Friday, March 20, 2015

ஒரு தாலி அறுப்பு !



சுன்னம் இடிக்கத் தொடங்கும் போதே சுற்றி இருக்கும் உறவுகளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போய்விடும். இனி என்ன இருக்கு என்ற ஒரு வெறுமை பரவத் தொடங்கும்..
மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு இனம் புரியாத விரும்பத்தகாத குளிர்ந்த பனிக்கட்டி ஒன்று உருண்டு பிரண்டு நெஞ்சுக்குள் அடைத்து உயிரோடிருக்கும் போதே ஜீவனற்றுப் போன விறைப்பான குளிர் உடம்பு முழுதும் பரவி மொய்த்துக் கொள்ளும்...
அப்படியொரு விரும்பி ஏற்றுக் கொள்ளாமலேயே எங்கள் வீட்டிலும்....நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது அன்று...
அப்பாவின் மூடிய கண்களின் மேல் தம்பிமார் மூவரும் இடித்த சுன்னம் மஞ்சளாக குழைத்து அவர்கள் கையாலேயே அப்பி விடும் அந்த வினாடி தான் அத்தனை நேரமும் அப்பா நித்திரை கொள்வது போலிருந்த மலைப்பு போய் அப்பா உயிரற்ற சடலமாகிவிட்டார் என்ற உண்மையை திணித்து கொள்ளும் பலவந்தம் , சொருகின வாளாக இதயச் சுவரிலும் அறிவுப் புதரிலும் இறங்கத் தொடங்கியது... அப்போது இயலாமையுடன் உடம்பும் மனமும் நிதர்சனத்தை ஏற்க மனமில்ல்லாமல் துடிக்கும் வலி இருக்கிறதே......வார்த்தைகளால் வர்ணிக்கவியலாது...
ஈமைக் கிரியைகள் எல்லாம் முடிந்த பின் எல்லாரும் அப்பாவைச் சுற்றி மாரடிக்கத் தொடங்கினார்கள்...வீல் என்று நானும் தம்பிமாரும் ஓலமிட்டோம்... அழுகையா அலறலா என்று இனம் புரியாத ஒலியில் உச்சச்தாயியில் அம்மா நெஞ்சு பிளக்கக் கூடாதா என்ற வெறியில் தன் கையால் தானே படார் படார் என்று குத்தி குழறினார்.. அப்பாவை கிடத்தியிருந்த பெட்டியைச் சுற்றி ஆஜானுபாகுவான ஆண்கள் பெட்டி மூடியுடன் வந்து ஆயத்தமாக நின்றார்கள்... உரிமைக்கார ஆண்கள் விரக்தியான பெருமூச்சுடன் பாடை தூக்க ஆயத்தமாக சால்வையை நாரியில் வரிந்து கட்டத் தொடங்கும் போதே , வயசான சில பெண்கள் அம்மாவை நோக்கி வந்தார்கள்...
அவர்கள் அம்மாவை பார்த்து அழுத படி மாரடிக்கிறார்கள்..
பெரியம்மாவுக்கு தாங்க முடியவில்லை..தாத்தா இறந்த பின் அம்மா உட்பட அத்தனை சகோதரங்களையும் தன் பிள்ளை போல் வளர்த்தது பெரியம்மா தான்...அம்மாவுக்கு அப்பாவை தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணி வைத்தார். அதை எப்பவும் பெருமையாக சொல்லிக் கொள்வார்... அப்படி தேடி பிடித்து கொடுத்த வாழ்கை இன்று பாலை வனமாகிப் போக தன் கண் முன்னாலேயே தன் தங்கைக்கு தாலி அறுக்கப் போகிறார்களே என்ற வேதனை , வலி, இயலாமை என்று எல்லாம் ஒன்றாகி அழுகை பெருக்கெடுத்து ஓலமாக ஒப்பாரியாக எதிரொலிக்கிரது.... பெரியம்மாவிடமிருந்து...!
இந்தக் கொடுமையை எல்லாம் பார்க்கவா நான் இன்னும் இருக்கிறன் என்று பெரியம்மாவின் அழுகை எல்லாருடைய மனதையும் அறுத்துப் போடுகிறது.
அம்மா தன் தாலியை கையால் இறுகப் பற்றிக் கொண்டு அழுகிறார். எல்லாரையும் பார்த்து கெஞ்சுகிறார்.. அர்த்தமில்லாமல் தன் தாலியை தன்னிடமிருந்து பறிக்க வேண்டாமெண்டு பிறத்தியாரிடம் மண்டாடுகிறார். அந்த கிழவிகள் அம்மாவின் கையை பலவந்தமாக இழுத்து அம்மாவின் கையிலிருந்த தாலியை கழற்ற முயற்சிக்கிறார்கள்... என்னால் பொறுக்க முடியவில்லை...அம்மாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற் கூட்டத்தில் முண்டியடிக்கிறேன்.. என்னை யாரோ பலமாக இழுத்து அந்தாலப் பக்கமாய் தள்ளிவிடுகின்றனர்... குமர் பிள்ளை யாம், அந்த இடத்தில் நிற்கக் கூடாதாம்...
சின்ன தம்பி ஓடி வந்து “ விடுங்கோ அம்மாவை விடுங்கோ..அவவை விடுங்கோ” என்று ஆவேசமாக கத்துகிறார்..
மூத்தவன் ”அம்மாவுக்கு விருப்பமில்லையெண்டால் ஏன் நீங்கள் வில்லங்கத்துக்கு கழட்டுறீங்கள்” எண்டு சீறிக் கத்தினான்...
நடுவிலான் தேம்பி தேம்பி அழுகிறான்.. என்னிடம் “ அப்பாவே அம்மாவுக்கு நடக்கும் இந்த கொடுமையை- கண்ராவியை விரும்ப மாட்டார்” என்று சொல்கிறான்...
அது எங்களுக்குத் தான் தெரியும். அப்பாவுடன் வாழ்ந்த நாட்களில் இன்றைய இந்தப் பொழுதைப் போன்ற கொடுமையில் ஒரு சத வீதம் தன்னும் அப்பா அம்மாவுக்கு கொடுத்ததில்லை.. அப்பா அம்மாவுக்கு கொடுத்த அவர்களுக்கிடையேயான தாம்பத்தியத்தின் அடையாளத்தை பலவந்தமாக அறுக்கும் உரிமையை ஆரோ ஊர் பேர் தெரியாத அன்னியர்களுக்கு யார் தந்தது? என்ற ஆவேசம் எனக்குள் பீறிடுகிறது...
அம்மா அழ அழ அவரின் தாலி அறுக்கப்பட்டது. தலையில் வைச்சிருந்த பூவை பறித்து கசக்கி நாலு பக்கமும் எறிந்தார்கள். குங்குமத்தை இரக்கமேயில்லாமல் அழித்தார்கள்... அம்மா தன் முகத்தை கைகளால் அறைந்து அறைந்து அரற்றுகிறார். பெரியம்மா அவரைக் கட்டிக் கொண்டு அழுகிறார்...
பறை உச்ச ஸ்தாயியில் முழங்கத் தொடங்க... நாங்கள் எல்லாரும் கதறக் கதற அப்பாவின் பெட்டி மூடப்பட்டு பாடையில் தூக்கி வைத்துவிட்டார்கள்... அம்மா மிகவும் களைச்சுப் போய் கீழே சாய்ந்துவிட்டார்... அம்மாவை திரும்பி திரும்பி பாத்தபடி கண்ணீர் வழிய கொள்ளிக்குடமும் நெருப்புச் சட்டியுமாய் தம்பிமார் மூன்று பேரும் தளர்ந்து போய் அப்பாவுக்கு பின்னால் நடந்தார்கள்...
அம்மாவின் கழுத்திலிருந்த தாலியை பத்திரமாக அந்தக் கிழவிகள் என்னிடம் தந்தார்கள்..
”இந்தா ராசாத்தி இதை கொண்டு போய் உள்ள வை.. ”
அந்த தாலியை வெறித்துப் பார்க்கிறேன்.
எத்தினை நகை நட்டு இருந்தும் என்ன ....அப்பா கட்டின ஒற்றை தாலி கழுத்திலிருந்து அறுக்கப்பட்ட பின் அம்மாவின் அடையாளத்தையே மாற்றிவிட்டது..
அம்மா இனி மூளி;விதவை; கைம் பெண்; முழிவியலத்துக்குதவாதவர்; நல்ல காரியங்கள் நடக்கும் போது பின்னால் நிற்க வேண்டியவர்; இதையெல்லாம் இந்த வினாடி அந்தக் கிழவிகள் அறுத்த என்னுடைய அப்பா என் அம்மாவுக்கு கட்டின தாலி சொல்லுகிறது.
அம்மாவுக்கு நெஞ்சிலும் மாரிலும் சுமந்த அப்பாவின் உறவு இனி இல்லை என்று சொல்லாமல் சொல்லியது. அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட சந்தோசமும், துயரமும் , உணர்வுகளும், உணர்ச்சிகளும் இனி எப்போதுமே கிடைக்காது என்பதை பறை சாற்றியது.
அம்மாவுக்கென்று இனி எதுவுமே அப்பாவால் இல்லை என்று தீர்ப்பு சொல்லியது..
இனி அது வெறும் விலையுயர்ந்த் உலோகம் மட்டும் தான். அதை உருக்கி ரெண்டு மூண்டு நகைகள் செய்யலாம்..ஆனால் அப்பா உயிருடன் இருந்த போது உயிர்ப்பாயிருந்த எந்தவொரு நல்லவிசயங்களையும் அந்த நகைகள் அம்மாவுக்கு திரும்ப தரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது. என்ர அம்மா அந்தளவு துடித்து சித்ரவதைப் பட்டு நான் பார்த்ததில்லை... உனக்கு உன்னுடைய புருசன் இனி இல்லை என்ற கொடூரமான உண்மையை தான் அம்மாவுக்கு மிச்சமாக விட்டு வைத்திருக்கிறது.... !
இப்பிடித் தான் எங்கட வீட்டில் ஒரு தாலி அறுப்பு நடந்தது...
ஆனால் இங்க என்னடாவெண்டால்.......விழா எடுத்து , மைக் செட் போட்டு தாலி அறுக்கினமாமே.....

