ஒரு தாலி அறுப்பு !
சுன்னம் இடிக்கத் தொடங்கும் போதே சுற்றி இருக்கும் உறவுகளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போய்விடும். இனி என்ன இருக்கு என்ற ஒரு வெறுமை பரவத் தொடங்கும்..
மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு இனம் புரியாத விரும்பத்தகாத குளிர்ந்த பனிக்கட்டி ஒன்று உருண்டு பிரண்டு நெஞ்சுக்குள் அடைத்து உயிரோடிருக்கும் போதே ஜீவனற்றுப் போன விறைப்பான குளிர் உடம்பு முழுதும் பரவி மொய்த்துக் கொள்ளும்...
அப்படியொரு விரும்பி ஏற்றுக் கொள்ளாமலேயே எங்கள் வீட்டிலும்....நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது அன்று...
அப்பாவின் மூடிய கண்களின் மேல் தம்பிமார் மூவரும் இடித்த சுன்னம் மஞ்சளாக குழைத்து அவர்கள் கையாலேயே அப்பி விடும் அந்த வினாடி தான் அத்தனை நேரமும் அப்பா நித்திரை கொள்வது போலிருந்த மலைப்பு போய் அப்பா உயிரற்ற சடலமாகிவிட்டார் என்ற உண்மையை திணித்து கொள்ளும் பலவந்தம் , சொருகின வாளாக இதயச் சுவரிலும் அறிவுப் புதரிலும் இறங்கத் தொடங்கியது... அப்போது இயலாமையுடன் உடம்பும் மனமும் நிதர்சனத்தை ஏற்க மனமில்ல்லாமல் துடிக்கும் வலி இருக்கிறதே......வார்த்தைகளால் வர்ணிக்கவியலாது...
ஈமைக் கிரியைகள் எல்லாம் முடிந்த பின் எல்லாரும் அப்பாவைச் சுற்றி மாரடிக்கத் தொடங்கினார்கள்...வீல் என்று நானும் தம்பிமாரும் ஓலமிட்டோம்... அழுகையா அலறலா என்று இனம் புரியாத ஒலியில் உச்சச்தாயியில் அம்மா நெஞ்சு பிளக்கக் கூடாதா என்ற வெறியில் தன் கையால் தானே படார் படார் என்று குத்தி குழறினார்.. அப்பாவை கிடத்தியிருந்த பெட்டியைச் சுற்றி ஆஜானுபாகுவான ஆண்கள் பெட்டி மூடியுடன் வந்து ஆயத்தமாக நின்றார்கள்... உரிமைக்கார ஆண்கள் விரக்தியான பெருமூச்சுடன் பாடை தூக்க ஆயத்தமாக சால்வையை நாரியில் வரிந்து கட்டத் தொடங்கும் போதே , வயசான சில பெண்கள் அம்மாவை நோக்கி வந்தார்கள்...
அவர்கள் அம்மாவை பார்த்து அழுத படி மாரடிக்கிறார்கள்..
பெரியம்மாவுக்கு தாங்க முடியவில்லை..தாத்தா இறந்த பின் அம்மா உட்பட அத்தனை சகோதரங்களையும் தன் பிள்ளை போல் வளர்த்தது பெரியம்மா தான்...அம்மாவுக்கு அப்பாவை தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணி வைத்தார். அதை எப்பவும் பெருமையாக சொல்லிக் கொள்வார்... அப்படி தேடி பிடித்து கொடுத்த வாழ்கை இன்று பாலை வனமாகிப் போக தன் கண் முன்னாலேயே தன் தங்கைக்கு தாலி அறுக்கப் போகிறார்களே என்ற வேதனை , வலி, இயலாமை என்று எல்லாம் ஒன்றாகி அழுகை பெருக்கெடுத்து ஓலமாக ஒப்பாரியாக எதிரொலிக்கிரது.... பெரியம்மாவிடமிருந்து...!
இந்தக் கொடுமையை எல்லாம் பார்க்கவா நான் இன்னும் இருக்கிறன் என்று பெரியம்மாவின் அழுகை எல்லாருடைய மனதையும் அறுத்துப் போடுகிறது.
