Wednesday, December 16, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்

48) ஈழத்தமிழ் பேச்சு வழக்கில் சில சொற்களின் அர்த்தங்கள் அதன் ஒலியையும் உச்சரிக்கும்  தன்மையையும் வைத்து கணிப்பிடக்கூடியவை.


கெதியா / கெதியெண்டு  /- சீக்கிரமா

டக்கெண்டு  - உடன /அவசரமாக, வேகமாக

பட்டெண்டு - தாமதிக்காமல்

உடன - உடனடியாக

சுறுக்கா - விரைந்து , சுறுசுறுப்பாக

காலாற  -  ஓய்வாக அல்லது மெதுவாக

ஆய்ஞ்சு ஓய்ஞ்சு -  சோர்ந்து போய் வரல்

ஆடிப் பாடி -  நேரம் வீணாக்கல் /தாமதித்தல்

ஆடி அசைஞ்சு - தாமதித்தல் /நேரத்தை வீணாக்குதல்

மினக்கெடல் - தாமதித்தல் /நேரத்தை வீணாக்கி

மேலே தரப்பட்ட வார்த்தைகள் வேகத்துடன் சம்மந்தப்பட்டவை.


உதாரண வாக்கியங்கள்.

கெதியா   -  பாமா இங்க ஒருக்கா கெதியா வாரும் பாப்பம்.
                         (பாமா சீக்கிரமாக இங்கே வாருங்கள் பார்க்கலாம்)

கெதியெண்டு  -  கெதியெண்டு நடை பறிஞ்சால் தான்  செக்கலுக்கு முன்னம் வீட்ட போய் சேரலாம்.
 (  விரைவாக நடந்தால் தான் அந்தி சாயும் முன் வீடு போகலாம்)

சுறுக்கா  -   எந்த வேலையெண்டாலும்  அதை சுறுக்கா செய்து பழகு.
                         (எந்த வேலையையும் சுறுசுறுப்பாக / விரைந்து செய்யப் பழகு)
          

டக்கெண்டு  -  அவனுக்கு வந்த கோவத்தில இருந்த இடத்தை விட்டு
                              டக்கெண்டு எழும்பி போய்ட்டான்.
                               (அவனுக்கு கோபம் வந்ததால் இருந்த இடத்தை விட்டு
                               உடனடியாக /தாமதிக்காமல் எழுந்து போய்விட்டான்)

பட்டெண்டு -   கொஞ்சமும் யோசிக்காமல் பட்டெண்டு வார்த்தையை
                              விட்டுடுறது..பிறகு இருந்து யோசிக்கிறது.
                               (முன் பின் யோசிக்காமல் சடக்கென்று வார்த்தையை விடுவது.
                                   பின்னால் கவலைப்படுவது)

உடன -                 மினக்கெடாமல் உடன  ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால்
                               தான் கிழவியை காப்பாத்தலாம்.
                              (தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு போனால்
                               தான் மூதாட்டியை காப்பாற்றலாம்)


காலாற  -        பின்னேரங்களில கோவில் பக்கம் காலாற நடந்து போனால்
                              தான் நிம்மதியா இருக்கும்.
                             (மாலை வேளைகளில் கோவில்பக்கமாக ஓய்வாக நடந்த
                             போனால் தான் மனதுக்கு திருப்தி)

ஆய்ஞ்சு ஓய்ஞ்சு -   நானே பகல் முழுக்க முறிஞ்சு போட்டு இப்ப தான் 
                                ஆய்ஞ்சு  ஓய்ஞ்சு வந்து குந்திறன்..நீ என்னடாவெண்ட்டால்
                                அதுக்கிடையில வேலை சொல்லுறாய்? 
                                (நானே களைத்து விழுந்து வந்திருக்கிறேன். நீ என்ன
                               வென்றால் என்னிடம் வேலை சொல்கிறாய்)

ஆடிப் பாடி -    அங்க என்ன ஆடிப்பாடிக் கொண்டு நேரத்தை
                              மினக்கெடுத்துறாய்?


ஆடி அசைஞ்சு -  ஆடி அசைஞ்சு கொண்டு நிக்காமல் சுறுக்கா வா பாப்பம்.

மினக்கெடல்  -    நான் அங்கேருந்து மினக்கெட்டு உன்னை பாக்க வந்தால் நீ
                                   உன்ர பாட்டுக்கு டிவில படம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
                                   (நேரத்தை வீணாக்கி உன்னைப் பார்க்க நான் வந்தால் நீ
                                   உன் பாட்டுக்கு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாய்)

 

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்

இன்று மூன்று சொற்கள் தேர்வு செய்திருக்கிறேன்.
மூன்று சொற்களும் ஒரே மாதிரியான சொல்லைக் கொண்டு தொடங்குபவையாக இருந்தாலும் வென்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுவனவாகும்.

1) அரிதட்டு /மாவரி/அரிக்கன் தட்டு / அத்திமடக்கு (மட்டக்களப்பு தமிழ்) - சல்லடை

அரிதட்டு அல்லது மாவரி அல்லது அரிக்கன் தட்டு என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம்.இதில் மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.



2) அரிக்கன் சட்டி - அரிசி களைந்து கல், நெல் அகற்றி அரித்தெடுக்க உபயோகிக்கப்படும் மண் அல்லது ஈயத்தாலான பாத்திரம்.

3) அரிக்கன் லாம்பு - மண்ணென்ணெயில் எரியும் விளக்கு ;ஹரிக்கன் காற்றில் கூட இந்த விளக்கு அணையாது என்ற அர்த்தத்தில் இந்த விளக்குக்கு ஹரிக்கேன் இலாம்பு என்று பெயர் வைத்தார்களாம். ஹரிக்கேன் அரிக்கனாக மருவி விட்டது. 



ஈழத்தில் விளக்கை (இ)லாம்பு என்று சொல்வார்கள். லாம்பு என்ற வார்த்தையும் அன்னிய மொழியிலிருந்து தமிழுக்குள் வந்த வார்த்தையே .

உதாரணம்:
1) மாவரிக்க நல்லதா அரிதட்டு ஒண்டு வாங்க வேணும்.
2) அரிக்கன் சட்டியில அரிசியை அரிச்சால் அரிசியை விட கல்லு தான் கனக்க வருது.
3) இருட்டப் போகுது, அந்த அரிக்கன் லாம்பை கொளுத்தி வையன்.

Tuesday, December 15, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

இன்றைய தேர்வாக எங்களூரில் ஒவ்வொருவரினதும் காணிகளும் வீடுகளும் இன்னொருவரின் காணிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும்  பிரிக்க வேலியோ அல்லது மதிலோ நடுவில் இருக்கும். அவை பற்றிய அலசல் இன்றைக்கு,
  • வேலி  
  • மதில்

வீடுகளை சுற்றியும், வளவுகளைச் சுற்றியும் கட்டப்பட்டிருக்கும் இந்த அமைப்பில் மதிலை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. காங்கிரீட் கற்களால் கட்டப்பட்ட மதில்கள் அநேகமாக கல்வீடுகளைச் சுற்றி இருக்கும்.  பெரும்பாலும் வ்சதி படைத்தவர்களின் வீடுகளிலும் காணிகளிலும் தான் மதில்கள் கட்டப்பட்டிருக்கும்.
மற்றும்படி  வேலிகளே எங்கள் ஊரில் எங்கு திரும்பினாலும் எல்லைக் கோடுகளின் அடையாளங்களாயிருக்கும்.

கதியால்  -(பெயர்சொல்)  
வேலியில் நாட்டும் கிளை . இது கிளுவந் தடிகளாலோ , பூவரசம் மரக் கிளைகளாலோ அல்லது சண்டி மரங்களினது தடிகளையோ வரிசையாக வளவின் எல்லயில் கதியால்களாக நட்டு வைப்பது வழக்கம்.
கிளுவங் கதியால் வேலி ஊரில் சகஜம்.

இது போல் பூவரசம் மரக்கதியால்கள், சண்டி மரக் கதியால்கள் என்று வேலிக்காக பல மரங்கள் பயன்படும். இது தவிர  பனை மட்டை  வேலி , தென்னை மட்டை வேலி, பனையோலை வேலி, கிடுகு வேலி போன்றவற்றையும் எங்களூரின் வேலி வகைகள்.

கிடுகு - 
 
தென்னை ஓலைகளால் முடையப்பட்டு வேலியாக அடைக்கப் பயன்படும் . இது கிடுகு வேலி எனப்படும். விபரங்கட்கு https://ta.wikipedia.org சொடுக்கவும்.
Inline image 1நன்றி(http://kattankudi.info)
(நன்றி: தமிழ் விக்கிபீடியா)

பனையோலை வேலி -
 பனை மட்டைகளுடன் விசிறி போல் விரிந்திருக்கும் பனையோலைகளை மறைப்பாக வைத்து அமைக்கப்படும் வேலி.
Inline image 2 நன்றி     https://jaffnaheritage.wordpress.com

பனை மட்டை வேலி
Inline image 3பனை ஓலை அகற்றப்பட்ட தண்டுகளை பனை மட்டை என்போம். அவற்றை வரிசையாக பிணைத்து வேலையாக கட்டி வைப்பார்கள்.

தடி வேலி
மெல்லிய கிளைத்தடிகளால் பிணைக்கப்பட்ட வேலி அமைப்பு

குத்தூசி. 
வேலி அடைக்க பயன்படும் சாதனம்/ உபகரணம். குத்தூசி படம் தேடினேன் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள்.

காம்புச் சத்தகம் -
 வேலி அடைக்க பயன்படும்
Inline image 4

பொட்டு  அல்லது வேலிப்பொட்டு
இரண்டு வீடுகளுக்கிடையிலான வேலியில் நட்போடும், தேவைக்காகவும் அமைக்கப்படும் ஒரு சிறு வழி.  சமயத்தில் சுற்றி வளைத்து போக வேண்டிய அடுத்த தெருவுக்கு அப்படி சுற்றி வளைத்துப் போகமல் குறுக்கு வழிப் பாதையாகக் கூட  இந்த வேலிப் பொட்டுகள் உதவும்.
எங்களூர் வேலிகள் வெறும் நிலப்பரப்புகளின் அரண்களாக மட்டுமல்ல ஊர்களின் ஒவ்வொரு  அயலவர்களினதும் உயிரோட்டங்களையும் தினசரி வாழ்வியலையும் தாங்கி நிற்கும் அடையாளங்களாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு வீட்டு வேலியும் இரண்டு பக்கங்களிலிருந்தும் பகிரப்பட்ட புதினங்கள், விடுப்புகள், சோகங்கள், சந்தோஷங்கள் என்று தன்னோடு வைத்திருக்கும்.
ஒரு அளவான வளவுகளையும் வீடுகளையும் சுற்றி  அரணாக விளங்கும் வேலிகள் தவிர்த்து பல ஏக்கர் கணக்கில் விரிந்து கிடக்கும் வயல்வெளிகள் , வெறும் நிலப்பரப்புகளில் எல்லாம் எல்லைக் கற்கள் இருக்கும். வரிசையாக எல்லைகளில் தென்னை மரங்களோ, பனை மரங்களோ வேலிகள் போல் வரிசையாக நிற்கும். 

