நான் ஒரு கதை சொல்லி. பொய்யோ சோடனையோ கலக்காத , எந்தவொரு பிரபல நாவலாசிரியனும், எப்படியானவொரு திறமையான திரைப்பட இயக்குனரும் கூட நம்பவியலாத பல உண்மைக் கதைகளை மனதுக்குள் புதைத்து புதைத்து சமாதி கட்டி வைத்திருக்கும் ஒரு கதை சொல்லி நான்!
என்னவொரு துர்பாக்கியம்…. ஒவ்வொருவரின் மரணநிகழ்வுகளில் மட்டுமே கதை சொல்லும் சந்தர்ப்பம் கிட்டிய துரதிஷ்டசாலியாக இருக்கும் கதை சொல்லி நான்!
இழப்புகளுடனும், பிரிவுகளுடனும் புலம் பெயர்ந்த ஒரு இனத்தின் அடையாளங்களையும், சாபக்கேடுகளையும் சுமந்து கொண்டு , உறவுகளின் மரணநிகழ்வுகளில் கூட கடைசியாக ஒரு தடவையேனும் அவர்கள் முகங்களைப் பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காத துர்பாக்கியவதியான ஒரு கதை சொல்லி இன்று இன்னொரு உயிருக்குயிரான என் உறவின் இழப்பின் கதை ஒன்றை சொல்லப் போகிறேன்….!
வைரவபிள்ளை சண்முகராஜா சிவகுமாரன் என்று தலைமுறை பெயருடன் தன்னுடைய முழுப்பெயரையும் சேர்த்து சொல்வதில் என் அண்ணாவுக்கு தான் எத்தனை பெருமை!!இன்றைக்கு அந்த பெயரும் , என் அண்ணாவும் காலாவதியாகிவிட்ட சோகத்தை நான் யாரிடம் சொல்லி மாள்வது என்று தான் எனக்கு புரியவில்லை...
என்னுடைய பெரியம்மாவின் மூத்த மகன்; எங்கள் தலை முறையின் தலைமகன். வயதில் எங்கள் எல்லோருக்கும் பெரியவராயும், குணத்தில் எங்களோடு குழந்தையாயும் ,தாயாயும், தந்தையாயும், ஆசானாயும் அரவணைத்த என் அண்ணா!! இன்றைக்கு எல்லாவற்றையும் கடந்து உங்கள் எல்லார் முன்னாலும் சகலதும் அணைந்து துயின்று கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் என்னால் அதை மட்டும் இன்னமும் நம்பமுடியவில்லை…!
ஒரு கணித மேதை….! சிறந்த படிப்பாளி..! படிப்பாலும் கல்வித் தகமைகளாலும் முதல்வகுப்பில் தேறிய ஒரு மேதாவி… ! உலகின் அத்தனை மூலைகளிலும் தன்னுடைய மாணவர்களைக் கொண்ட ஒரு ஆசான்..! என் அண்ணா வைரவபிள்ளை சண்முகராஜா சிவகுமாரன் ! வாழ்கையின் சூட்சுமங்களை புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்வதில் அக்கறையில்லாமல், அல்லது புரிந்து கொள்ளத் தெரியாமலேயே வாழ்கையை வாழ்ந்து முடித்துவிட்ட ஒரு ஆன்மா இருக்குமானால் அது என் அண்ணாவாகத் தான் இருக்கும்..!! கணிதத்தின் கோணங்களையும் , சமன்பாடுகளையும் இலகுவாக நிறுவத் தெரிந்த என் அண்ணா வாழ்கையின் கோணல்களையும், சமநிலை வேறுபாடுகளையும் ஈடுகட்ட முடியாமலேலே இறந்து போய்விட்டார் என்பது தான் சோகம்.
