48) ஈழத்தமிழ் பேச்சு வழக்கில் சில சொற்களின் அர்த்தங்கள் அதன் ஒலியையும் உச்சரிக்கும் தன்மையையும் வைத்து கணிப்பிடக்கூடியவை.
கெதியா / கெதியெண்டு /- சீக்கிரமா
டக்கெண்டு - உடன /அவசரமாக, வேகமாக
பட்டெண்டு - தாமதிக்காமல்
உடன - உடனடியாக
சுறுக்கா - விரைந்து , சுறுசுறுப்பாக
காலாற - ஓய்வாக அல்லது மெதுவாக
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு - சோர்ந்து போய் வரல்
ஆடிப் பாடி - நேரம் வீணாக்கல் /தாமதித்தல்
ஆடி அசைஞ்சு - தாமதித்தல் /நேரத்தை வீணாக்குதல்
மினக்கெடல் - தாமதித்தல் /நேரத்தை வீணாக்கி
மேலே தரப்பட்ட வார்த்தைகள் வேகத்துடன் சம்மந்தப்பட்டவை.
உதாரண வாக்கியங்கள்.
கெதியா - பாமா இங்க ஒருக்கா கெதியா வாரும் பாப்பம்.
(பாமா சீக்கிரமாக இங்கே வாருங்கள் பார்க்கலாம்)
கெதியெண்டு - கெதியெண்டு நடை பறிஞ்சால் தான் செக்கலுக்கு முன்னம் வீட்ட போய் சேரலாம்.
( விரைவாக நடந்தால் தான் அந்தி சாயும் முன் வீடு போகலாம்)
சுறுக்கா - எந்த வேலையெண்டாலும் அதை சுறுக்கா செய்து பழகு.
(எந்த வேலையையும் சுறுசுறுப்பாக / விரைந்து செய்யப் பழகு)
டக்கெண்டு - அவனுக்கு வந்த கோவத்தில இருந்த இடத்தை விட்டு
டக்கெண்டு எழும்பி போய்ட்டான்.
(அவனுக்கு கோபம் வந்ததால் இருந்த இடத்தை விட்டு
உடனடியாக /தாமதிக்காமல் எழுந்து போய்விட்டான்)
பட்டெண்டு - கொஞ்சமும் யோசிக்காமல் பட்டெண்டு வார்த்தையை
விட்டுடுறது..பிறகு இருந்து யோசிக்கிறது.
(முன் பின் யோசிக்காமல் சடக்கென்று வார்த்தையை விடுவது.
பின்னால் கவலைப்படுவது)
உடன - மினக்கெடாமல் உடன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால்
தான் கிழவியை காப்பாத்தலாம்.
(தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு போனால்
தான் மூதாட்டியை காப்பாற்றலாம்)
காலாற - பின்னேரங்களில கோவில் பக்கம் காலாற நடந்து போனால்
தான் நிம்மதியா இருக்கும்.
(மாலை வேளைகளில் கோவில்பக்கமாக ஓய்வாக நடந்த
போனால் தான் மனதுக்கு திருப்தி)
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு - நானே பகல் முழுக்க முறிஞ்சு போட்டு இப்ப தான்
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு வந்து குந்திறன்..நீ என்னடாவெண்ட்டால்
அதுக்கிடையில வேலை சொல்லுறாய்?
(நானே களைத்து விழுந்து வந்திருக்கிறேன். நீ என்ன
வென்றால் என்னிடம் வேலை சொல்கிறாய்)
ஆடிப் பாடி - அங்க என்ன ஆடிப்பாடிக் கொண்டு நேரத்தை
மினக்கெடுத்துறாய்?
ஆடி அசைஞ்சு - ஆடி அசைஞ்சு கொண்டு நிக்காமல் சுறுக்கா வா பாப்பம்.
மினக்கெடல் - நான் அங்கேருந்து மினக்கெட்டு உன்னை பாக்க வந்தால் நீ
உன்ர பாட்டுக்கு டிவில படம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
(நேரத்தை வீணாக்கி உன்னைப் பார்க்க நான் வந்தால் நீ
உன் பாட்டுக்கு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாய்)
No comments:
Post a Comment