னவொரு  வன்மம்?
என்னவொரு பொறுக்காவியல்பு?
என்னவொரு தரப்படுத்தல்?
இந்தப் பாட்டை எப்படி இரசிக்க முடியும்?