என்னுடைய அம்மாவுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் குடும்பப் பெருமை பேசுவது என்றால் மிகவும் விருப்பம். அதுவும் அண்ணாவின் பெருமை பேசுவது என்றால் அவருக்கு அலுக்கவே அலுக்காது… “என்ர மகன் math ல second manனா க வந்தவர் கட்டுப்பத்தை கம்பஸில, அவரைப் போல ஒரு கெட்டிக்காரனை இங்கன யாராலேயும் காண முடியுமே..என்று தொடங்கி’ “நாலு வயசிலேயே சூரியனுக்கு வேசம் போட்டுக் கொண்டு மேடையில வந்து நிண்டு “என் பெயர் சூரியன்” என்று பாட்டுப் பாடேக்கில பாக்க வேணுமே.. ஆளிண்ட நிறமும் , மஞ்சள் கலர் உடுப்பும்...உண்மையிலேயே சூரியன் மாதிரி தான் இருப்பார்.. என்ன சொன்னால் என்ன அவன் சூரியன் தான் எங்களுக்கு ” என்று தொடர்ந்து சொல்லி முடிப்பதற்குள் கேட்டுக் கொண்டிருப்பவர் களைத்துப் போய்விடுவார். அந்தளவுக்கு ஆசை ஆசையாக அண்ணாவைப் பற்றி யாருடனும் அலுக்காமல் சளைக்காமல் கதைக்குமளவுக்கு பல விசயங்கள் அம்மாவிடம் அண்ணாவைப் பற்றியது இருக்கிறது.
இந்த வினாடி வரை என்ர அம்மா அண்ணாவை தனது அக்காவின் மகன் என்று சொன்னதேயில்லை.. என்ர மகன் என்ற அடை மொழியைத் தவிர அம்மா இன்னொரு வார்த்தையில் அவரை சொன்னதில்லை...
ஆனால் அண்ணா! அப்படிப்பட்ட உங்கட அன்ராவுக்கு இன்னும் உங்கள் மரணச் செய்தியை நாங்கள் சொல்லவில்லை...! இந்த இடியை இறக்கி அடஹி எதிர்கொள்ளும் நிலையில் உங்கள் அன்ரா இல்லை அண்ணா!! இனியும் எப்படி சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. சொன்னால் நிலமை எப்படியிருக்குமென்று நினைச்சுப் பார்க்க முடியவில்லை... !
சிவகுமாரன் ! பெயருக்கேற்ற மாதிரியே அழகான, கம்பீரமான, மாம்பழ நிறத்தில் ஆறடிக்கு குறையாத உய்ரமான, நெஞ்சு நிமிர்த்திய நடையுமாய்...என் அண்ணா ஆணழகன் தான்!! யாரைப் பார்த்தாலும் தோளில் கை போட்டு அணைத்து நடந்து வரும் வாஞ்சையும், பெரியவர்களையோ பெண்களையோ பார்த்தால் தலையைச் சாய்க்கும் பணிவும் , மரியாதையும்...அடடா... ஒரு தேவ தூதனுக்கேயுரிய சகல இலட்சணங்களும் பொருந்திய நல்லதொரு மனிதன் தான் என் அண்ணா! ஒரு சில வாழ்கைச் சந்தர்ப்பங்கள் அத்தனை இலட்சணங்களையும் கழுவித் துடைத்து கவிழ்த்துப் போட, அந்த வாழ்கையின் அடிவார சகடுகளையும் துளாவி வந்த மனிதனும் அவர் தான்.
என்னுடைய அண்ணாவின் அழகை இரசிக்கவும் அவருடைய கடைக் கண் பார்வைக்காகவும் கணிதப் பாடத்துக்கு சம்மந்தமேயிராத மாணவிகள் எத்தனை பேர் அண்ணா படிப்பித்த கணிதப் பாட வகுப்புகளின் பின்னிருக்கைகளை நிரப்பியிருந்திருக்கின்றனர் என்பதற்கான உயிருள்ள சாட்சிகள் இன்றைக்கு இந்தக் கூட்டத்திலேயே இருக்கக் கூடும்.