பிற்குறிப்புகள்

Mathu Suthany பனைமட்டையால் வேலி கட்டிப்போட்டு அதன் மேல் பாகத்தில்
இரண்டடுக்கு கிடுகு கட்டி அதற்கொரு கோடு போட்டதுபோல்
ஒரு வரிச்சும் கட்டிவிட்டால் பத்து
வருஷம் அசையாமல் இருக்கும்


Monday, December 14, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

பிட்டு
எங்களூரின் உணவில் மிக முக்கிய  முதல் மூன்று இடங்களை பிடிக்கும்  உணவு வகைகள் என்றால் சோறு, பிட்டு/புட்டு , இடியப்பம் ஆகிய மூன்றையும் தான் சொல்ல வேண்டும்.
எங்கள் உணவுப்பழக்கம் என்பது காலையிலும் இரவிலும் மெலிதான உணவாயும் மதியம்  கன போசனமாயும் பகுக்கப்பட்டது.அதன் பிரகாரம் சோறு பெரும்பாலும் மத்தியானச் சாப்பாடாகவே அமையும்.
  பிட்டு , இடியப்பம், பாண் போன்றவை காலை அல்லது இரவு உணவாக உட்கொள்ளப்படும். அப்பம் தோசை இட்டலி போன்றவை எப்போதாவது எல்லோரும் ஒன்றாக இருக்கும் ஓய்வு நாட்களில், வாரக் கடைசியில் , அல்லது  விடுமுறை நாட்களில் மட்டும் காலை உணவாக உட்கொண்டிருக்கிறோம். கால மாற்றங்களும் , போர் சூழலும் , புலம் பெயர் வாழ்வும் இந்த சுழல் வட்டங்களையும் , வகைகளையும் மாற்றியிருந்தாலும் பெரும்பாலான மக்கள் இன்றும் இப்படியே உணவுப் பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
பிட்டு அல்லது புட்டு என்பது  எத்தகைய பாரம்பரியமான பழமை வாய்ந்த உணவு என்று நான் சொல்ல தேவையில்லை. சிவபிரானே பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கிய கதை எல்லாம் படித்திருக்கிறோம்;  ஆகையால் பிட்டு என்ற உணவு வகை மிகப்பழமை வாய்ந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய பழமை வாய்ந்த உணவை இன்று வரை பெரும்பாலான ஈழத் தமிழ் குடும்பங்களின் அன்றாட உணவாக இடம் பிடித்திருக்கிறது என்பது நமது பாரம்பரியம் எத்தனை சந்ததிகளாய் புறக்கணிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
அது என்னவோ நம்மவர்களிடம் பிட்டு அல்லது இடியப்பம் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிக மிக குறைவு . எல்லோருக்கும் மிகப் பிரியமான உணவாக அது இன்று வரை இருக்கிறது. பிட்டுக் குழைத்து அவிக்கத் தெரியாத பெண்கள் ஈழத்தில் இருந்தால் அது உலகின் அதிசயங்களில் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அந்தளவுக்கு பிட்டு எம்மோடு ஒன்றிப் போய்விட்ட உணவு.
பிட்டு பொதுவாக  சிவப்புப் பச்சை அரிசி மாவில் கொதி நீர் விட்டு, அளவான உப்பு கலந்து மாவைக் கிளறி அழகழகான மணிகள் போல் உருட்டி எடுத்து   அதனுடன்  தேங்காய் பூ தூவி  நீராவியில் வேக வைத்து எடுத்து பரிமாறப்படும்.  காலப் போக்கில் வெள்ளை அரிசி மா, சோளன் மா, ஒடியல் மா, குரக்கன் மா , அமெரிக்கன்(மைதா) மா, கோதுமை மா (ஆட்டா மா) , உளுத்தம் மா போன்ற சகல மா வகைகளிலும் (வறுத்தோ அல்லது நீராவியில் வேக பண்ணியோ அரித்தெடுத்த மா), தயாரிக்கக் கூடியதாக முன்னேறியிருக்கிறது.

எங்கள் ஊரில் பிட்டை இரண்டு விதமாக   அவிப்போம்.
குழல் புட்டு  
          நன்றி :(http://tamilbeautytips.com/?p=12979))

நன்றி(https://ta.wikipedia.org)



 நன்றி :(http://www.arusuvai.com)
குழல் பிட்டு 

குழல் பிட்டு  என்பது மூங்கில் குழல்களில் பிட்டு மாவை போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது.
இப்போது அலுமினியம் போன்ற உலோகங்களில் புட்டுக் குழல்கள் தயாரிக்கப்படுகின்றன.

நீத்துப் பெட்டிப் /நீற்றுப் பெட்டி புட்டு


நன்றி(தமிழ் விக்கிபீடியா)


நன்றி: (yarl.com)

பனை ஓலையால் பின்னப்பட்ட கூம்பு வடிவான கலயத்தில் புட்டு மாவும் தேங்காய் பூவும் கலந்து போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது. 
இப்போது  Steamer போன்ற வசதி கிடைப்பதால்  நீத்துப் பெட்டி அருகி வருகிறது. அதுவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்  நீற்றுப் பெட்டி கிடைப்பது அரிதென்பதால் இந்த ஸ்டீமர் முறையில் அல்லது அலுமினிய புட்டுக் குழல்கள் மூலம் பிட்டு அவிக்கிறார்கள்.
பிட்டு  எல்லாவிதமான கறி வகைகளுடனும் மட்டுமல்ல , முக்கனிகளோடும் , தேங்காய் சம்பல், சீனி, சர்க்கரை , சொதி , முட்டைப் பொரியல், கருவாடு என்று எந்த ஒரு பக்கத்துணையுடனும் உட்கொள்ளக் கூடிய உணவு வகை. ஆயினும் பெரும்பாலும் வாழைப்பழம், சொதி ,சம்பல் போன்றவை அனைவராலும் தேர்வு செய்யப்படுபவை.
குரக்கன் மா பிட்டு, ஒடியல் மா பிட்டு, உளுத்தம் மா பிட்டு, கீரைப் பிட்டு என்று விசேஷமான  பிட்டு வகைகள் இருக்கின்றன. 

குரக்கன் மாவில் சர்க்கரை அல்லது பனங்கட்டி தூள்களை தேங்காய் பூவுடன் கலந்து அவிப்பார்கள்.
அதே போல் உளுத்தம் மா பிட்டு தேங்காய்ப் பால் கலந்து உளுத்தமாவில் தயாரிக்கப்படும் பிட்டு ஆகும் .  இந்த விசேட வகையான  பிட்டை சாமத்தியப் பட்ட பெண் பிள்ளைகளுக்காக தயாரிப்பார்கள். இந்த பிட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கிய கத்தரிக்காய் கறியுடன் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள்.
கீரைப் பிட்டு என்பது முருங்கை இலைக் கீரை கலந்து வேக வைக்கும் பிட்டு.

Sunday, December 13, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

ஆக்கினை

அகரமுதலி - ஆக்கினை


ஆக்கினை என்ற சொல்லுக்கு அகராதியில் பலவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவையாவன:
கட்டளை

உத்தரவு

தண்டனை

எனினும் ஈழத்துப் பேச்சு வழக்கில் இந்த ஆக்கினை என்ற வார்த்தை அன்றாட உபயோகத்தில் சிரமங் கொடுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற அர்த்தங்களிலேயே பெரும் பாலும் இடம்பெறுகிறது.

எங்கள் தாலாட்டுப் பாடல் ஒன்றில் இப்படி வருகிறது.

”ஆராரோ ஆரீவரோ
ஆரடித்து நீர் அழுதீர்?
அடித்தவரை சொல்லியழும்.
ஆக்கினைகள் செய்து வைப்போம்.”

யோகாசனத்தில் “ஆக்கினை தவம்” என்றொரு முறை இருக்கிறதாம்.

ஆக ஆக்கினை என்ற பதம் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.

உதாரணம்:

1) உதென்ன பெரிய ஆக்கினையா கிடக்குது?
(இது என்ன பெரிய தொந்தரவாக இருக்கிறது)

2) வரதன்ர ஆக்கினை தாங்காமல் தான் அவன்ர பெண்சாதி கிணத்துக்குள்ள குதிச்சவளாம்.
(வரதனின் கொடுமை தாங்க முடியாமல் தான் அவனுடைய மனைவி கிணற்றுக்குள் குதித்தாளாம்)

3) பள்ளிக்கூடம் போக மாட்டன் எண்டு இவன் ஒரே ஆக்கைனைப்படுத்துறான்.
(பாடசாலைக்குப் போக முடியாது என்று இவன் அடம்பிடித்து தொந்தரவு செய்கிறான்)

4) இப்பிடியே நீ அவளை ஆக்கினைப்படுட்திக் கொண்டிருந்தியெண்டால் ...ஒரு நாளில்லை ஒரு நாள் அவள் உன்னை கொன்றே போட்டுடுவாள்.
( இந்த மாதிரி அவளை நீ துன்புறுத்திக் கொண்டிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவள் உன்னைக் கொன்றுவிடுவாள்)

5) புதுச்சட்டை வாங்கித் தா எண்டு வீட்டில பிள்ளையளின்ர ஆக்கினை / ஆக்கினையை தாங்க முடியவில்லை.
(புது உடை வாங்கித் தர சொல்லி வீட்டில் பிள்ளைகளின் தொந்தரவு / தொந்தரவை தாங்க முடியவில்லை )

பிற்குறிப்புகள்:

Sadayan Sabu ஆக்ஙை என்பது தான் ஆக்கினை ஆனது ஈழத்தில். ஙை என எழுதுவதின் சிரமமானதால் குறுகி ஆனை ஆனது. ஆக்ஙை , கட்டளை என பொருளில் வரும்

***********************************

இளங்குமரன் தா புனித வேதாகம வசனங்களில் பொல்லாத ஆக்கினைகளிலிருந்து காப்பாற்றும்.. என்று ஆக்கினை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.