Monday, March 9, 2015

 நத்தைக்கூடுகள் சுமந்த காளிகள்... ! 




 ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 வருகிறது..!
போகிறது!! பெண்களுக்கான ஆர்ப்பரிப்புகளும், அவமானப்படுத்தலும். வாழ்த்துகளும் வசவுகளுமாக அந்த தினம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தாலும் தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு உன்னதமான தேவதையாகவும், சக்கரவர்த்தினியாகவும் நினைத்து பூரிப்படைய நினைக்கும் நாளாக பார்க்கிறாள்..மார்ச் 8 என்பது மகளிர்தினம் என்ற தகவல் தெரிந்தவளாயிருந்தால்....!

ஆனால் அவளாலேயே உணரப்படாத விசயம் இந்த நாள் அவளுடைய சமூகத்தில் அவளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கப்பட வேண்டிய நாள் என்பதை!!

தீபாவளி பண்டிகை, நத்தார், காதலர் தினம் போல் இந்த நாளும் கொண்டாட்டத்துக்குரிய நாளாக கருதும் எவரும் ஒரு வினாடி நின்று நிதானித்து பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்... மூளையின் செல்களை கசக்கி , நினைவுகளின் பக்கங்களை மேலே எடுத்து நடப்புகளின் வரிகளை கண் முன்னே கொண்டு வாருங்கள்.... அப்போது உங்கள் முன் விரியும் மிக அகண்ட கனன்ற நெருப்புக் குழிகளுக்குள்....உங்கள் சொந்தங்களில், உங்கள் நட்புகளில்...உங்கள் அயலில்...உங்கள் ஊரில்..உங்கள் நாட்டில்...உங்கள் அயல் நாட்டில்... உலகில்... எங்கெங்கெல்லாம் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும், கௌரவக் கொலைகளுமாய்...காட்சிகள்... 



எப்போதுமே இசைப்பிரியாவின் உயிரற்ற உடல் உலுக்கிவிட்ட உணர்வுகளை தேற்றமுடியுமா??

எப்போதுமே விபூசிக்காவின் கதறிய முகம் கண்ணைவிட்டு மறையுமா??