யாழ் பரியோவான் கல்லூரியின் மாணவராக இருந்து , கட்டுபத்தை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புக்காக தேர்வாகி அங்கு கணிதத்தில் இலங்கையின் 2 சிறந்த மாணவராக சித்திபெற்று யாழ் நகரினதும், வட மாகாணத்தின் நகர்களில் இருந்த பொண்ட் டியூட்டரி உட்பட பெரும்பாலானா அத்தனை கல்வி நிலையங்களிலும், யாழ்.பரியோவான் கல்லூரி, மஹா ஜன கல்லூரி போன்ற பாடசலைகளில் பகுதி நேரமாயும் பிரயோக, தூய கணிதப் பாடங்களையும், பௌதீகவியலையும் கற்பித்த யாழ் நகரின் புகழ்பெற்ற ஆசிரியர் புலம் பெய்ர்ந்தும் அதே கணிதத்தின் அடையாளமாய் வாழ்ந்து முடித்திருக்கிறார் என் அண்ணா!
ஆசிரியத் தொழில் என்பது அண்ணா தான் மாணவனாக இருந்த 17ம் வயதிலேயே தொடங்கிய ஒன்று. பாடசாலை விட்டு படை படையாக வீட்டு மதிலில் சைக்கிளோடு வரிசையாக அண்ணாவுடன் கூடப் படித்த மாணவர்கள் நிற்பதும் , ஒவ்வொருவராக அண்ணா அவர்களின் வீட்டுப் பாடங்களையோ அல்லது projectsஐயோ செய்ய உதவி செய்து ஒவ்வொருத்தராக அனுப்பி வைப்பதும் எங்கள் அயலில் எல்லோரும் தினமும் பார்த்த அன்றாடக் காட்சி..!!
70களிலும் 80 களிலும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாய் வாரா வாரம் மெயில் ட்ரெயினில் வந்து போய் படிப்பித்த ஒரு ஆசான் என்றால் அது என் அண்ணாவாகத் தான் இருக்கும்.
எல்லாரும் பொழுது போக்க கதைப் புத்தகங்களை படித்திருப்பீர்கள். ஓவியங்கள் வரைந்திருப்பீர்கள். அல்லது கவிதையோ கதையோ எழுத முனைந்திருப்பீர்கள்...ஆனால் என் அண்ணா தன் பொழுதுகளைப் போக்க கதைப் புத்தகங்களைப் போல் கணிதப் புத்தகங்களைத் தான் வாசித்துக் கொண்டிருந்து பார்த்திருக்கிறேன். அவருடைய ஓவியமெல்லாம் கேத்திரகணிதத்தின் முக்கோணங்களும், பைதகரசுமாய் தான் இருந்திருக்கிறது. அவரது எழுத்து முயற்சியெல்லாம் கணித மேதைகள் நிறுவிய சமன்பாடுகளை மறுதலித்தோ அல்லது பொருந்தாத சமன்பாடுகளை பொருந்தி வரும்படிக்கான சமன்பாட்டு நிறுவல்களையோ எழுதி எழுதி பார்க்கும் வகையாகத் தான் இருந்திருக்கிறது. சில கணிதச்சமன்பாடுகளை முரண்படுத்தி நிறுவிக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆசிரியர்களே அந்த சமன்பட்டின் நிறுவல்களின் சூட்சுமம் புரியாமல் வியந்திருந்ததை கண் கூடாக பார்த்தவள் நான்.
என் அண்ணா இழந்தது நிறைய. பறி கொடுத்தது பல வகை. மற்ந்ததும் மறைத்ததும் கூட எக்கச்சக்கம். ஆனால் கடைசி வினாடி வரை அவருடைய நிழலுக்கடுத்ததாய் அவருடன் பிரியாமல் கூடவே இருந்தது இந்த கற்பித்தல் என்ற வல்லமை தான்.
என் அண்ணாவை நான் நேரில் பார்த்து சரியாக 30 வருடம். இனி அதற்கான சந்தர்ப்பத்தை தராமல் போய்விட்டார். கடைசியாக அண்ணா ஜேர்மனி போகும் போது எங்கள் வீட்டுக்குவந்ததும் அம்மம்மாவின் படத்தைக் கும்பிட்டுட்டு எங்கள் எல்லோரையும் கொஞ்சி அணைத்துவிட்டு விம்மிக் கொண்டே போனதும் இன்றைக்கும் கண்ணுக்குள் நிற்கிறது.. ஆனால் இன்று கண்காணாத இடத்துக்கு போய்விட்டீங்கள்...