  ***********************************

ஈஸ்வர் சிவகிருஷ்ணன் ஆக்கினை- வடசொல். கட்டளை, அரசகட்டளை, உத்தரவு(உத்தரவும் வடசொல்) தண்டனை என்ற பொருளிலும் வரும் சிரசாக்கினை- தலையைவெட்டுதல்..... இச்சொல் இங்கு வழக்கில் அரிது இல்லையென்றே சொல்லலாம்....

 

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

சாலம்

சாலம் என்ற சொல் அகராதிகளில் பலவிதமான அர்த்தங்களுடன் இருக்கிறது.

University of Madras Lexicon
சாலம்¹
Multiple matches found. Best match is displayed
n. jāla. 1. See சாலவித்தை. 2. Artfulness, pretence; நடிப்பு. சாலமென்னசொல்லுவேன் (பணவிடு. 316). 3. Multitude,company, flock, herd, shoal; கூட்டம். திரிந்தனசாலமீன் சாலம் (கம்பரா. வருணனை. 25). 4. Assembly, court; சபை. (பிங்.). 5. [T. jāla.] Net;வலை. அளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடும் (கந்தபு.திருநகரப். 18). 6. [T. jāla.] Latticed window;பலகணி. (பிங்.) 7. Flower-bud; அரும்பு. (W.)8. Slander; குறளை. (பிங்.). 9. cf. sāra. Learning;கல்வி. (திவா.) 10. cf. sāra. Medical science;வைத்தியநூல். (W.)



தமிழ் தமிழ் அகரமுதலி
சாலம்
கூட்டம்; மதில்; ஆச்சா; பலகணி; வலை; பூவரும்பு; கல்வி; தாழ்வாரம்; பெருமை; வஞ்சகம்; மாயவித்தை; நடிப்பு; சபை; அகலம்; குறளை; மருத்துவநூல்; கொடிமரம்; வகை.


J.P.Fabricius Tamil and English Dictionary
சாலம்
Multiple matches found. Best match is displayed
ஜாலம், s. magic, trick, மாயவித் தை; 2. a feigned promise, purposed delay, வஞ்சகம்; 3. a net, வலை; 4. multitude, company, flock, கூட்டம்; 5.a flower-bud, அரும்பு; 6. slander, குறளை.
சாலக்காரன், a hypocrite; an artful person.
சாலமாலம், tricks, artifice, evasion.
சாலம்பண்ண, to make a false promise without having a mind to fulfil it; to protract or delay; to play tricks.
சாலவித்தை, the magical art.
இந்திரஜாலம், legerdemain, jugglery.

இத்தனை அர்த்தம் சாலம் என்ற இந்த வார்த்தைக்கு இருப்பினும் 
இந்த வார்த்தையை ஈழத்தில் நம்மவர்கள் பொய் பேசுதல், நடிப்பு போன்ற அர்த்தத்திற்கே பயன்படுத்துகின்றனர்.

ஒருவர் இன்னொருவரிடம் அன்பு, காதல் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் மீது அன்பும் காதலும் இருப்பது போல் நடித்து ஏமாற்றுவது,
சுயநலம், சூழ்நிலைக்கமைய நேரத்திற்கு ஒரு விதமாக தன்னை மாற்றி மாற்றி பொய்யாக இன்னொருவரிடமோ , அல்லது பலரிடமோ பழகுவது போன்றவற்றை சாலம் காட்டுதல் என்று சொல்வோம்.

குழந்தைகள் தங்கள் காரியத்தை சாதிப்பதற்காக அழுவது போல் நடிப்பது, கெஞ்சுவது , கொஞ்சுவது போன்றவற்றையும் விளையாட்டாக சாலம் காட்டுதல் என்று சொல்வோம்..

உதாரணம்:

1) தாய் யசோதாவிடம் சாலம் காட்டுவதில் கண்ணன் கை தேர்ந்தவன்.

2) ஏன் இப்ப உந்த சாலங்காட்டுறாய் எனக்கு?
( ஏன் இப்போது இப்படி என்னிடம் நடிக்கிறாய்)

3) உன்ர சாலங்காட்டுற வேலையெல்லாம் என்னட்டை வேகாது .
( உன்னுடைய நடிப்பு எதுவும் என்னிடம் செல்லுபடியாகாது)

4) என்ன சாலக்கார வித்தை போட்டு என்ர மகனை மயக்கிட்டாளோ தெரியாது
( எப்படி எல்லாம் நடித்து என் மகனை ஏமாற்றிவிட்டாளோ தெரியாது)

எங்க எல்லாரும் ஒருக்கா வந்து சாலங்காட்டுங்கோ பாப்பம்

பிற்குறிப்பு :

ஈஸ்வர் சிவகிருஷ்ணன் ஜாலம்- வடமொழி சொல், இந்திரஜாலம், மகேந்திரஜாலம் என்று கண்கட்டிவித்தையைக்கூறுவார்கள். அது பேச்சுவழக்கில் ஏமாற்றுபனைப்பார்த்து யாருகிட்ட ஜாலம்காட்டுற என வழங்குகிறது. இங்கும் அப்படித்தாங்க, கடன்வாங்கிட்டு என்னஜாலம்காட்டுறான் பாருங்க என்பார்கள்........ஜாலம், சாலம் ஆகிவிட்டது

ஜாலம், சாலம் என தமிழில் வழங்குகிறது அது வடசொல். கண்மா இந்த சாலமெல்லாம் என்னிடம் வேண்டாம், என்று சாலம், ஏமாற்றல், நடிப்பு, பசப்புன்னுகூடச்சொல்லலாம். பல வட்டாரவழக்கில் திரிதல் மருவுதல் எல்லாம் இயல்பாக இருக்குங்க.....பல அகராதிகளில் வடசொற்களும் சேர்த்திருப்பார்கள் அதனாலும் நாமும் மயங்க வேண்டியிருக்கும்......

**************************************

Semmalai Akash சாலக்கு காட்டுகிறாயா? அவன் சாலக்குகாரன் என்று சொல்வது வழக்கம். அவன் நல்லா சாலக்கா பேசி காரியம் சாதித்துவிடுவான் என்று சொல்வார்கள் ( சாலம்) என்பது எங்களுக்கு புதியதாக தெரிகிறது. சாலக்கு=நடிப்பு

 **************************************

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

இரண்டு வினைச்சொல் சேர்ந்த வார்த்தைகளும் உண்டல்லவா?இன்று அவற்றையும் பார்க்கலாமே

வந்து கொண்டிருந்தேன் - வந்து கொண்டிருந்தன்
வந்து கொண்டிருக்கிறேன் - வந்து கொண்டிருக்கிறன்
வந்து கொண்டிருப்பேன் - வந்து கொண்டிருப்பன்
1) அண்டைக்கு ஆமிக்காரங்கள் வரேக்கில அம்மன் கோவில் வெளிவீதில தான் வந்து கொண்டிருந்தன்.
2) கொஞ்சம் பொறுங்கோ...இந்தா..பக்கத்தில தான் வந்து கொண்டிருக்கிறன்
3) நாளைக்கு இந்நேரம் யாழ் தேவில யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருப்பன்.
*******************************************************************
போய் வந்தேன் - போய் வந்தன்
போய் வருகிறேன் - போய் வருகிறன்
போய் வந்தேன் - போய்ட்டு வந்தன்
*******************************************************************
வந்து போனேன் - வந்து போனன்
வந்து போகிறேன் - வந்து போறன்
வந்து போவேன் - வந்து போவன்
*******************************************************************
அதே போல் ...
வந்துவிட்டு போனேன் - வந்திட்டுப் போனன்
வந்துவிட்டு போகிறேன் - வந்திட்டு போறன்
வந்துவிட்டு போவேன் - வந்திட்டு போவன்
*******************************************************************
திரும்பி போனேன் - திரும்பிப் போனன்
திரும்பிப் போகிறேன் - திரும்பிப் போறன்
திரும்பிப் போவேன் - திரும்பிப் போவன்
*******************************************************************
திருப்பி தந்தேன் - திருப்பி தந்தன்
திருப்பி தருகிறேன்- திருப்பி தர்ரன்
திருப்பி தருவேன் - திருப்பி தாறன்
இதே போல் ஆண் பால், பெண்பால், பலர் பால் வகைகளும் மூன்று காலங்களில் பொருந்தி வரும்.
உதாரணமாக
ஆண்பால்:
வந்து போனான் - வந்திட்டு போனான்
வந்து போகிறான் - வந்து போறான்
வந்து போவான் - வந்து போவான்.
*******************************************************************
பெண் பால்:
வந்து போனாள் - வந்திட்டு போனாள்
வந்து போகிறாள் - வந்து போறாள்
வந்து போவாள் - வந்து போவாள்
*******************************************************************
பலர்பால்
வந்து போனார்கள் - வந்திட்டு போய்ட்டினம்/வந்திட்டு போனவை/வந்திட்டு போனவையள்
வந்து போகிறார்கள் - வந்து போகினம்
வந்து போவார்கள் - வந்து போவினம்
(இன்னும் வரும்)

Saturday, December 12, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

இன்றைக்கு கொஞ்சம் எங்கள் வட்டாரத் தமிழின் இலக்கண முறையில் ஒரு சின்ன விசயத்தைப் பார்க்கலாமென்று முயன்றிருக்கிறேன்.
இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் ஈழத்து பேச்சுத்தமிழ் பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது. அதை இன்று கொஞ்சம் விளக்கப்படுத்த முயற்சித்திருக்கிறேன்.


1)
வந்தேன் - வந்தனான்/வந்திட்டன்
வருகிறேன் - வாறன்./வந்து கொண்டிருக்கிறன்
வருவேன் - வருவன் /வரப் போறன்

உதாரண வாக்கியங்கள் :
1)
நான் நேற்று இரவு வந்தனான்
நான் அப்பவே வந்திட்டன்
நான் நாளைக்கு வேலைக்கு வாறன்.
நான் இப்ப வீட்டை தான் வந்துகொண்டிருக்கிறன்.
நான் வாற மாசம் தான் வேலைக்கு வருவன்
அம்மா நான் திரும்பி ஊருக்கு வரப் போறன்.

****************************************

இதை ஆண் பால் , பெண் பால், பலர்பாலில் பார்த்தால் 

ஆண்பால்
 
வந்தான் - வந்தவன்/வந்திட்டான்
வருகிறான் - வாறான்/வந்து கொண்டிருக்கிறான்
வருவான் - வருவான் /வரப் போறான்

உதாரண வாக்கியங்கள் :
2)
அவன் நேற்றுத் தான் வேலைக்கு வந்தவன்
அவன் வெளிநாட்டுக்குப் போய்ட்டு வந்திட்டான்
சந்திரன் வேலையால வாறான்
பாலன் யாழ்ப்பாணம் போய்ட்டு திரும்ப வந்து கொண்டிருக்கிறான்.
எண்டைக்காவது ஒரு நாள் அவன் இஞ்ச வருவான்
இவன் ராசன் எப்ப தான் இங்க வரப் போறான்?