எப்போதுமே பதில் கிடைக்காத, கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்  உலகின் மிக நீண்ட கால (16 ஆண்டுகளாக ) உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய பெண், யாருக்காக போராடினாரோ அதே மக்களாலேயே தேர்தலில் படுதோல்வியடைந்த  பெண் இரோம் ஷர்மிளாவையும் மறைக்க முடியுமா??

36 வருடங்களாக வன்புணர்வின் போது கொடூரமாக தாக்கப்பட்டு . காயப்பட்டு கோமாவில் கிடந்து மடிந்து போன  அருணா ஷண்பக், மேலும் கூட்டு வன்புணர்வுக்குட்பட்ட ஷக்தி மில், மற்றும் ஜோதி சிங் மட்டுமல்ல கல்பனா, உமா மகேஸ்வரி, வித்தியா , கிருசாந்தி உட்பட பல பாலகிகள் காலம் உள்ளவரை இந்த சமூகத்தின் மறைக்கவியலாத இரணங்களாக வடுக்களாகிப் போன அடையாளங்களாக இருக்கப் போகிறார்கள் என்ற வலிகளுடன் தான் ஒவ்வொரு மார்ச் 8ம் திகதியையும் முகமன் கூறுகிறோம் .

நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவோ அல்லது எங்களை மற்றவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவோ இந்த நாள் வரையறுக்கப்படவில்லை. இந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான அடையாள நாள் அவ்வளவே!

சமைக்கத் தெரியாத அல்லது ஒரே உணவை தினமும் சமைத்து தரும் மனைவியை கொண்டவர்களும், தாய்க்கும் மனைவிக்குமிடையில் மாட்டிக் கொண்டு முழி பிதுங்குபவர்களும்,காதலில் ஏமாற்றப்பட்டவர்களும் அல்லது வெறுமனே பெண்களை கிண்டல் பண்ணுவதில் சந்தோஷிக்கும் ஆண்களுக்கும் இந்த நாள் கேலிக்குரியவொன்று தான். பெண்களின் தகுதி தெரியாதவர்கள் எவருக்குமே இது கேலிக்குரிய தினம் தான்,

 ஒவ்வொரு இசைப்பிரியாவும், விபூஷிக்காவும், கிருசாந்தியும், ஜோதி சிங்கும் , ஷக்தி மில்லும், அருணா ஷண்பக்கும், இரோம் ஷர்மிளாவும் போல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மனைவி, அம்மா , மகள், சகோதரி என்ற பெயரில் வெறும் சமையல்காரியாக, சலவைக்காரியாக, பிள்ளை பெறும் இயந்திரங்களாக , உழைத்துக் கொட்டும் ஏ.டி.எம் மெஷின்களான பெண்களும் இந்த   மார்ச் 8ம் திகதியை அடையாளப்படுத்துபவர்கள் ...!

இது யாதுமாகி அனைத்துமாகிய காளி நீ என்று போற்றப்பட்டுக் கொண்டே புரட்டி எடுக்கப்படும் சமூகத்தின் ஒரு பிரிவின் தேவையை உணர்த்தி அதற்கெதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாள நாள் மட்டுமே!!

ஐநா கணக்கெடுப்பு அது இது என்று ஆதாரங்கள் திரட்டி, கௌரவக் கொலைகள் முதல், வன்புணர்வு வரை சமூக ரீதியாகவும், அரசியல், இன, மத வெறி மூலமாகவும், குடும்ப ரீதியாகவும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைப் பற்றி எழுதுவதும் பாடுவதுமாய்...........பொதுக் கூட்டங்களுக்கு போவது, பெண்களுக்கான போராட்டங்களில் பதாகை தூக்குவது, குரல் கொடுப்பது, நிதி கொடுப்பது, நின்று , நடந்து ஆதரவு கொடுப்பது ............எல்லாம் தொடர்கிறது....இன்றைக்கு நாங்கள் விதைகளாக விதைத்தால் அது என்றைக்காவது முளைத்து வேர், கிளை படர உறுதியாகுமென்ற அற்ப நம்பிக்கையில்... ஒவ்வொரு அங்குலமாக பயணம் ஊருகிறது..!! ஊர்ந்து கொண்டிருக்கும் அந்த நத்தைகளில் ஒரு நத்தையாக தலைகுனிந்து ஊர்ந்து கொண்டிருக்கிறேனே தவிர என்னால் வேறு என்ன செய்ய முடிகிறது??

இந்த போராட்டங்களில் உறுதி எடுக்கப்பட்ட கணத்தின் உடல் வலிமையும், சூழ் நிலையின் சுதந்திர விரிவும் படிப்படியாக குறைந்து போய்க் கொண்டே இருக்கிறது...அடுத்த வருடம், அதற்கடுத்த வருடம்...இதோ இந்த வருடமும் வந்துவிட்டது... வருடா வருடம் வெவ்வேறு விதமான சுமைகளும், நோய்களும்,இடர்களும்,தடைகளும் நத்தையின் முதுகு கூட்டை பெரிதாக்கி பயணத்தை மட்டுப்படுத்திக் கொண்டே போகிறது...ஒரு புள்ளியில் நிலைகுலைந்து நத்தை வீழ்ந்துவிடும் போதில்....அதன் கனவும் இலட்சியமும் கூட சமாதியாகப் போய்விடும்.

ம்ம்ஹூம்....எந்த மாற்றத்தையும் சாதிக்க முடியவில்லை; எந்த விபத்தையும் ,எந்த கொடுமையையும் நிறுத்த இயலவில்லை.. எந்த பெண்ணையும் காப்பாற்ற முடியவில்லை... உதவ முடியவில்லை... எந்தப் பெண்ணுக்காகவும் கொடுத்த குரல் வெளியில் கேட்கப்படாமலேயே அமுங்கிப் போய்விட்டது...அல்லது செவிமடுக்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.. என்பதை வேதனையுடன் நீ என்ன செய்து கிழித்தாய் என்ற பாரிய வினாவின் முன் தலைகுனிந்து பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது .

நத்தைகளுக்கு மத்தியில் விசம் கக்கும் நச்சுப் பாம்புகளுக்கும் தெரியாமல் இடம் கொடுத்துவிட்டோமல்லவா ?? பாம்புகளை நம்பி பின்னால் ஊரும் நத்தைகளும் ஒரு முனைப்பில் பாம்புகளாக மாறும் என்ற எச்சரிக்கையுடன் இனியாவது இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மட்டும் கற்றுக் பெண்கள் கொள்ள வேண்டும் !! இந்த நத்தையால் எதையும் மாற்றி அமைக்க முடியவில்லை !!
இந்த நாளுக்கான வாழ்த்து சொல்லவும் வாழ்த்தைப் பெறவும் தகுதியில்லாத குற்ற உணர்வு உள்ளிருந்து அழுத்துகிறது.

Sunday, July 27, 2014

அண்ணா..! வைரவபிள்ளை சண்முகராஜா சிவக்குமாரன்..!


நான் ஒரு கதை சொல்லி. பொய்யோ சோடனையோ கலக்காத , எந்தவொரு பிரபல நாவலாசிரியனும், எப்படியானவொரு திறமையான திரைப்பட இயக்குனரும் கூட நம்பவியலாத பல உண்மைக் கதைகளை மனதுக்குள் புதைத்து புதைத்து சமாதி கட்டி வைத்திருக்கும் ஒரு கதை சொல்லி நான்!

என்னவொரு துர்பாக்கியம்…. ஒவ்வொருவரின் மரணநிகழ்வுகளில் மட்டுமே கதை சொல்லும் சந்தர்ப்பம் கிட்டிய துரதிஷ்டசாலியாக இருக்கும் கதை சொல்லி நான்!

இழப்புகளுடனும், பிரிவுகளுடனும் புலம் பெயர்ந்த ஒரு இனத்தின் அடையாளங்களையும், சாபக்கேடுகளையும் சுமந்து கொண்டு , உறவுகளின் மரணநிகழ்வுகளில் கூட  கடைசியாக ஒரு தடவையேனும் அவர்கள் முகங்களைப் பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காத துர்பாக்கியவதியான  ஒரு கதை சொல்லி இன்று இன்னொரு உயிருக்குயிரான என் உறவின் இழப்பின் கதை ஒன்றை சொல்லப் போகிறேன்….!

வைரவபிள்ளை சண்முகராஜா சிவகுமாரன் என்று தலைமுறை பெயருடன் தன்னுடைய முழுப்பெயரையும்  சேர்த்து சொல்வதில் என் அண்ணாவுக்கு தான்  எத்தனை பெருமை!!இன்றைக்கு அந்த பெயரும் , என் அண்ணாவும்  காலாவதியாகிவிட்ட சோகத்தை நான் யாரிடம் சொல்லி மாள்வது என்று தான் எனக்கு புரியவில்லை...

என்னுடைய பெரியம்மாவின் மூத்த மகன்; எங்கள் தலை முறையின் தலைமகன். வயதில் எங்கள் எல்லோருக்கும் பெரியவராயும், குணத்தில் எங்களோடு குழந்தையாயும் ,தாயாயும், தந்தையாயும், ஆசானாயும் அரவணைத்த என் அண்ணா!!  இன்றைக்கு எல்லாவற்றையும் கடந்து உங்கள் எல்லார் முன்னாலும் சகலதும் அணைந்து துயின்று கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் என்னால் அதை மட்டும் இன்னமும் நம்பமுடியவில்லை…!

ஒரு கணித மேதை….! சிறந்த படிப்பாளி..! படிப்பாலும் கல்வித் தகமைகளாலும் முதல்வகுப்பில் தேறிய ஒரு மேதாவி… ! உலகின் அத்தனை மூலைகளிலும் தன்னுடைய மாணவர்களைக் கொண்ட  ஒரு ஆசான்..! என் அண்ணா வைரவபிள்ளை சண்முகராஜா சிவகுமாரன் !  வாழ்கையின் சூட்சுமங்களை புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்வதில் அக்கறையில்லாமல், அல்லது புரிந்து கொள்ளத் தெரியாமலேயே வாழ்கையை வாழ்ந்து முடித்துவிட்ட  ஒரு ஆன்மா இருக்குமானால்  அது என் அண்ணாவாகத் தான் இருக்கும்..!!  கணிதத்தின் கோணங்களையும் , சமன்பாடுகளையும்  இலகுவாக நிறுவத் தெரிந்த என் அண்ணா வாழ்கையின் கோணல்களையும், சமநிலை வேறுபாடுகளையும் ஈடுகட்ட முடியாமலேலே இறந்து போய்விட்டார் என்பது தான் சோகம்.

என்னுடைய அம்மாவுக்கு  வருவோர் போவோரிடமெல்லாம் குடும்பப்  பெருமை பேசுவது என்றால் மிகவும் விருப்பம். அதுவும் அண்ணாவின் பெருமை பேசுவது என்றால் அவருக்கு அலுக்கவே அலுக்காது… “என்ர மகன் math ல second manனா க வந்தவர் கட்டுப்பத்தை கம்பஸில, அவரைப் போல ஒரு கெட்டிக்காரனை இங்கன யாராலேயும் காண முடியுமே..என்று தொடங்கி’  “நாலு வயசிலேயே சூரியனுக்கு வேசம் போட்டுக் கொண்டு மேடையில வந்து நிண்டு “என் பெயர் சூரியன்”  என்று பாட்டுப் பாடேக்கில பாக்க வேணுமே..  ஆளிண்ட நிறமும் , மஞ்சள் கலர் உடுப்பும்...உண்மையிலேயே சூரியன் மாதிரி தான் இருப்பார்.. என்ன சொன்னால் என்ன அவன் சூரியன் தான் எங்களுக்கு ” என்று  தொடர்ந்து சொல்லி முடிப்பதற்குள் கேட்டுக் கொண்டிருப்பவர் களைத்துப் போய்விடுவார்.  அந்தளவுக்கு  ஆசை ஆசையாக அண்ணாவைப் பற்றி யாருடனும் அலுக்காமல் சளைக்காமல் கதைக்குமளவுக்கு பல விசயங்கள் அம்மாவிடம் அண்ணாவைப் பற்றியது இருக்கிறது.


இந்த வினாடி வரை என்ர அம்மா அண்ணாவை தனது அக்காவின் மகன் என்று சொன்னதேயில்லை.. என்ர மகன் என்ற அடை மொழியைத் தவிர அம்மா இன்னொரு வார்த்தையில் அவரை சொன்னதில்லை...