உங்கள் நெஞ்சில் குத்திய சொந்தங்களையும் முதுகில் குத்திய நட்புகளையும் நான் இதுவரை என் உறவுகளாக அல்லது நண்பர்களாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை; அவர்களை பகிஷ்கரிக்கும் வஞ்சத்தை எனக்குள் வளர்த்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களால் பட்ட காயங்களையும் சோகங்களையும் மறந்து அவர்களுடன் வழமை போல் அதே உறவு சொல்லி அதே நட்பு வளர்த்து வாழ்ந்தவர். அன்பைக் காட்டி உங்களை ஏமாற்றியவர்களிடம் ஏமாந்தது தெரிந்தே அவர்களை புறக்கணிக்காமல் அரவணைத்து அதைவிட அதிகமாக அன்பை செலுத்தி அவர்களை தலைகுனிஒய வைத்தவர் நீங்கள்....! இன்று அவர்களில் பலர் உங்களிடம் மானசீகமாக பாவமன்னிப்புக் கேட்க இங்கு வந்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் உங்கள் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.. ஆனால் உங்கள் முகத்தைக் கடைசியாகக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை எங்களுக்கு. உங்களால் தானே அண்ணா நான் இன்று இந்த நிலையில் நல்ல வாழ்கை வாழ்கிறேன். அப்பா இல்லாத வாழ்கையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்த எனக்கு நீங்கள் கை கொடுக்காமல் இருந்திருந்தால் நானும் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் முடங்கித் தானே கிடந்து கொண்டிருந்திருப்பேன்??? என்னுடைய பள்ளிக் காலங்களிலும், சரி , அதன் பின்னாலும் சரி என் ஒவ்வொரு வழியிலும் பாதை வெட்டிக் கொடுத்த சிற்பி நீங்கள் தானே அண்ணா! என்ர சாந்தி...ஆச்சி மாணிக்கம் என்று எனக்கு தானே அப்படி அன்பை பொழிந்திருக்கிறீங்கள்?? உங்கட அன்ராவின் பிறந்தநாளுக்கு வரும் தை மாதம் அங்க வருவன் என்று தானே சொன்னீங்கள்??? மாசக் கடைசில உனக்கு போன் எடுக்கிறன் என்று ஒரு கிழ்மைக்கு முன் தானே சொன்னீங்கள்:?? இண்டைக்கு எப்பிடி மனம் வந்தது எங்களுக்கு உங்கள் முகத்தை காட்டாமல் போக??
இறப்புகளுக்கு மட்டும் துயர் பகிரும் விதி...உறவுகளின் முகங்களை கடைசியாக கூட பார்க்க முடியாத அவலம்...இந்த வாழ்கையில் அப்படி என்ன இனி நான் சாதிக்கப் போகிறேன் என்று வெறுப்பாக இருக்கிறது அண்ணா!
பெரிய மாமா, பெரிய மாமி, பெரியப்பா என்று ஒவ்வொருவருடைய மரணத்தின் போதும் ஐயோ கடைசியாக அவர்கள் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்று தான் குமுறிப் போனேன். ஆனால் உங்கள் மறைவில் கடைசியாக உங்கள் முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற வேதனையை விட , உங்களை பறி கொடுத்துவிட்டு என் பெரியம்மா என்ன மாதிரி துடிக்கிறாவோ என்ற நினைப்பு தான் நெஞ்சில் கத்தி சொருகி இழுத்தது போல் வலிக்கிறது அண்ணா!! எனக்கு என்னவோ என் மனதில் தெரிகிறது உங்கள் மரணம் இன்னும் முற்றுப் பெறவில்லை....இன்னும் சில பாரிய இழப்புகளுக்கு இப்பவே உன்னை நீ தயாராக்கிக் கொள் என்று ஏதோ ஒரு குரல் உங்க்ள் மறைவின் மூலம் சொல்லாமல் சொல்வதை நான் உணர்கிறேன்.