****************************************

பெண்பால் 
 
வந்தாள் - வந்தவள்/வந்திட்டாள்
வருகிறாள் - வாறாள்/வந்துகொண்டிருக்கிறாள்
வருவாள் -வருவாள்/வரப் போறாள்

உதாரண வாக்கியங்கள் :
3)
அமுதா எப்பவோ ஒருக்கா இங்க வந்தவள்
நவமணி எப்பவோ வீட்ட வந்திட்டாள்
இண்டைக்கு தான் மகிழாவும் இஞ்ச வாறாள்.
கிட்டத் தான் தமிழினி வந்து கொண்டிருக்கிறாள்
ஒரு நாளைக்கு சுகந்தியும் கவிஞரா வருவாள்
சொர்ணம் வரப் போறாள்...எல்லாரும் ஓடிப் போங்கோ

*********************************

பலர் பால் 

4)
வந்தார்கள் - வந்தவை /வந்தவையள் /வந்திட்டினம்
வருவார்கள் - வருகினம் /வந்துகொண்டிருக்கினம்
வருகிறார்கள் - வருவினம். /வந்திடுவினம்/வரப் போயினம்

உதாரண வாக்கியங்கள் :
 
அவை நாலு பெடியளும் ஒருக்கா இங்க வந்தவை
அவையள் தான் முதல் இங்க வந்தவையள்
அம்மாவும் அப்பாவும் அப்பவே கோவிலுக்குப் போய்ட்டு வந்திட்டினம்
இப்ப தான் மாமி வீட்டாக்கள் வருகினம்
அண்ணாவும் அக்காவும் கலியாணத்துக்கு வந்து கொண்டிருக்கினம்,
நான் நினைக்கிறன் எப்பிடியும் நாளைக்குள்ள பிள்ளையள் வருவினம்./வந்திடுவினம்.
பாலாவும் பிரேமாவும் நத்தாருக்கு நியூயோர்க் வரப் போயினம்.

****************************************

இப்படியே மற்ற சொற்களுக்கும் உதாரண வாக்கியங்கள் அமைக்கலாம்.
2)
போனேன் - போய்ட்டன் / போனன்
போகிறேன் - போறன்/போய்ட்கொண்டிருக்கிறன்
போவேன் - போவன்/போகப் போறன்

போனான் - போனவன் /போய்ட்டான்
போகிறான் -போறான் / போய்க்கொண்டிருக்கிறான்
போவான் - போவான் / போகப் போறான்

போனாள் - போனவள்/போய்ட்டாள்
போகிறாள்- போறாள்/போய்க் கொண்டிருக்கிறாள்
போவாள்-/போவாள்/போகப் போறாள்

போனார்கள்- போய்ட்டினம்/போனவை
போகிறார்கள்-போயினம்/போய்க்கொண்டிருக்கினம்
போவார்கள் -போவினம்/போகப் போயினம்

இப்படியே மற்ற சொற்களுக்கும் ஆண் பால், பெண் பால், பலர் பால் பொருத்திப் பாருங்கள்..

3) செய்தேன் - செய்தன் / செய்தனான்/செய்திட்டன்
செய்கிறேன்ன் - செய்யிறன்/செய்து கொண்டிருக்கிறன்
செய்வேன் - செய்வன் /செய்யப் போறன்

4) படித்தேன் - படிச்சன்/படிச்சனான்/படிச்சிட்டன்
படிக்கிறேன் - படிக்கிறன்/படித்துக் கொண்டிருக்கிறன்
படிப்பேன் - படிப்பன்/ படிக்கப் போறன்

5)நடந்தேன் - நடந்தன் /நடந்திட்டன்/நடந்தனான்
நடக்கிறேன் - நடக்கிறன்/நடந்து கொண்டிருக்கிறன்
நடப்பேன் - நடப்பன்/நடக்கப் போறன்

Friday, December 11, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.


 ஈழத்தமிழ் வழக்கில் புழக்கத்திலிருக்கும் சில பெயர் சொற்களை இன்று பார்க்கலாம்.



1) மனுசன் - மனிதன் / ஆண்/ பேச்சுவழக்கில்  சில சந்தர்ப்பங்களில் கணவரையும் குறிக்கும்.
2) ஆம்பிளை - ஆண்

3) ஆம்பிளைப் பிள்ளை - ஆண் பிள்ளை.

4)இளந்தாரி - இளைஞன்

5)பெடியன் - சிறுவன்.

6)புருசன் - கணவன்
7)இஞ்சருங்கோ - கணவனை மனைவி அழைக்கும் சொல்
8)வெள்ளாளன்  - வேளாளன். வேளாண்மை / விவசாயத்தை பரம்பரை தொழிலாக கொண்டவர்- ஈழத்தின்  ஒரு சாதி பிரிவினர்.

9)கமக்காரன் - விவசாயி.

10)ராசா - அரசன் / பாசத்துடன் ஆண்களை விளிக்கும் சொல்.
11) மோன் - மகனை அழைக்கும் சொல்
12) மனுசி - பெண்/ பேச்சு வழக்கில் சில சந்தர்ப்பங்களின் மனைவியையும் குறிக்கும்.
13) பொம்பிளை - பெண்

14) பொம்பிளப் பிள்ளை - பெண் பிள்ளை

15) பெட்டை -  சிறுமி.

16)பெண்சாதி -  மனைவி.

17)இஞ்சரும் - கணவன் மனைவியை அழைக்கும் சொல் .

18) ராசாத்தி -  அரசி/ பாசத்துடன் பெண்களை விளிக்கும் சொல்
19)மோனை - மகளை அழைக்கும் சொல்

*******************************************
உதாரண வாக்கியங்கள் : 

1) அ)  மனுசன் -  உந்த மனுசனை  நான் வேற எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ( யாரோ ஒரு மனிதரைப்  
            பற்றி பேசும் போது)
    ஆ) என்ர மனுசன் எல்லாரையும் போல இல்லை ..தான் உண்டு தன்ர பாடு உண்டு எண்டு இருப்பார்.
2 )  ஆம்பிளை -  வீட்டில ஆம்பிளை இல்லாத நேரமா வந்து  வீரம் காட்டாத..என்ன ?
3)  தங்கராசாவுக்கு  ஒரு  ஆம்பிளைப் பிள்ளை இருக்கிறானெல்லே?
4)  வர வர இந்த இளந்தாரிப் பெடியன்கள் அந்த சந்தில நிண்டு கொண்டு அடிக்கிற கும்மாளத்துக்கு ஒரு அளவு கணக்கில்லாமல் போச்சுது
5)  இராசரத்தினத்தாரிண்ட  பெடியன் எட்டாம் வகுப்பு பெயிலாமே? உண்மையே?
6) குமுதினிண்ட புருசன்  வாற மாசம்  வெளிநாட்டில இருந்து வாறாராமே?
7) இஞ்சருங்கோ ..  இஞ்ச  ஒருக்கா வாங்கோ...உங்கட மோள வந்து என்னண்டு  கேளுங்கோ...
8) வெள்ளாளன் -  வெள்ளாளர் (விவசாயிகள்) கதிர் அறுப்புக்கு
                                   ஆயத்தமாயிட்டினம் போல இருக்கு.

                                       அந்த பெடி வெள்ளாள சாதி.. உங்கட ஆள் தான்..(சாதிப்         

                                       பெயராக)

9)  கமக்காரன் -  கமக்காரன் இல்லையெண்டால் இந்த கந்தோர்காரர் எல்லாம் என்னத்தை திண்டு கழுவப்
     போகினமாம்?
10) ராசா - 

       அ) பண்டாரவன்னிய ராசா ஆண்ட  நாடடா இது.. ஆருக்கும் அடி பணிய மாட்டம் . (அரசன்)
        ஆ ) அப்பு ராசா என்ர செல்லமெல்லே..நான் சொல்லுறதைக் கேளப்பன். (பாசமுடன் ஒரு ஆணை
               விளிக்கும் போது)

11)  மோன்  - 
         அ) உன்ர மோன் பண்ணின வேலையைப் பார்த்தியாடி பாக்கியம்?
         ஆ) என்ர மோனே..வந்திட்டியா  ராஸ்ஸா?
12)   மனுஷி
           அ)   அந்த மனுசி  மட்டும் இல்லாட்டில் ஆமிக்காரனட்ட  இருந்து  இந்த பெடியளை ஆரும்
                  காப்பத்தியிருக்க முடியாது.
          ஆ)   என்ர மனுசி ஒரு காரியத்தை நினைச்சாளெண்டால் அதை செய்யாமல் விட மாட்டாள்.
13)   பொம்பிள -  இவன் சின்ராசாவிண்ட மகளை  பொம்பிள பார்க்க இண்டைக்கு மாப்பிள்ளை வீட்டாக்கள்
                               வருகினமாம்.  (பெண்)
14)   பொம்பிள்ளைப் பிள்ளை - சின்ராசாவிண்ட பொம்பிள்ளை பிள்ளை  பேய் வடிவு,..அயலுக்குள்ள எல்லா 
                                                          பெடியளும் வளையம் கட்டிக் கொண்டெல்லே திரியினம்?
15)   பெட்டை  -   இந்த பெட்டை என்ன இங்க வந்து மசிஞ்சு கொண்டு நிக்குது?
16)    பெண்சாதி -  பெண்சாதியும் புருசனுமா சேர்ந்து  புளுகத் துடங்கிச்சினமெண்டால் அவ்வளவு தான்..காது புளிச்சுப் போயிடும்.
17)  இஞ்சரும் -  இஞ்சரும்... ஒரு தேத்தண்ணி ஒண்டு போட்டுத் தாரும் பாப்பம்.
18)  ராசாத்தி
       அ)  குவேனி ராசாத்தி அவசரப்பட்டு விசயனை மட்டும் கலியாணம் செய்யாமலிருந்திருந்தால், அந்த
              விசயனையும் சிநேகிதர்களையும் நர பலி குடுத்திருந்தால் ...யோசிச்சுப் பாருங்களேன்..
        ஆ)  என்ர ராசாத்தி இஞ்ச வா ..இந்த வெத்திலைப் பெட்டியை எடுத்து தாணை.
19)   மோனை -  மோனை...மல்லிகா.... உந்த உலை கொதிக்குது...பார்...சோறு அவிஞ்சிட்டுதா எண்டு..