ஆனால் அண்ணா! அப்படிப்பட்ட உங்கட அன்ராவுக்கு இன்னும் உங்கள் மரணச் செய்தியை நாங்கள் சொல்லவில்லை...! இந்த இடியை இறக்கி அடஹி எதிர்கொள்ளும் நிலையில் உங்கள் அன்ரா இல்லை அண்ணா!!  இனியும் எப்படி சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. சொன்னால் நிலமை எப்படியிருக்குமென்று நினைச்சுப் பார்க்க முடியவில்லை... !

சிவகுமாரன் ! பெயருக்கேற்ற மாதிரியே அழகான, கம்பீரமான, மாம்பழ நிறத்தில் ஆறடிக்கு குறையாத உய்ரமான, நெஞ்சு நிமிர்த்திய நடையுமாய்...என் அண்ணா ஆணழகன் தான்!! யாரைப் பார்த்தாலும் தோளில் கை போட்டு அணைத்து நடந்து வரும் வாஞ்சையும், பெரியவர்களையோ பெண்களையோ பார்த்தால் தலையைச் சாய்க்கும் பணிவும் , மரியாதையும்...அடடா... ஒரு தேவ தூதனுக்கேயுரிய சகல இலட்சணங்களும் பொருந்திய நல்லதொரு மனிதன் தான் என் அண்ணா! ஒரு சில வாழ்கைச் சந்தர்ப்பங்கள் அத்தனை இலட்சணங்களையும் கழுவித் துடைத்து கவிழ்த்துப் போட, அந்த வாழ்கையின் அடிவார சகடுகளையும் துளாவி வந்த மனிதனும் அவர் தான்.

என்னுடைய அண்ணாவின் அழகை இரசிக்கவும் அவருடைய கடைக் கண் பார்வைக்காகவும் கணிதப் பாடத்துக்கு சம்மந்தமேயிராத மாணவிகள் எத்தனை பேர் அண்ணா படிப்பித்த கணிதப் பாட வகுப்புகளின் பின்னிருக்கைகளை நிரப்பியிருந்திருக்கின்றனர் என்பதற்கான உயிருள்ள சாட்சிகள் இன்றைக்கு இந்தக் கூட்டத்திலேயே இருக்கக் கூடும்.

யாழ் பரியோவான் கல்லூரியின் மாணவராக இருந்து , கட்டுபத்தை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புக்காக தேர்வாகி அங்கு கணிதத்தில் இலங்கையின் 2 சிறந்த மாணவராக சித்திபெற்று யாழ் நகரினதும், வட மாகாணத்தின் நகர்களில் இருந்த பொண்ட் டியூட்டரி உட்பட பெரும்பாலானா அத்தனை கல்வி நிலையங்களிலும், யாழ்.பரியோவான் கல்லூரி, மஹா ஜன கல்லூரி போன்ற பாடசலைகளில் பகுதி நேரமாயும் பிரயோக, தூய கணிதப் பாடங்களையும், பௌதீகவியலையும் கற்பித்த யாழ் நகரின் புகழ்பெற்ற ஆசிரியர் புலம் பெய்ர்ந்தும் அதே கணிதத்தின் அடையாளமாய் வாழ்ந்து முடித்திருக்கிறார் என் அண்ணா!

ஆசிரியத் தொழில் என்பது அண்ணா தான் மாணவனாக இருந்த 17ம் வயதிலேயே தொடங்கிய ஒன்று. பாடசாலை விட்டு படை படையாக வீட்டு மதிலில் சைக்கிளோடு வரிசையாக அண்ணாவுடன் கூடப் படித்த மாணவர்கள் நிற்பதும் , ஒவ்வொருவராக அண்ணா அவர்களின் வீட்டுப் பாடங்களையோ அல்லது projectsஐயோ செய்ய உதவி செய்து ஒவ்வொருத்தராக அனுப்பி வைப்பதும் எங்கள் அயலில் எல்லோரும் தினமும் பார்த்த அன்றாடக் காட்சி..!!

70களிலும் 80 களிலும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாய் வாரா வாரம் மெயில் ட்ரெயினில் வந்து போய் படிப்பித்த ஒரு ஆசான் என்றால் அது என் அண்ணாவாகத் தான் இருக்கும்.

எல்லாரும் பொழுது போக்க கதைப் புத்தகங்களை படித்திருப்பீர்கள். ஓவியங்கள் வரைந்திருப்பீர்கள். அல்லது கவிதையோ கதையோ எழுத முனைந்திருப்பீர்கள்...ஆனால் என் அண்ணா தன் பொழுதுகளைப் போக்க கதைப் புத்தகங்களைப் போல் கணிதப் புத்தகங்களைத் தான் வாசித்துக் கொண்டிருந்து பார்த்திருக்கிறேன். அவருடைய ஓவியமெல்லாம் கேத்திரகணிதத்தின் முக்கோணங்களும், பைதகரசுமாய் தான் இருந்திருக்கிறது. அவரது எழுத்து முயற்சியெல்லாம் கணித மேதைகள் நிறுவிய சமன்பாடுகளை மறுதலித்தோ அல்லது பொருந்தாத சமன்பாடுகளை பொருந்தி வரும்படிக்கான சமன்பாட்டு நிறுவல்களையோ எழுதி எழுதி பார்க்கும் வகையாகத் தான் இருந்திருக்கிறது. சில கணிதச்சமன்பாடுகளை முரண்படுத்தி நிறுவிக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆசிரியர்களே அந்த சமன்பட்டின் நிறுவல்களின் சூட்சுமம் புரியாமல் வியந்திருந்ததை கண் கூடாக பார்த்தவள் நான்.

என் அண்ணா இழந்தது நிறைய. பறி கொடுத்தது பல வகை. மற்ந்ததும் மறைத்ததும் கூட எக்கச்சக்கம். ஆனால் கடைசி வினாடி வரை அவருடைய நிழலுக்கடுத்ததாய் அவருடன் பிரியாமல் கூடவே இருந்தது இந்த கற்பித்தல் என்ற வல்லமை தான்.