ஆவி, ஆத்மா, மரணத்தின் பின்னான வாழ்கை போன்ற விசயங்களை அறவே நம்பாத என்னை உங்கள் மரணமும் நீங்கள் உயிர் பிரிந்த அந்த தருணமும் ஒரு உலுப்பு உலுக்கிவிட்டிருக்கிறது. அது எப்படி சரியாக நீங்கள் கண் மூடின அந்த நேரம் பெரியம்மாவின் கனவில் வந்ததும் , அதே நேரம் இங்கு அமெரிக்காவில் மருத்துவமனையில் கோமா நிலைக்கு போய் என் அம்மா மீண்டு வந்ததும்....,எப்படி சாத்தியமானது என்று யாரிடம் விளக்கம் கேட்பது என்று எனக்கு விளங்கவில்லை அண்ணா!
பெரியப்பா இற்ந்த போது உங்களிடம் சொன்னதைத் தான் அண்ணா இப்பவும் சொல்கிறேன்.. எனக்கென்று ஒரு சின்ன பூந்தோட்டம் வைத்திருந்தேன். அதில் என் அப்பா என் அம்மா என் தம்பிமார் என் பெரியம்மா குடும்பம் , பெரியமாமா குடும்பம் என் குடும்பம் என்று குறிப்பிட்ட விசேசமான பதியங்களை மட்டுமே நட்டு வைத்திருந்தேன். கொஞ்சங் கொஞ்சமாக கடவுள் என் தோட்டத்தை களவாடிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு என் மனதுக்கு மிக மிகப் பிரியமான விருட்சத்தை வேரோடு பிடுங்கி எடுத்திருக்கிரான். . என்னுடைய தோட்டத்து நிலம் மெல்ல மெல்லவாக பாலை வனமாவதை தடுக்கவியலாத இயலாமையின் விளிம்பில்...நான்..அழுது கொண்டிருக்கிறேன்.
என் அண்ணா ! வாழ்கையில் கிடைக்காத எதையோ எப்படி அடைவது என்றோ அல்லது அடையாமல் போய்விட்டோமே என்ற வெதும்பலிலோ வாழ்கையின் பாதைகளை சீரழித்து சீரழித்து செதில் செதிலாக அணு அணுவாக உங்களை நீங்களே வருத்தி வருத்தி கடைசியில்... இப்போது இந்த தூக்கத்தை வருவித்துக் கொண்டீர்களா அண்ணா? இந்த துயில் உங்களுக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறதா?? இந்த தூக்கம் நிச்சயம் உங்களுக்கு நிம்மதியாகத் தான் இருக்கும். ஏன் என்றால் இது யாராலும் தட்டி எழுப்பி திரும்பவும் நரக வாழ்கைக்குள் உங்களைத் தள்ளி விட முடியாத துயில் அல்லவா?? நிச்சயமாய் நீங்கள் நிம்மதியாகத் தான் உறங்குவீர்கள்..
அம்மா இல்லாத வாழ்கை அகதி வாழ்கை. அப்பா இல்லாத வாழ்கை அனாதை வாழ்கை. இன்றைக்கு உங்கள் பிள்ளைகளை அனாதைகளாக்கிவிட்டீர்கள்.. எந்த பெற்றவளுக்கும் கிடைக்கக் கூடாத துயர் தான் உயிரோடு இருக்கும் போதே தான் பெற்ற பிள்ளையை சாவுக்கு பலி கொடுப்பது. இன்றைக்கு அந்தக் கொடுமையை பெரியம்மாவுக்கு கொடுத்துவிட்டீர்கள். எந்தக் கூடப் பிறந்தவர்களுக்கும் தன் அண்ணனின் மரணம் என்பது அங்கவீனமானது போல்..இன்றைக்கு உங்கள் கூடப் பிறந்த உங்கள் தங்கையை மட்டுமல்ல எங்களையும் வலது குறைந்தவர்களாக்கிவிட்டீர்கள்..! பரவாயில்லை இன்றைக்கு உங்களுக்கு நீங்கள் இதுவரை தேடிய சாந்தியும், நிம்மதியும், அமைதியும் இந்த தியிலில் கிடைத்திருக்கிறது என்றால் அனாதைகளாக , பாவிகளாக, அங்கவீனர்களாக நாங்கள் இங்கு இருக்கலாம்....பரவாயில்லை..!! நீங்கள் உறங்குங்கள் அண்ணா! ..
No comments:
Post a Comment