    

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்


 சாமத்தியம் /சாமத்தியச் சடங்கு

எல்லோரையும் போலவே எங்கள் வாழ்கையும், வாழுதலுக்கான நடைமுறைகளும் எங்கள் பாரம்பரியத்தின் வழிநடத்தலில் கட்டமைக்கப்பட்டு வந்தவை.  ஈழத்தில் தமிழ் கலாச்சாரம் என்பது காலம் காலமாக சந்ததிகளினூடாக காவப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு  வந்து கொண்டிருக்கிறது.

எல்லா பகுதிகளிலும் நிலவுவது போலவே எங்கள் நம்பிக்கைகளில் மூடநம்பிக்கைகளும் இருக்கத் தான் செய்கின்றன. எங்கள் சடங்குகள் சம்பிரதாயங்களில் முட்டாள்தனங்களும் கலந்து இருக்கவே செய்கிறது. பெண் அடிமை, அடக்கு முறை,  சாதி ஆதிக்கம், குடியான் அடிமைத் தனம் என்று எல்லாமும் இருந்தது. ஆனால் இவையெல்லாம் நவீனமயப் படுத்தப்படாத வாழ்கை சூழலில்  அத்திவாரமிடப்பட்டு சந்ததி சந்ததியாக வளர்க்கப்பட்டு வேரூன்றப் பண்ணியவை. இப்போதிருக்கும் சந்ததியர்களிடம் கிளை பரப்பியிருக்கிறது.

கல்வி, முற்போக்கு சிந்தனைகள் வளர்ந்த நிலையிலிருக்கும் எமது இந்தக் கால சந்ததியினர் அந்தக் கிளைகளை அவ்வப்போது வெட்டி விடுகிறார்களே தவிர வேர் இன்னமும் அங்கே தான் இருக்கிறது. சம்பிரதாயங்களும் சடங்குகளும் இப்போதைய காலகட்டத்தில் வெறும் ஒன்று கூடுதலாகவும்,  விருந்தோம்பல் வகையாகவும் தான் கையாளப்படுகின்றன எனலாம்.

அந்த வகையில் இன்றைய அலசலாக  எங்கள் தமிழ் குடும்பங்களில் நடக்கும்
ஒரு முக்கிய சடங்கு இடம் பெறுகிறது.

அ) சாமத்தியம் / பெரிசாவது / - பூப்படைதல்.

ஆ)குப்பைத் தண்ணி வார்த்தல் / முதற் தண்ணி வார்த்தல் -
பூப்படைந்த 3ம் நாள் சடங்கு.

இ)சாமத்தியச் சடங்கு - பூப்புனித நீராட்டு விழா. பூப்படைந்து ஒரு மாதத்தில் பெரும்பாலும் நடத்தப்படும் சடங்கு.

ஈ)தொடமாட்டாள் - மாதவிலக்கான பெண்.

உ) தூமை -  மாதவிலக்கின் போது வெளியேறும் உதிரப் போக்கு. ,தூய்மை, சுத்தம் , வெண்மை,மகளிர் சூதகம், மாதவிடாய்.

ஊ) தூமைச்சீலை - Menstruous cloths; மாதவிலக்கு துணி, சானிட்டரி நப்கின்,

எ)குமர் /குமரி/ செல்வி - பூப்படைந்த பெண், கன்னி, செல்வி .



சிறுமி என்ற பருவத்திலிருந்து குமாரி என்ற இளம் பெண் பருவத்தை மேவும் பெண்னின் பௌதிக மாற்றத்தை சாமத்தியப்படல் / பெரிசாதல் என்பர். பேச்சு வழக்கில் அவள் பெரிசாயிட்டாள் என்றோ அவள் சாமத்தியப்பட்டிட்டாள் என்றோ சொல்வர்.
இது சம்மந்தமான சடங்கை சாமத்தியச்சடங்கு என்று சொல்வார்கள். இது பற்றிய விபரங்களை கீழ் வரும் சுட்டியில் தெரிந்து கொள்ளலாம்.
http://aanmikam.blogspot.com/2011/01/blog-post_4342.html

இன்றும் இந்த சடங்கு நடைமுறியிலிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உறவுகளோடும் நண்பர்களோடும் சேர்ந்திருந்து தங்கள் வீட்டுப் பெண்ணின் மங்கள நாளாக சம்பிரதாய முறைப்படி நடந்த இந்தச் சடங்கு இப்போதெல்லாம் பழமையின் அடையாளங்களைத் தொலைத்த அல்லது புறக்கணித்த - உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் முன்னால் தங்கள் தங்கள் தனிப்பட்ட பண வசதியையும், அந்தஸ்தையும் காட்டக் கிடைத்த சந்தர்ப்பமாக வெறும் ஆடம்பர கொண்டாட்டமாக மாறிவிட்டது என்பது வேதனைக்குரியது.

உதாரண வாக்கியங்களாக:

1) பக்கத்து வீட்டு பொன்னையாவின் மகள் மார்க்கிரேட் பெரிசாயிட்டாளாம்.

2) சாமத்தியப்பட்ட பெட்டையை பார்க்கப் போகேக்கில வெறும் கையோட போக ஏலாது. ஒரு நல்லெண்ணெய் போத்திலாவது கொண்டு போக வேணும்.

3) சந்திராவின் மகளுக்கு நாளைக்கு குப்பை தண்ணி வார்க்கினமாம்; மாசக் கடைசியில நல்ல நாள் பார்த்திருக்கினை சாமத்தியச் சடங்குக்கு.

4) அவள் இண்டைக்கு கோவிலுக்கு வர ஏலாது..தொடமாட்டாம இருக்கிறாள்

5) இவள் கமலி குமராகி ஏழு எட்டு வருசமாப் போச்சுது ...இனி கலியாணத்துக்கு மாப்பிள்ளை கீப்பிள்ளை ஏதும் பாக்க வேண்டாமே?

6) ஒரு குமர் பிள்ளை இப்பிடியே உடுப்பு போடுறது? ஒழுங்கான சட்டையா போட்டுட்டு வா பார்க்கலாம்.

7) குமரி எண்ட நினைப்பில்லாமல் இதென்ன இப்பவும் சின்ன பபாவுக்கு நிக்கிறாள் இவள்?

பிற்குறிப்பு:  இந்த பதிவையிட்டு சிலரின் கருத்துகளை அவர்கள் அனுமதியுடன் கீழே பதிந்திருக்கிறேன்.

Pathmanathan Nalliah :

 ”புத்தளப் பகுதியில் ஆண்களுக்கும் ஒரு பதினாறு வயதளவில் வயதுக்கு வந்தவர் என்று சில தமிழ்ச் சமுகங்களால் கொண்டாடப்படுள்ளது .ஆண்கள் வயதுக்கு வந்ததைக் கண்டு பிடிப்பது கடினம் என்று சொல்லி பம்மாத்து விட்டு அதை 16 வய்தாக்கினார்கள் ஆண்கள் .. .அதை விட காமாஸ்திரம் என்ற நூல் இல் கூறப்பட்டுள்ளது ..பெண் ஒருத்தி பருவமடைந்து பின் ஒரு வருடத்துக்குள் அவளுக்கு அவளது தந்தை திருமணம் முடித்து வைக்காவிட்டால் அத் தந்தை ஒவ்வொரு மாதவிடாயின் பொழுதும் ஒரு பிள்ளையைக் கொன்ற பாவத்துக்கு சமம் என்றுள்ளது ..அதனால் தானோ என்னவோ இப்பொழுது சாமத்தியச் சடங்கிற்கு ஐயர் வந்து தொடக்குக் கழிக்கிறார் ..இதை விட முன்னையர் தமிழிடமான் கேரளாவில் வேறு கதைகளும் உண்டு”

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம்தான் இதைவாசியுங்கள் Puberty, maturation time of transition between childhood and puberty. During this period the gonads (ovaries in girls, the testes in boys) fully functional and begin to produce sex hormones and eventually gametes. Simultaneously, the other bodily features that are characteristic of respectively male and female (secondary sexual characters).

Age
In 95% of all children are the first signs of incipient sexual maturity between 9 and 14 years of age, in girls on average at 11 years of age and in boys 1-2 years later. The time can therefore vary considerably. Since also the period duration is very alternating (from about 11/2 to 6 years), it is among peers in this age group big differences. Some are fully ripe, while others still standing at a childish stage. This inequality in development and the implications it has for the individual position among peers and in relationships with the opposite sex, are among the causes of the psychological problems that many young people have in this period.

Sex hormones
Puberty development is started from the hypothalamus in the brain between. In the sexually mature man enters into the hypothalamus, pituitary and gonads in a self-regulating system that maintains a particular concentration of sex hormones in the blood. The hypothalamus produces a hormone that causes the pituitary gland to secrete their superiors sex hormones (gonadotropins), and these hormones in turn stimulates testes and ovaries to secrete the real sex hormones, respectively testosterone and estrogen. Sex hormones in the blood seems then impinge on the hypothalamus and pituitary, until their concentration in the blood is too low, then the process repeats itself.

It has been shown that this mechanism also acts on the child before puberty. Hypothalamus, pituitary and gonads are fully functional, but the hypothalamus is then so sensitive to hormone the inhibiting effect that only excreted vanishingly small amounts of the hormone from the gonads. Towards puberty becomes hypothalamus gradually less sensitive, and therefore increased secretion of sex hormone slowly until the hormone concentration in the blood is so high that maturation begins. It is not clear why the hypothalamus' sensitivity to sexual hormones decreases. Man has found a temporal association between the bodily development in general (including the child's bone age) and puberty onset, but no causal relationship has not been established.

DEVELOPMENTS
The bodily changes occur in a fairly regular sequence.

GIRLS
Emergence of pubes (hairs of the genitals) may be the first sign of puberty in girls, but often comes the growth of breasts first, sometimes one breast slightly before the other. Meanwhile also growing uterus, vagina, labia and clitoris.

The first menstruation (menarche) comes late in the order. The average age at menarche is (2007) 13 years and 3 months. The average age has been declining for the past 100 years, but this trend now seems to have stalled. At first, menstrual periods to be very irregular, and usually without ovulation the first year or even longer. This varies individually, and pregnancy is always possible when a girl has started to menstruate.

Height growth accelerates in both sexes during puberty. In girls, but never in boys, this so-called growth spurt be the first sign of incipient maturity. The annual increment reaches a maximum before menarche, around age 12, when growth can go up to 11 cm. In the year after menarche increases girls height by an average 7.6 cm.