என் அண்ணாவை நான் நேரில் பார்த்து சரியாக 30 வருடம். இனி அதற்கான சந்தர்ப்பத்தை தராமல் போய்விட்டார். கடைசியாக அண்ணா ஜேர்மனி போகும் போது எங்கள் வீட்டுக்குவந்ததும் அம்மம்மாவின் படத்தைக் கும்பிட்டுட்டு எங்கள் எல்லோரையும் கொஞ்சி அணைத்துவிட்டு விம்மிக் கொண்டே போனதும் இன்றைக்கும் கண்ணுக்குள் நிற்கிறது.. ஆனால் இன்று கண்காணாத இடத்துக்கு போய்விட்டீங்கள்...


உங்கள் நெஞ்சில் குத்திய சொந்தங்களையும் முதுகில் குத்திய நட்புகளையும் நான் இதுவரை என் உறவுகளாக அல்லது நண்பர்களாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை; அவர்களை பகிஷ்கரிக்கும் வஞ்சத்தை எனக்குள் வளர்த்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களால் பட்ட காயங்களையும் சோகங்களையும் மறந்து அவர்களுடன் வழமை போல் அதே உறவு சொல்லி அதே நட்பு வளர்த்து வாழ்ந்தவர். அன்பைக் காட்டி உங்களை ஏமாற்றியவர்களிடம் ஏமாந்தது தெரிந்தே அவர்களை புறக்கணிக்காமல் அரவணைத்து அதைவிட அதிகமாக அன்பை செலுத்தி அவர்களை தலைகுனிஒய வைத்தவர் நீங்கள்....! இன்று அவர்களில் பலர் உங்களிடம் மானசீகமாக பாவமன்னிப்புக் கேட்க இங்கு வந்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் உங்கள் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.. ஆனால் உங்கள் முகத்தைக் கடைசியாகக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை எங்களுக்கு. உங்களால் தானே அண்ணா நான் இன்று இந்த நிலையில் நல்ல வாழ்கை வாழ்கிறேன். அப்பா இல்லாத வாழ்கையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்த எனக்கு நீங்கள் கை கொடுக்காமல் இருந்திருந்தால் நானும் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் முடங்கித் தானே கிடந்து கொண்டிருந்திருப்பேன்??? என்னுடைய பள்ளிக் காலங்களிலும், சரி , அதன் பின்னாலும் சரி என் ஒவ்வொரு வழியிலும் பாதை வெட்டிக் கொடுத்த சிற்பி நீங்கள் தானே அண்ணா! என்ர சாந்தி...ஆச்சி மாணிக்கம் என்று எனக்கு தானே அப்படி அன்பை பொழிந்திருக்கிறீங்கள்?? உங்கட அன்ராவின் பிறந்தநாளுக்கு வரும் தை மாதம் அங்க வருவன் என்று தானே சொன்னீங்கள்??? மாசக் கடைசில உனக்கு போன் எடுக்கிறன் என்று ஒரு கிழ்மைக்கு முன் தானே சொன்னீங்கள்:?? இண்டைக்கு எப்பிடி மனம் வந்தது எங்களுக்கு உங்கள் முகத்தை காட்டாமல் போக??

இறப்புகளுக்கு மட்டும் துயர் பகிரும் விதி...உறவுகளின் முகங்களை கடைசியாக கூட பார்க்க முடியாத அவலம்...இந்த வாழ்கையில் அப்படி என்ன இனி நான் சாதிக்கப் போகிறேன் என்று வெறுப்பாக இருக்கிறது அண்ணா!

பெரிய மாமா, பெரிய மாமி, பெரியப்பா என்று ஒவ்வொருவருடைய மரணத்தின் போதும் ஐயோ கடைசியாக அவர்கள் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்று தான் குமுறிப் போனேன். ஆனால் உங்கள் மறைவில் கடைசியாக உங்கள் முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற வேதனையை விட , உங்களை பறி கொடுத்துவிட்டு என் பெரியம்மா என்ன மாதிரி துடிக்கிறாவோ என்ற நினைப்பு தான் நெஞ்சில் கத்தி சொருகி இழுத்தது போல் வலிக்கிறது அண்ணா!! எனக்கு என்னவோ என் மனதில் தெரிகிறது உங்கள் மரணம் இன்னும் முற்றுப் பெறவில்லை....இன்னும் சில பாரிய இழப்புகளுக்கு இப்பவே உன்னை நீ தயாராக்கிக் கொள் என்று ஏதோ ஒரு குரல் உங்க்ள் மறைவின் மூலம் சொல்லாமல் சொல்வதை நான் உணர்கிறேன்.

ஆவி, ஆத்மா, மரணத்தின் பின்னான வாழ்கை போன்ற விசயங்களை அறவே நம்பாத என்னை உங்கள் மரணமும் நீங்கள் உயிர் பிரிந்த அந்த தருணமும் ஒரு உலுப்பு உலுக்கிவிட்டிருக்கிறது. அது எப்படி சரியாக நீங்கள் கண் மூடின அந்த நேரம் பெரியம்மாவின் கனவில் வந்ததும் , அதே நேரம் இங்கு அமெரிக்காவில் மருத்துவமனையில் கோமா நிலைக்கு போய் என் அம்மா மீண்டு வந்ததும்....,எப்படி சாத்தியமானது என்று யாரிடம் விளக்கம் கேட்பது என்று எனக்கு விளங்கவில்லை அண்ணா!

பெரியப்பா இற்ந்த போது உங்களிடம் சொன்னதைத் தான் அண்ணா இப்பவும் சொல்கிறேன்.. எனக்கென்று ஒரு சின்ன பூந்தோட்டம் வைத்திருந்தேன். அதில் என் அப்பா என் அம்மா என் தம்பிமார் என் பெரியம்மா குடும்பம் , பெரியமாமா குடும்பம் என் குடும்பம் என்று குறிப்பிட்ட விசேசமான பதியங்களை மட்டுமே நட்டு வைத்திருந்தேன். கொஞ்சங் கொஞ்சமாக கடவுள் என் தோட்டத்தை களவாடிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு என் மனதுக்கு மிக மிகப் பிரியமான விருட்சத்தை வேரோடு பிடுங்கி எடுத்திருக்கிரான். . என்னுடைய தோட்டத்து நிலம் மெல்ல மெல்லவாக பாலை வனமாவதை தடுக்கவியலாத இயலாமையின் விளிம்பில்...நான்..அழுது கொண்டிருக்கிறேன்.

