Friday, December 11, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்

உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது,.
சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின் அடையாளங்களில் ஒன்றாகவே ஒன்றிப்போயிருக்கின்றன.
உணவின் தன்மையும், வகையும் மனிதர்களின் வித்தியாசப்படுத்தலில் ஒரு அங்கமாக திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.
ஈழத் தமிழ் மக்களிடையே ஒரு அடையாளமாக அல்லது பன்னெடுங்காலமாக பாவனையிலிருப்பவையாக ஒரு சில உணவுகள் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் நமது சம்பிரதாயங்களுடனோ அல்லது சமய வழிபாட்டுடனோ அல்லது கலாச்சாரத்துடனோ சம்மந்தப்பட்டவையாக நாம் தொடர்ந்து சந்ததி சந்ததியாக கடத்திவரும் விசயங்களில் ஒன்றாக இருக்கின்றன.
பச்சை இறைச்சியை வேட்டையாடி தின்ற அன்றைய மானுடத்தின் உணவு உட்கொள்ளலிருந்து இன்றைய சமைத்தல் முறை மூலம் உட்கொள்ளும் நவீன மாற்றங்கள் பல கண்ட பின்னாலும் நாம் எமது பாட்டி, பூட்டி காலத்தில் சமைக்கப்பட்ட அதே உணவுகளுடன் தான் எங்கள் சந்ததியினருடன் பயணிக்கிறோம். எத்தனையோ புது புது இடங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அந்த நாட்டின் பருவ கால , சூழல் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுகளுடன் வாழ்கையை செலுத்த வேண்டிய கட்டாய்த்திலிருப்பினும் கூட நமது சொந்த ஊரின் சமையல் முறையை எப்பாடுபட்டாவது இருக்கும் ஊரின் சூழலுக்குள் நமக்கு நாமே கொண்டு வந்து விடுகிறோம். எத்தனையோ வகை வகையான புதிய புதிய சமையல் வகைகளை தெரிந்து கொண்டாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நாம் சாப்பிட்டு வாழ்ந்த உணவு வகைகளையே பிராதானப்படுத்துகிறோம்.
அப்படி எம்முடன் சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும் பல வகையான உணவு வகைகளில் “கூழ்” என்பது மிக பிரதானமான உணவு எனலாம்.
கூழ்களில் பல வகையான கூழ் வகைகள் இருந்தாலும் மிகப் பிரதானமாக இரண்டு விதமான கூழ் ஈழத்தில் முக்கிய இடத்தை கொண்டிருக்கின்றன.
1 ) ஆடி மாதப் பிறப்பில் கோவில்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஆடிக் கூழ் .
2) ஒடியல் கூழ்.

ஆடிக் கூழ்
***************
ஆடி மாசத்தில் எந்த நல்லகாரியமும் நம்மூர்களில் நடப்பதில்லை. இறந்தவர்களுக்கான ஆன்ம சாந்தி கிரியைகளை ஆடி அமாவாசையில் கீரிமலை போன்ற புனித நீர் நிலைகளில் உறவினர்கள் போய் செய்வது வழக்கம்.

தை மாசப் பிறப்பை தைப் பொங்கலாகவும், சித்திரை மாசப் பிறப்பை சித்திரை புத்தாண்டாகவும் கொண்டாடுவது போல் ஆடி மாதப் பிறப்பை ஆடிப்பிறப்பாக கொண்டாடுகிறோம் என்பது மட்டும் தெரியும். ஆனால் அதற்கான காரணமோ பாரம்பரிய கதைகள் எதுவுமோ எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

ஆடி மாதத்தில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யுமாம். அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர்  என்று என் தோழி நிவேதா உதயன் கூறுகிறார். அது சரியான காரணமாகவே தெரிகிறது.

ஆடிக் கூழ் இனிப்பானது. அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள். ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள்.
வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது.

ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள். அந்த மாதத்திலேயே அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது. அதனால் தானோ என்னமோ கோவில்களில் ஆடி மாதத்தில் இந்த கூழ் காய்ச்சி வழங்குகிறார்களோ என்னமோ...

ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பாடல் பிரபலமானது.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
********

ஆடிக் கூழ் செய்முறை :

ஆடிக்கூழ்...செய்முறை:

தேவையான பொருட்கள்:

அரிசிமா - 1/2 கப்
பயறு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 2 கப்
பனங்கட்டி - 3/4 கப்
தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்
கொஞ்சூண்டு மிளகுதூள்
செய்முறை:

பயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
2 கப் தணீர கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.
பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.
மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு / கொஞ்சூண்டு மிளகுதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ஆடிக்கூழ் தயார். சுடச்சுட அருந்தவும்


2) ஒடியல் கூழ்
*********************
இது ஆடிக் கூழைப் போல் அல்லாது கடலில் வாழ் பிராணிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கும் கூழ் .
பனங்கிழங்கை அவித்து காய வைத்தால் கிடைப்பது புளுக்கொடியல்.
பனங்கிழங்கை அவிக்காமல் காய வைத்து எடுப்பது ஒடியல். இந்த ஒடியலை மாவாக திரித்து மச்சக் கூழ் அல்லது ஒடியல் கூழ் செய்வார்கள்.
இதன் செய்முறை இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

ஒடியல் கூழ் செய்முறை :


http://www.vavuniyanet.com/news/43139


தேவையானவை
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப



செய்முறை:
****
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.மிகவும் நல்லது.


ஒடியல் கூழ் குடித்தால் அரை மணியிலிருந்து ஒரு மணி வரைக்கும் நீர் அருந்தக் கூடாது என்பார்கள். அப்படிக் குடித்தால் வயிற்றுக் குழப்படியாகிவிடுமாம்.

ஈழத்தில் நமது வீடுகளில் ஒடியல் கூழ் செய்தால் அநேகமாக 15 அல்லது 20 பேருக்கு போதுமானதாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் உறவனர்கள், அயலில் இருக்கும் நண்பர்கள் என்று வீடு களை கட்டும்.
கூழ் விருந்து (பார்டி) அது! அது ஒரு கனாக் காலம்!!

கூழ் செய்வது ஒரு கோலகலமான நாளாக இருக்கும். பொதுவாக விருந்து என்பது ஏதேனும் விசேச தினத்திலோ அல்லது விசேசமான சடங்கிலோ தான் நடக்கும் . ஆனால் ஒடியல் கூழ் விருந்து என்பது
எந்த விசேசம் என்றில்லை...எந்த சடங்கு என்ற காரணம் இல்லாமல் உறவினர்களையும்ம் நண்பர்களையும் ஒன்று கூட வைக்கும் நாளாக்கி விடும்.


ஒடியல் கூழ் செய்வது எத்தனை சிரத்தையானதோ , எத்தனை சுவையானதோ அத்தனைக்கத்தனை அதை உட்கொள்ளும் முறையிலும் இருக்கும் . கூழ் அல்லது கஞ்சி அல்லது கள்ளு குடிக்கவென்றே நம்மூரில் “பிளா” என்ற பனை ஓலைக் கலயம் வேயப்படும். இந்த பிளாவில் குடித்தால் தான் கூழ் குடித்த திருப்தியே ஏற்படும். அதே போல் சிறுவர்களுக்கு பலா மரத்து இலையைக் கோலி கரண்டி மாதிரி செய்து தருவார்கள். கும்பா மாதிரியான கோப்பையில் கூழை ஊற்றி தருவார்கள். அந்த பலா இலைக் கரண்டியால் கூழை அள்ளி குடிப்போம்.

ஈழத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் இன்று வரை அழியாமல் தமிழர்கள் போகுமிடமெல்லாம் கூடவே போன உணவு வகைகளில் கூழ் மிகவும் பிரதானமான ஒன்று. இது எமது வாழ்கையின் சிறுபிராய நினைவுகளையும், எமது வாழ்கை முறையில் ஒன்று கூடலையும், பகிர்ந்து உண்ணுதலின் சிறப்பையும் தன்னுடைய அடையாளமாக வைத்திருக்கும் உணவு வகை என்றால் மிகையாகாது.

இதே போல் பலரோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் இன்னொரு வகை நிலாச்சோறு. அதை பிறிதொரு நாளில் பார்க்கலாம்.

நன்றி : http://www.vavuniyanet.com/news/43139 & விக்கி பீடியா (படங்கள், சமையல் குறிப்புகள்)

No comments:

Post a Comment