Meanwhile altered body lines, hips are wider, and the typical female fat deposits under the skin emerges.

Boys
Also in boys may appearance of pubes be the first outward sign, but generally start maturation of growth of the scrotum and testicles. Penis and the internal genitals start to grow about a year later, and after another year comes the first ejaculation (ejaculation).

Beard growth starts a few years after the appearance of pubes. The boys will also eventually a more or less powerful body hair.

Growth spurts occur a few years later than girls and also reaches its maximum a couple of years later, that is on average about 14 years old, and then it can be 12 cm or more in one year.

Body length increases relatively more than the leg length, shoulder width more than hip width.

Simultaneously muscles. Before puberty there is no bigger difference in muscle power of example. arms in girls and boys in the same age and weight group, but after puberty can boys arm muscles perform average nearly twice as much force as the girls' performance. It is not only boys bigger muscles, but also physiological changes that increase muscle fibers contractility conditioned by the male sex hormone. Heart and lungs are relatively larger in boys than in girls, and the blood gets a higher hemoglobin percent, so that it can carry more oxygen to the tissues, and endurance becomes larger.

Voice deepening after a transition period, where the voice is difficult to control because of the rapid growth of the larynx and vocal cords (see voice change). Otherwise change voice timbre in both sexes, because resonance rooms above the larynx (oral and nasal cavities) changes shape and size.

In most boys it occurs some breast development (gynecomastia) late puberty. Gynecomastia can be single- or double-sided, but it disappears by itself within a year or two.

BOTH GENDER
In both sexes developed axillehårene (hair growth in the armpits).

Skin sebaceous glands grows and increases its production in both sexes, but most of the boys, who are more bothered by the propensity to acne, which is connected with this developmen”


Sri Raja”:

 சாமத்தியச் சடங்குகள் பழைய காலங்களில் எமது பெண் வயதிற்கு வந்துவிட்டாள் கலியாணத்திற்கு தயாராகிவிட்டாள் என்று ஊரறிய சொந்தங்கள் அறிய ஒருவகை சுயம்வரம் மாதிரித்தான் செய்தார்கள் பெண் என்றால் இனவிருத்திக்கும் குடும்பத்தைப் பொறுப்பாகப் பார்த்துக்கும் சம்பளமில்லாத வேலைக்காரி மாதிரித்தான் இந்த முறை இப்பவும் தொடர்வது அதுவும் பெண் உரிமை பேசும் பெண்களே முன்நின்று செய்வதுதான் ஆச்சரியம் ..!” 

Sankar Kumar:

சமை (p. 348) [ camai ] , II. v. i. be made, ஆகு; 2. be ready, ஆயத்தமாகு; 3. be cooking or cooked, பாகமாகு; 4. grow marriageable, ருதுவாகு
'சமைதல்' என்னும் தமிழ்ச் சொல்லுக்கு 'பக்குவமாதல்' எனப் பொருள்.

திருமணத்துக்கோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள‌வோ பக்குவமாதலைச் 'சமைதல்' எனச் சொல்லலாம்.

இந்தச் சொல் தமிழகத்தில் இன்னும் வழங்கப்படுகிறது.

அவ சமைஞ்சுட்டா; சம‌ஞ்சுட்டா என்பது திரிந்து, கடல் கடந்து, சாம‌த்தியம் ஆகிவிட்டது எனக் கருதுகிறேன்.

அதேபோல கும‌ரிப்பிள்ளை என்பதை வேகமாகச் சொல்லும்போது, திரிந்து குமர்ப்பிள்ளை எனவும் ஆகியிருக்கக்கூடும்!


Rajhan Murugavel :

“ பக்குவப்பட்டுவிட்டா, வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு ஏற்ற பக்குவத்தை அடைந்துவிட்டார், அதுவே வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு ஏற்ற சாமர்த்தியசாலி ஆகிவிட்டார்... இந்த சாமர்த்தியம் சாமத்தியம் ஆகிவிட்டது என நினைக்கிறேன்.”

”ஒரு நாட்டின் முக்கிய பதவி வகிப்பவர்களூக்கு எத்தனையோ பாதுகாப்புகள், காவல்கள் இருக்கும். உதாரணமாக ஒரு நாட்டின் அல்லது இனத்தின் தலைவர் தான் நினைத்தாலும் தன்னிச்சையாக அல்லது தனியாக செயற்பட அவரின் பாதுகாப்புகள் அனுமதிக்காது. அப்படியாயின் அவரை அடிமை என்று கூற முடியுமா.. அது அவ்வாறு இருக்கும்போது ஒரு குடும்பத்தின், சந்ததியின் முக்கிய மூலமான, ஊற்றான பெண்ணிற்கான காவல்களை எல்லாம் அவளது சந்ததிக்கான ஆரோக்கிய முன்னெடுப்பு என எண்ணிப்பாராது, அவளது அடிமைத்தனமென ஓங்காளிப்பதை என்னென்பது?

MaThi Sutha :

“சாமத்தியம் தமிழ்நாட்டின் மருவல் என்பதை நான் ஏற்கமாட்டேன், சா+மத்திமம்+படுதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம் பெண்ணின் முக்கியமான 3 பருவத்தில் மத்திமமான பருவத்துக்குள் நுழைவதற்கான படி இது

 

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்

இன்றைய தேர்வு பதிவின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்த இழை தொடங்கியதும் எனக்கும் என்னுடைய இணையச் சகோதரர் ஒருவருக்குமிடையில் நடந்த உரையாடலின் சாரத்தை விளக்கமான பதிவாக எழுத நினைத்தேன்.. ஆனால் பதிவாக எழுதுவதை விட உரையாடலை அப்படியே தந்தால் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று புலப்பட்டது. அதன் விளைவு இந்த பதிவு.
எங்கள் பேச்சு வழக்கிலும் தமிழகத்தின் மற்ற பாகங்களிலும் உபயோகத்தில் இருக்கும் வார்த்தைகளான நாங்கள் , நீங்கள், எங்கள் என்ற வார்த்தைகளை ஈழத்தமிழர் உபயோகிக்கும் விதத்திற்கும் அந்த உரையாடலில் பங்குபெறும் தமிழக தமிழர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்திலும் பல தடவை எனக்குள்ளும் என்னுடன் உரையாடிய தமிழக தமிழர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல் தம்பி பாலாஜி பாஸ்கரன் தன்னுடைய நண்பர்களான ஈழத்தமிழர் ஒருவரின் வீட்டுக்கு விசிட் போன போது இதே போல் நாங்கள் நீங்கள் எங்கள் வார்த்தைகளையிட்டு குழம்பிப் போனார்.
ஒரு நாள் அவருக்கும் எனக்குமிடையில் நடந்த “ நாங்கள், நீங்கள் , எங்கள்” என்ற வார்த்தைகள் பற்றிய உரையாடலை அப்படியே இங்கு தருகிறேன். நீங்களும் குழம்பலாம் அல்லது தெளிவடையலாம். smile emoticon smile emoticon
******************
நாங்கள் - We / We are/ நாங்க
நீங்கள் - You / நீங்க
எங்கள் - Our /நம்ம
எங்களுக்கு- Us / நமக்கு
**************************
Balaji Baskaran :
நாங்கள் எங்கள் இதை
எப்படி பயன்படுத்துகிறீர்கள்
என சொல்லுங்கோ
எங்களுக்கும் உங்களுக்கும் ரொம்ப குழப்பம்
இதன் பயன்பாட்டில்
Swathi Swamy :
புரியவில்லை தம்பி
நாங்கள் - We
எங்கள் - Our
இந்த இரண்டையும் நீங்களும் அப்படித் தானே பயன்படுத்துகிறீர்கள்?
Balaji Baskaran:
haa haa haa
ஆமாக்கா
Swathi Swamy:
அப்புறம் என்ன?
Balaji Baskaran:
உங்க இலங்கைத் தமிழர்கள் பேச்சுக்கும் எங்க பேச்சுக்கும்
உள்ள வேறுபாடு சொல்றேன் கேளுங்க
Swathi Swamy:
சொல்லுங்கோ smile emoticon
Balaji Baskaran:
நீங்க ,நான், மாமா எல்லாரும் ஒரு இடத்துல பேசிக்கிட்டு இருக்கோம்
சரியா?
Swathi Swamy :
ஓகே
Balaji Baskaran:
நாங்கள் சினிமாவுக்குப் போவோம்னு நீங்க சொல்றீங்க
Swathi Swamy:
சரி
Balaji Baskaran:
அப்படினா நீங்க ரெண்டு பேரு மட்டும் போறீங்கனுதான் எனக்குப் புரியும்
உங்க மொழில மூனு பேரும் போவோம் என்று சொல்வீர்கள்
Swathi Swamy:
நான் நீங்க.ள் அவர் இருக்கும் போது எல்லாரையும் சேர்த்து தான் நாங்கள் என்கிறோம்.. அதாவது உங்களையும் எங்களோடு சேர்த்தே சொல்கிறோம்
Balaji Baskaran:
ம்ம்ம்ம்
எங்களுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும்னு தான் புரியும்
இதையே நாங்க எப்படி சொல்லுவோம் தெரியுமா?
Swathi Swamy:
ம்ம் இப்ப புரியுது.. சரி அப்ப நீங்கள் எப்படி அதை சொல்வீர்கள்?
சொல்லுங்கோ
Balaji Baskaran:
நாம சினிமாவுக்குப் போவோம்
Swathi Swamy:
smile emoticon நாம என்றால் நாங்கள் தானே?
Balaji Baskaran :
ஆமாக்கா
ஆனா நீங்க நானு உங்களுக்கு வேண்டியவர் இருக்கும் போது நாங்கள் என்று நீங்க சொல்லும் போது
நீங்கள் ரெண்டு பேர் மட்டும்னு தான் புரியும்
Swathi Swamy:
சரி.. இப்ப நான், நீங்கள், பிராணநாதர், ஜோ எல்லாரும் ஒரு இடத்தில் இருக்கிறோம்..
Balaji Baskaran :
ஹா ஹா ஹா இதனால ரொம்பகுழம்பியிருக்கேன் தேனுசா வீட்டுல
Swathi Swamy:
நான் உங்கள் நாலு பேரையும் ஒருமித்து சுட்டுவது என்றால் நீங்கள் என்று சொல்வேன் அல்லவா?
அதை எப்படி சொல்வீர்கள்? நீங்க ந்னு தானே?
Balaji Baskaran :
நீங்கள்தான்
Balaji Baskaran:
எங்கள் பற்றி சொல்றேன்
கேளுங்க
நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
Swathi Swamy :
ஒரு தடவை நான் தமிழ் பிரவாகம் குழுமம் தொடங்கின புதுசுல எங்கள் குழுமம் , எங்கள் குழுமம் என்று எழுதினதை ஒருவர் கண்டித்து எழுதினார்.. அதென்ன இத்தனை பேரையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குழுமம் உங்களோடது மட்டும்ன்னு சொல்லுறீங்க என்று
ஏன் என்று இன்று வரை புரியவில்லை
Balaji Baskaran :
அதேதான்
பெரிய வேறுபாடு இருக்குக்கா
என்னடா நம்மள வச்சிக்கிட்டே இப்படி சொல்றாங்களேனு தோணும்
சிக்கன் மேட்டருக்கு வாரேன்
எங்கள் பற்றி சொல்றேன் கேளுங்க நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
இங்க ஸ்வாதி சொல்றாங்க
எங்களுக்கு கடைசியா சிக்கன் வச்சிருக்காங்க
அப்படினா நீங்க சொல்றது 4 பேருக்கும் கடைசியா வச்சிருக்காங்க
சரியா?
Swathi Swamy:
ஆமாம்
Balaji Baskaran :
எங்களுக்குப் புரிவது, உங்க ரெண்டு பேருக்கு மட்டும் கடைசியா வச்சிருக்காங்க
இதையே நாங்க எப்படி சொல்லுவொம்னா
நமக்கு சிக்கன் கடைசியா வச்சிருக்காங்க
Swathi Swamy:
ஓஒ
Balaji Baskaran:
நாங்கள் - நாம் வேறுபாடு
எங்கள் - நம் வேறுபாடு
Swathi Swamy:
அதான் அதை எப்படி விளக்கமாக எழுதுவது என்று ரொம்ப பிரச்சினையா இருக்கிறது. இது பற்றி கணேசன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கலந்து பெசி தான் விளக்கமாக எழுத வேண்டும்.
Balaji Baskaran :
சரிங்க அக்கா
உங்க பேச்சுல நீங்க நல்லாத்தான் பேசுவீங்க
ஒரு அறையில் படுத்திருக்கோம்
கொசு கடிக்குது
காலைல சொல்றீங்க
ஸ்வாதி : “எங்களுக்கு கொசு கடிச்சது”
பாலாஜி : “ஐய்யே, அப்ப எங்களுக்கு தாலாட்டா பாடுச்சு, எங்களையும்தான் கடிச்சிச்சு”
Swathi Swamy :
நீங்க நினைப்பீங்க எங்களுக்கும் தானே கொசு கடிச்சுதுன்னு
ஹஹஹஹஹ்
Balaji Baskaran:
ஹா ஹா ஹா
நாலு பேரும் வேர்வையில் நனைஞ்சு போயிட்டோம் கரண்ட் இல்லாம
Swathi Swamy:
ஆனா அவங்க உங்களையும் சேர்த்து தான் சொல்றாங்க
நமக்கு கொசு கடிச்சிருச்சுன்னு சொல்லனும் உங்க வழக்கில
Balaji Baskaran :
நாங்கள் வேர்வையில் நனைஞ்சிட்டோம்னு எங்கிட்ட சொன்னா
அப்ப நான் மட்டும் குளிர்ல நடுங்கினேனானு தோனும்
Swathi Swamy:
smile emoticon
Balaji Baskaran:
நம்மை விட்டு மூன்றாம் பேருடன் பேசும் போது நாங்கள் எங்கள் சரியா இருக்கும்
Swathi Swamy :
விளங்குது... ம்ம்ம்ம்
Balaji Baskaran:
நமக்குள்ளே பேசும் போது நாம் நம் சரியா இருக்கும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நன்றி அக்கா
Swathi Swamy:
smile emoticon நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேணும்
இதை எப்படி எல்லாருக்கும் விளங்கிற வகையில எழுதி முடிக்கிறது என்பது தான் இப்ப பிரச்சினையே எனக்கு..
பேசாமல் உக்களுடன் இப்ப பேசினதையே காப்பி & பேஸ்ட் செய்து போட்டுடலாம் என்று நினைக்கிறேன் smile emoticon
Balaji Baskaran:
சரிங்க அக்கா
பட் டிங்கரிங் பார்த்துப் போடுங்க
Swathi Swamy:
ஓஒமோம்..
Balaji Baskaran:
நம்மை விட்டு மூன்றாம் நபரிடம் பேசும் போது நாங்கள் எங்கள்
நமக்குள்ளே பேசும் போது நாம் நம்
இது எங்கள் வழக்கம்
உங்களுடையது
நாங்கள் எங்கள்
அதான் குழப்பம்...
Swathi Swamy :
ஆமாம்.
Balaji Baskaran :
இன்னொரு நண்பரிடம் கேட்குறேனு சொன்னீங்களே
கேட்டுட்டு விளக்கமா போடுங்க
நம்ம பதிவை பார்த்து மேற்கொண்டு மத்தவங்க குழம்பிடாம smile emoticon
Swathi Swamy :
அதே தான்
நன்றி தம்பி. வணக்கம்.
****************************