என் அண்ணா ! வாழ்கையில் கிடைக்காத எதையோ எப்படி அடைவது என்றோ அல்லது அடையாமல் போய்விட்டோமே என்ற வெதும்பலிலோ வாழ்கையின் பாதைகளை சீரழித்து சீரழித்து செதில் செதிலாக அணு அணுவாக உங்களை நீங்களே வருத்தி வருத்தி கடைசியில்... இப்போது இந்த தூக்கத்தை வருவித்துக் கொண்டீர்களா அண்ணா? இந்த துயில் உங்களுக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறதா?? இந்த தூக்கம் நிச்சயம் உங்களுக்கு நிம்மதியாகத் தான் இருக்கும். ஏன் என்றால் இது யாராலும் தட்டி எழுப்பி திரும்பவும் நரக வாழ்கைக்குள் உங்களைத் தள்ளி விட முடியாத துயில் அல்லவா?? நிச்சயமாய் நீங்கள் நிம்மதியாகத் தான் உறங்குவீர்கள்..
அம்மா இல்லாத வாழ்கை அகதி வாழ்கை. அப்பா இல்லாத வாழ்கை அனாதை வாழ்கை. இன்றைக்கு உங்கள் பிள்ளைகளை அனாதைகளாக்கிவிட்டீர்கள்.. எந்த பெற்றவளுக்கும் கிடைக்கக் கூடாத துயர் தான் உயிரோடு இருக்கும் போதே தான் பெற்ற பிள்ளையை சாவுக்கு பலி கொடுப்பது. இன்றைக்கு அந்தக் கொடுமையை பெரியம்மாவுக்கு கொடுத்துவிட்டீர்கள். எந்தக் கூடப் பிறந்தவர்களுக்கும் தன் அண்ணனின் மரணம் என்பது அங்கவீனமானது போல்..இன்றைக்கு உங்கள் கூடப் பிறந்த உங்கள் தங்கையை மட்டுமல்ல எங்களையும் வலது குறைந்தவர்களாக்கிவிட்டீர்கள்..! பரவாயில்லை இன்றைக்கு உங்களுக்கு நீங்கள் இதுவரை தேடிய சாந்தியும், நிம்மதியும், அமைதியும் இந்த தியிலில் கிடைத்திருக்கிறது என்றால் அனாதைகளாக , பாவிகளாக, அங்கவீனர்களாக நாங்கள் இங்கு இருக்கலாம்....பரவாயில்லை..!! நீங்கள் உறங்குங்கள் அண்ணா! ..


Wednesday, May 28, 2014

அகதி

தாயகத்தின் மாட்சிமைகள் தரைமட்டமாக்கப்பட்ட
சில கதைகள் சொன்ன பின்
அவனிடம் பிச்சை வாங்க
சில விண்ணப்பங்கள் நிரப்பி
முத்திரை குற்றப்பட்டு வெளியேறினேன்...
உடுத்தியிருந்தும் நிர்வாணமாய் குறுகியது
எங்கோ ஒரு மூலையில் மூளையில்
உணர்வு..


வெளியே....
இன்னொரு பெருநகர் வீதியின்
இரு புறமான பாதையில்
எனக்கென்ற இலக்கு தெரியாத திகில்
அப்பி போயிருந்தது..
போவதற்கு எனக்கு இடம் எதுவுமில்லை...

முகவரிகள் தெரியாத
பரிச்சயங்கள் இல்லாத ....
வாசல் ஒன்றில் கழற்றிவிடப்பட்ட
காதறுந்த செருப்பின் அந்நியமாய்
உணர்வு கசங்கிய போது தான்
அறிவு சொன்னது
அங்கே வீழ்ந்த குண்டுகளில்
ஒன்றாவது என்னைக் கொன்றிருக்கலாமென....

Saturday, May 3, 2014

 அனாதைகள்
 
-நாங்கள்
அகதிகளாக்கும் என்று
நினைத்திருந்தோம்...
இப்போது தான் புரிகிறது
நாங்கள்
அனாதைகளாகியிருக்கிறோமென்று..!
முகவரிகளற்ற,
 அடையாளங்கள் பறிக்கப்பட்ட
முகமிழந்த மனிதர்கள் நாங்கள்.
உரிமையின் தேடல் போரில்
எமக்கான தண்டணையாக
உணர்வுகள்
வன்மையாக பொசுக்கப்பட்டு
இருள் அடர் காடுகளில்
குருடர்களாக விடப்பட்டோம்..

மிச்சமிருந்த நிலங்கள் பறிபோக
சொச்சமாயிருந்த உறவுகளையும்,
உன்னதமான தலைவனையும்
பறிகொடுத்த
வரலாற்றின் எச்சங்கள் நாங்கள்.

தறித்து வீழ்த்தப்படும்  ஒவ்வொரு பொழுதும்
விதைத்த சிறு பருப்பின் முளையாய்
திரும்ப திரும்ப எழுந்து நிற்க பழகினோம்...
என்பதால்
இப்போது எங்கள் தலைகள்
துடிக்க துடிக்க துண்டாடப்படுவது
சகசமாகிப் போனது .....

துண்டிக்கப்பட்ட தலைகள்
கீழே விழும் கணங்களில் தான்
மங்கிக் கொண்டிருக்கும்
எம் புலன்கள் உணர்கின்றன....
துரோகிகளிடமும்,
எதிரிகளிடமும்
எம் சந்ததிகளை அனாதைகளாக
விட்டு விட்டு இறந்து போகிறோமென......


Wednesday, February 19, 2014

விடுதலை தந்த விலையில்லாத சந்தோசம்..!!

எத்தனையோ நாள் அற்புதம் அம்மாளின் படங்களை இணையத்தில் பார்க்கும் தருணங்களை குற்றவுணர்வுடன் தவிர்க முயன்றிருக்கிறேன். அவருடைய வாழ்கையின் இடரான துயரான தருணங்களில் எந்தவிதத்திலும் பங்கெடுக்க முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் உணர்வின் விளைவு அது. மூவர் விடுதலை என்ற தலைப்பில் என் அஞ்சல் பெட்டிகளை நிறைத்த அத்தனை பெட்டிஷன்களையும் சலிக்காது நிரப்பி நிரப்பி ஒரு குற்ற உணர்விலிருந்து தப்பிக்க முனைந்த அந்த மனதைப் பிசைந்த கணங்கள் இனி வராது. மூவர் பற்றிய செய்திகளின் தலைப்புகளை படிக்கும் முன்பே மூளையையும், மனதையும் கௌவிப் பிடிக்கும் ஒரு திகிலான உணர்வை வெறுத்த அந்த தருணங்கள் இனி இல்லை. ஆனால் இதற்கெல்லாம் விலையாக தன்னை ஆகுதியாக்கிய ஒரு உன்னதமான ஆத்மா இல்லையே என்ற  ஏக்கம் என்றைக்கும் எல்லாத் தமிழர்களிடமும் மிஞ்சி இருப்பது போலவே என்னிடமும் இருக்கும்.  


அம்மா அற்புதம்மாள் என்ற தாயின்  முகத்தில் பொங்கும் உணர்ச்சிக் குவியலை  இன்று அவ்வளவு கண்ணீருக்குமிடையில் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆசை தீர பார்த்துக் கொண்டே இருக்கிறேன். 

தூக்குத் தண்டணை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டணை என்ற அறிவிப்பைக் கேள்விப்பட்ட அந்த நிமிடம் கிடைத்த நிம்மதிப் பெருமூச்சின் விலை மதிப்பிட முடியாது, அரசியல் இலாபம் கருதியோ எந்த நோக்கமோ எதுவோ...அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை... மூவரையும் உடனடியாக விடுதலை செய்வது என்ற முதலமைச்சரின் அறிவிப்பு தான் 2009 மே 17க்குப் பின் துயர இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ் இனத்துக்கு  கிடைத்த நல்ல செய்தி . இரட்டிப்பு நிம்மதியுடன் இன்றைக்கு மூன்று குடும்பங்கள் தூக்கம் வராமல் சந்தோசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருப்பார்களா அல்லது பல வருடங்களின் பின் கண்ணீர் மறந்து தூங்குவார்களா என்ற சந்தோசமான ஊகிப்பிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது.

ஒரு குரூரமான உணர்வாக இருப்பினும் இந்த விடுதலை எத்தனை பேரின் முகத்தில் எறியப்பட்ட சேறாக இருக்கும் என்று யோசித்து மனதுக்குள் புன்னகைக்க கிடைத்த சந்தோசமான சந்தர்ப்பத்தை எதுக்காகவும் இழக்க நான் விரும்பவில்லை. நீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டிருப்பதை தான் இத்தனை நாள் பார்த்திருக்கிறேன், ஆனால் இன்றைக்கு தான் நீதி தேவதையின் கண் திறக்கப்பட்டிருக்கிறது சதாசிவம் ஐயா வழியாக.

இந்த அழகான தருணத்தின் உணர்வை பைத்தியக்காரி போல் பகிர்வதை விட   $600.000 .00 இலாபத்துக்கான முதலீட்டின் கணக்கு வழக்கு பார்க்க வேண்டிய நேரம் அப்படியொன்றும் பெரிதாக தெரியவில்லை. .... !!  10 வருடங்களாக காத்திருந்து கிடைத்திருக்கும் ஒரே நேரத்தில் மூன்று ரியல் எஸ்டேட் முதலீட்டு காண்ட்ராக்ட். அதற்காக ஒரு மாதகாலமாவது இணையத்தை பிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்றால் என்னால் இந்த சந்தோசத்தின் பின்னால் முடியவில்லை. உன்னை திருத்தவே முடியாது என்பது போல் என் கணவர் என் பின்னாலிருந்து சிரித்துக் கொண்டே தலையை உலுப்புகிறார்...ஆனால் அவரால் கூட இன்று முழுவதும் நம்ப முடியாத உணர்ச்சிக் குவியலில் தான் இருக்கிறார். எனக்கு என் உணர்வை வெளிப்படுத்த எழுத தெரிகிறது. ஆனால்...பாவம் அவருக்கு அந்த கொடுப்பினையைக் கடவுள் கொடுக்கவில்லை...!! :)
இன்று நான் மிக மிக சந்தோசமாக இருக்கிறேன்.

Tuesday, February 11, 2014

ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


 ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


இது வரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடப்பது என்பதை யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்!

இப்படி ஒரு தத்துவத்தை ஒரு நண்பரின் பதிவின் பின்னூட்டத்தில் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மிக சுலபமாக தத்துவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால் அவற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு வாழத் தலைப்படுபவர்களுக்கு தான் தெரியும் அவை வெறும் ஜிகினா பூசப்பட்ட வார்த்தைகள் என்று.

நடந்தவற்றை யோசிப்பதை விட்டுவிட்டு நடக்கப் போவதை சிந்திக்க சொன்னால் எதையென்று சிந்திக்க முடியும்?? குடும்பமே நிர்மூலமாக்கப்பட்ட சிறுவனிடம் போய் இதை சொல்லிப் பாருங்கள்! இராணுவத்தினரால் வன்கொடுமை செய்யப்பட்டு , குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் ஒரு பெண்ணிடம் போய் சொல்லிப் பாருங்கள்! உயிரோடு கருகிய சொந்தங்களின் பிணக்குவியலில் உட்கார்ந்திருக்கும் ஒரு அனாதை அகதியிடம் போய் சொல்லிப் பாருங்கள்..!!

ஒவ்வொருவருவம் அடுத்து வரும் நாட்களை கடத்தப் போகிறார்கள் தான். அதற்காக சுவாசிக்கப் போகிறார்கள் தான். சுவாசிப்புக்காக சாப்பிடப் போகிறார்கள் தான். சாப்பாட்டுக்காக உழைக்கவோ அல்லது அகதிப் பிச்சையோ வாங்கப் போகிறார்கள் தான். ஆனால் அந்த நாட்கடத்தல்களில் என்ன விடிவு வரப் போகிறதென்றோ அல்லது நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்றோ எதிர்பார்ப்போ, திட்டமிடலோ எதுவும் இருக்கப் போவதில்லை. சூனியமாக்கப்பட்ட ஒரு வரலாற்றின் அடையாளங்களாக இருக்கும் வரை இருந்துவிட்டுப் போகப் போகிறோம். எங்களிடம் வந்து தத்துவப் பதாகைகளை காட்டாதீர்கள்!!