இந்த உரையாடல் புரிய வைப்பது என்னவென்றால்

உதாரண வாக்கியங்களாக ..

1) நாங்கள் சினிமாவுக்கு போகப் போகிறோம்.
(நாம சினிமாவுக்கு போக போகிறோம்.)

2) எங்களை நுளம்பு நல்லா கடிச்சிட்டுது.
(நம்மை கொசு நல்லா கடிச்சிடிச்சு)

3) எங்களுக்கு பசிக்குது
(நமக்கு பசிக்கறது)

அதாவது :

ஈழத் தமிழில் :
நான் + நீ = நாங்கள் அல்லது நாம்

தமிழகத் தமிழில் : நான் + என்னைச் சார்ந்தவர்கள் மட்டும் = நாங்கள்.

ஈழத்தமிழில் : என்னுடையது + உன்னுடையது = எங்களுடையது. அல்லது நமது

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்

உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது,.
சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின் அடையாளங்களில் ஒன்றாகவே ஒன்றிப்போயிருக்கின்றன.
உணவின் தன்மையும், வகையும் மனிதர்களின் வித்தியாசப்படுத்தலில் ஒரு அங்கமாக திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.
ஈழத் தமிழ் மக்களிடையே ஒரு அடையாளமாக அல்லது பன்னெடுங்காலமாக பாவனையிலிருப்பவையாக ஒரு சில உணவுகள் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் நமது சம்பிரதாயங்களுடனோ அல்லது சமய வழிபாட்டுடனோ அல்லது கலாச்சாரத்துடனோ சம்மந்தப்பட்டவையாக நாம் தொடர்ந்து சந்ததி சந்ததியாக கடத்திவரும் விசயங்களில் ஒன்றாக இருக்கின்றன.
பச்சை இறைச்சியை வேட்டையாடி தின்ற அன்றைய மானுடத்தின் உணவு உட்கொள்ளலிருந்து இன்றைய சமைத்தல் முறை மூலம் உட்கொள்ளும் நவீன மாற்றங்கள் பல கண்ட பின்னாலும் நாம் எமது பாட்டி, பூட்டி காலத்தில் சமைக்கப்பட்ட அதே உணவுகளுடன் தான் எங்கள் சந்ததியினருடன் பயணிக்கிறோம். எத்தனையோ புது புது இடங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அந்த நாட்டின் பருவ கால , சூழல் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுகளுடன் வாழ்கையை செலுத்த வேண்டிய கட்டாய்த்திலிருப்பினும் கூட நமது சொந்த ஊரின் சமையல் முறையை எப்பாடுபட்டாவது இருக்கும் ஊரின் சூழலுக்குள் நமக்கு நாமே கொண்டு வந்து விடுகிறோம். எத்தனையோ வகை வகையான புதிய புதிய சமையல் வகைகளை தெரிந்து கொண்டாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நாம் சாப்பிட்டு வாழ்ந்த உணவு வகைகளையே பிராதானப்படுத்துகிறோம்.
அப்படி எம்முடன் சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும் பல வகையான உணவு வகைகளில் “கூழ்” என்பது மிக பிரதானமான உணவு எனலாம்.
கூழ்களில் பல வகையான கூழ் வகைகள் இருந்தாலும் மிகப் பிரதானமாக இரண்டு விதமான கூழ் ஈழத்தில் முக்கிய இடத்தை கொண்டிருக்கின்றன.
1 ) ஆடி மாதப் பிறப்பில் கோவில்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஆடிக் கூழ் .
2) ஒடியல் கூழ்.

ஆடிக் கூழ்
***************
ஆடி மாசத்தில் எந்த நல்லகாரியமும் நம்மூர்களில் நடப்பதில்லை. இறந்தவர்களுக்கான ஆன்ம சாந்தி கிரியைகளை ஆடி அமாவாசையில் கீரிமலை போன்ற புனித நீர் நிலைகளில் உறவினர்கள் போய் செய்வது வழக்கம்.

தை மாசப் பிறப்பை தைப் பொங்கலாகவும், சித்திரை மாசப் பிறப்பை சித்திரை புத்தாண்டாகவும் கொண்டாடுவது போல் ஆடி மாதப் பிறப்பை ஆடிப்பிறப்பாக கொண்டாடுகிறோம் என்பது மட்டும் தெரியும். ஆனால் அதற்கான காரணமோ பாரம்பரிய கதைகள் எதுவுமோ எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

ஆடி மாதத்தில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யுமாம். அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர்  என்று என் தோழி நிவேதா உதயன் கூறுகிறார். அது சரியான காரணமாகவே தெரிகிறது.

ஆடிக் கூழ் இனிப்பானது. அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள். ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள்.
வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது.

ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள். அந்த மாதத்திலேயே அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது. அதனால் தானோ என்னமோ கோவில்களில் ஆடி மாதத்தில் இந்த கூழ் காய்ச்சி வழங்குகிறார்களோ என்னமோ...

ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பாடல் பிரபலமானது.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
********

ஆடிக் கூழ் செய்முறை :

ஆடிக்கூழ்...செய்முறை:

தேவையான பொருட்கள்:

அரிசிமா - 1/2 கப்
பயறு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 2 கப்
பனங்கட்டி - 3/4 கப்
தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்
கொஞ்சூண்டு மிளகுதூள்
செய்முறை:

பயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
2 கப் தணீர கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.
பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.
மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு / கொஞ்சூண்டு மிளகுதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ஆடிக்கூழ் தயார். சுடச்சுட அருந்தவும்


2) ஒடியல் கூழ்
*********************
இது ஆடிக் கூழைப் போல் அல்லாது கடலில் வாழ் பிராணிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கும் கூழ் .
பனங்கிழங்கை அவித்து காய வைத்தால் கிடைப்பது புளுக்கொடியல்.
பனங்கிழங்கை அவிக்காமல் காய வைத்து எடுப்பது ஒடியல். இந்த ஒடியலை மாவாக திரித்து மச்சக் கூழ் அல்லது ஒடியல் கூழ் செய்வார்கள்.
இதன் செய்முறை இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

ஒடியல் கூழ் செய்முறை :


http://www.vavuniyanet.com/news/43139


தேவையானவை
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப



செய்முறை:
****
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.மிகவும் நல்லது.


ஒடியல் கூழ் குடித்தால் அரை மணியிலிருந்து ஒரு மணி வரைக்கும் நீர் அருந்தக் கூடாது என்பார்கள். அப்படிக் குடித்தால் வயிற்றுக் குழப்படியாகிவிடுமாம்.

ஈழத்தில் நமது வீடுகளில் ஒடியல் கூழ் செய்தால் அநேகமாக 15 அல்லது 20 பேருக்கு போதுமானதாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் உறவனர்கள், அயலில் இருக்கும் நண்பர்கள் என்று வீடு களை கட்டும்.
கூழ் விருந்து (பார்டி) அது! அது ஒரு கனாக் காலம்!!

கூழ் செய்வது ஒரு கோலகலமான நாளாக இருக்கும். பொதுவாக விருந்து என்பது ஏதேனும் விசேச தினத்திலோ அல்லது விசேசமான சடங்கிலோ தான் நடக்கும் . ஆனால் ஒடியல் கூழ் விருந்து என்பது
எந்த விசேசம் என்றில்லை...எந்த சடங்கு என்ற காரணம் இல்லாமல் உறவினர்களையும்ம் நண்பர்களையும் ஒன்று கூட வைக்கும் நாளாக்கி விடும்.


ஒடியல் கூழ் செய்வது எத்தனை சிரத்தையானதோ , எத்தனை சுவையானதோ அத்தனைக்கத்தனை அதை உட்கொள்ளும் முறையிலும் இருக்கும் . கூழ் அல்லது கஞ்சி அல்லது கள்ளு குடிக்கவென்றே நம்மூரில் “பிளா” என்ற பனை ஓலைக் கலயம் வேயப்படும். இந்த பிளாவில் குடித்தால் தான் கூழ் குடித்த திருப்தியே ஏற்படும். அதே போல் சிறுவர்களுக்கு பலா மரத்து இலையைக் கோலி கரண்டி மாதிரி செய்து தருவார்கள். கும்பா மாதிரியான கோப்பையில் கூழை ஊற்றி தருவார்கள். அந்த பலா இலைக் கரண்டியால் கூழை அள்ளி குடிப்போம்.

ஈழத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் இன்று வரை அழியாமல் தமிழர்கள் போகுமிடமெல்லாம் கூடவே போன உணவு வகைகளில் கூழ் மிகவும் பிரதானமான ஒன்று. இது எமது வாழ்கையின் சிறுபிராய நினைவுகளையும், எமது வாழ்கை முறையில் ஒன்று கூடலையும், பகிர்ந்து உண்ணுதலின் சிறப்பையும் தன்னுடைய அடையாளமாக வைத்திருக்கும் உணவு வகை என்றால் மிகையாகாது.

இதே போல் பலரோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் இன்னொரு வகை நிலாச்சோறு. அதை பிறிதொரு நாளில் பார்க்கலாம்.

நன்றி : http://www.vavuniyanet.com/news/43139 & விக்கி பீடியா (படங்கள், சமையல் குறிப்புகள்)

Thursday, December 10, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்


 சொதி

சொதி,/ ஆணம் (மட்டகளப்பு.பேச்சுத் தமிழ்) (பெயர்ச்சொல்)

ஈழத்து சமையலில் உணவுகளின் பெயர்கள் கூட சிலது வித்தியாசமானவை; எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது சன் தொலைக்காட்சியில் கிராமத்து விருந்து என்ற சமையல் நிகழ்ச்சியில் பரவை முனியம்மா அவர்கள் கிராமத்து சமையல் குறிப்புகள் தருவார். அப்போது ஒரு நாள் கோவக்காய் பால் கறி செய்து காட்டினார். அந்த குறிப்பினூடாக அவர் சொன்ன இன்னொரு விசயம் “கோவாக்காயில் மாத்திரமே பால்கறி செய்யக் கூடியதாக இருக்கும். கத்தரிகாய் போன்றவற்றில் பால்கறியே செய்ய முடியாது என்று சொன்னார்”. ஆனால் எங்கள் வீடுகளில் ஆட்டிறைச்சிக் குழம்புக்கு காம்பினேஷனே கத்தரிக்காய் பால் கறி தான் முதல் தேர்வாக இருந்து வருகிறது கால காலமாய்.

இது போல சொதியும் எமது சமையலில் மிக முக்கியமானது. தமிழ் நாட்டு மக்கள் சமையலில் நான் அதை கண்டதில்லை.ஆனால் இணையத்தில் தேடிய போது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண விருந்துகளில் சொதி பரிமாறப்படுவதாக படித்தேன்.

நெல்லை சீமை சொதியின் சமையல் செய்முறை எம்மவர்களின் சொதியுடன் கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. (http://9-west.blogspot.com/2008/08/blog-post_22.html)

மாப்பிள்ளை சொதி என்று இன்னொரு வகைச் சொதிக் குறிப்பும் பார்த்தேன். (http://www.eegai.com/blog/mappillai-sodhi-recipes-2.html)இந்த சொதியில் பாசிப்பருப்பு கூட போடுகிறார்கள் .

நம்மவர்கள் செய்யும் சொதி குழம்பு போல் கெட்டியாக இருக்காது. நீர்த்தன்மை அதிகமானதாக இருக்கும்.

ஈழத்தில் தமிழில் சொதி என்றும் சிங்கள பிரதேசங்களில் ஹொதி என்றும் சொல்லப்படுகிறது. சொதிக்கு “ஆணம் “ என்று இன்னொரு பெயரும் உண்டு.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி , உப்பு , சிட்டிகை மஞ்சள் பொடி எல்லாம் சேர்த்து கப்பி பாலில் கொதிக்க விட்டு மிளகாய் வெங்காயம் அவிந்ததும் இரண்டாம் பால் , கடைசியில் முதலாம் பால் விட்டு இறக்கி ஆறினதும் எலுமிச்சம் புளி பிழிந்து விட வேண்டும். இது தான் சாதரணமாக பால் சொதி செய்யும் முறை. வாசனைக்கு கடுகு, கறிவேப்பிலை தாளித்தும் போடுவார்கள்.

அல்லது கொஞ்சம் புளி+சிவப்பு வெங்காயம்+உப்புக்கலந்து பிசைந்து கொஞ்சம் வெந்தயம்+கறிவேப்பிலை போட்டு தேவைக்கு அளவாக தண்ணீர் ஊற்றிக்கொதிக்க விட வேண்டும். நன்றாகக்கொதித்ததும் ' அடுப்புச்சூட்டை குறைத்துவிட்டு அல்லது நிற்பாட்டிப்போட்டு 'பால்விட்டு" கரண்டியால் 'ஆத்திவிட்டுவிட வேண்டும்.

பிறகு...'தாளிதம்' சேர்த்தால்...சொதி ரெடி!

 
அதே சொதியில் கப்பி பாலில் மீன் தலை , மீன் துண்டம் போட்டால் மீன் சொதி, கருவாடு போட்டால் கருவாட்டு சொதி, உருளைக் கிழங்கு போட்டால் உருளைக்கிழங்கு சொதியாகிவிடும் .

எங்கள் ஊரில் முரல் மீன் சொதி மிகப் பிரசித்தி பெற்றது.  உடன் முரல் மீன் போட்டு செய்த சொதியுடன் அரிசி மா பிட்டும் சாப்பிட்டால் அப்படி ஒரு சுவை.

மாதகல் முரல் சொதியும் புழுங்கல் அரிசி சோறும் 
அராலிக்கடல் பாலைமீன் பாற்சொதி வெள்ளைப்பச்சை அரிசியில் சமைத்த சோறு  பொன்னாலைக்கடலில் பின் நேரத்து சினாது மீன் குழம்பு சொதி இடியப்பம் என்று சொதியும் அதன் காம்பினேஷனும் எங்கள் ஊரின் சமையல் சுவைக்கு பெயர் போனவை.  சொதியின் புளிப்பு தன்மையை அதிகப்படுத்த தக்காளி, மாங்காய் துண்டங்களும் சேர்ப்பதுண்டு.


இதை இடியப்பம், புட்டு, சோறு போன்ற உணவு வகைக்கு விட்டு பிசைந்து சாப்பிடுவோம். எங்கள் சமையலின் கறி வகைகள் குழம்பாக இருந்தாலும் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். அந்த கெட்டியான கறிகளுடன் இடியப்பம், புட்டு போன்றவை சாப்பிட்டால் தொண்டையை அடைக்கும்.. அதனால் சொதி நிறைய விட்டு கொஞ்சம் நீர்பதமாக பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும். குழந்தைகள் உறைப்பான காரமான உணவு வகை சாப்பிட மாட்டார்கள்..அவர்களுக்கும், சரியாக பல் முளைக்காத குழந்தைகளுக்கும் , பல் விழுந்த தாத்த பாட்டிக்கும் உணவை மென்மையாக்கி பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும்.

அது மட்டுமல்ல காரமான கறிகளினால் தொண்டையிலும் குடலிலும் ஏற்படவல்ல எரிவிலிருந்தும் , புண்ணிலிருந்தும் தடுக்கும் ஒரு சமநிலை உணவாக சொதியை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரண வாக்கியங்கள்:
1) இரவைக்கு சொதியும் இடியப்பமும் தான் சாப்பாடு.
(இரவு உணவாக இன்று இடியப்பமும் சொதியும் இருக்கும்)

2) புட்டு தொண்டைக்குள் அடைக்குது. கொஞ்ச சொதி இருந்தால் நல்லா இருக்கும்.

3) கறி ஒண்டுமில்லாட்டில் ரெண்டு உருளைக் கிழங்கை சீவி பொரிச்சு எடுத்து சொதியோட சாப்பிடலாம்.
( சாதத்துக்கு குழம்பு எதுவும் இல்லையென்றால் உருளைக்கிழங்கு வறுவலும் சொதியும் சேர்த்து சாப்பிடலாம்)