அம்மா தன் தாலியை கையால் இறுகப் பற்றிக் கொண்டு அழுகிறார். எல்லாரையும் பார்த்து கெஞ்சுகிறார்.. அர்த்தமில்லாமல் தன் தாலியை தன்னிடமிருந்து பறிக்க வேண்டாமெண்டு பிறத்தியாரிடம் மண்டாடுகிறார். அந்த கிழவிகள் அம்மாவின் கையை பலவந்தமாக இழுத்து அம்மாவின் கையிலிருந்த தாலியை கழற்ற முயற்சிக்கிறார்கள்... என்னால் பொறுக்க முடியவில்லை...அம்மாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற் கூட்டத்தில் முண்டியடிக்கிறேன்.. என்னை யாரோ பலமாக இழுத்து அந்தாலப் பக்கமாய் தள்ளிவிடுகின்றனர்... குமர் பிள்ளை யாம், அந்த இடத்தில் நிற்கக் கூடாதாம்...
சின்ன தம்பி ஓடி வந்து “ விடுங்கோ அம்மாவை விடுங்கோ..அவவை விடுங்கோ” என்று ஆவேசமாக கத்துகிறார்..
மூத்தவன் ”அம்மாவுக்கு விருப்பமில்லையெண்டால் ஏன் நீங்கள் வில்லங்கத்துக்கு கழட்டுறீங்கள்” எண்டு சீறிக் கத்தினான்...
நடுவிலான் தேம்பி தேம்பி அழுகிறான்.. என்னிடம் “ அப்பாவே அம்மாவுக்கு நடக்கும் இந்த கொடுமையை- கண்ராவியை விரும்ப மாட்டார்” என்று சொல்கிறான்...
அது எங்களுக்குத் தான் தெரியும். அப்பாவுடன் வாழ்ந்த நாட்களில் இன்றைய இந்தப் பொழுதைப் போன்ற கொடுமையில் ஒரு சத வீதம் தன்னும் அப்பா அம்மாவுக்கு கொடுத்ததில்லை.. அப்பா அம்மாவுக்கு கொடுத்த அவர்களுக்கிடையேயான தாம்பத்தியத்தின் அடையாளத்தை பலவந்தமாக அறுக்கும் உரிமையை ஆரோ ஊர் பேர் தெரியாத அன்னியர்களுக்கு யார் தந்தது? என்ற ஆவேசம் எனக்குள் பீறிடுகிறது...
அம்மா அழ அழ அவரின் தாலி அறுக்கப்பட்டது. தலையில் வைச்சிருந்த பூவை பறித்து கசக்கி நாலு பக்கமும் எறிந்தார்கள். குங்குமத்தை இரக்கமேயில்லாமல் அழித்தார்கள்... அம்மா தன் முகத்தை கைகளால் அறைந்து அறைந்து அரற்றுகிறார். பெரியம்மா அவரைக் கட்டிக் கொண்டு அழுகிறார்...
பறை உச்ச ஸ்தாயியில் முழங்கத் தொடங்க... நாங்கள் எல்லாரும் கதறக் கதற அப்பாவின் பெட்டி மூடப்பட்டு பாடையில் தூக்கி வைத்துவிட்டார்கள்... அம்மா மிகவும் களைச்சுப் போய் கீழே சாய்ந்துவிட்டார்... அம்மாவை திரும்பி திரும்பி பாத்தபடி கண்ணீர் வழிய கொள்ளிக்குடமும் நெருப்புச் சட்டியுமாய் தம்பிமார் மூன்று பேரும் தளர்ந்து போய் அப்பாவுக்கு பின்னால் நடந்தார்கள்...
அம்மாவின் கழுத்திலிருந்த தாலியை பத்திரமாக அந்தக் கிழவிகள் என்னிடம் தந்தார்கள்..
”இந்தா ராசாத்தி இதை கொண்டு போய் உள்ள வை.. ”
அந்த தாலியை வெறித்துப் பார்க்கிறேன்.
எத்தினை நகை நட்டு இருந்தும் என்ன ....அப்பா கட்டின ஒற்றை தாலி கழுத்திலிருந்து அறுக்கப்பட்ட பின் அம்மாவின் அடையாளத்தையே மாற்றிவிட்டது..
அம்மா இனி மூளி;விதவை; கைம் பெண்; முழிவியலத்துக்குதவாதவர்; நல்ல காரியங்கள் நடக்கும் போது பின்னால் நிற்க வேண்டியவர்; இதையெல்லாம் இந்த வினாடி அந்தக் கிழவிகள் அறுத்த என்னுடைய அப்பா என் அம்மாவுக்கு கட்டின தாலி சொல்லுகிறது.
அம்மாவுக்கு நெஞ்சிலும் மாரிலும் சுமந்த அப்பாவின் உறவு இனி இல்லை என்று சொல்லாமல் சொல்லியது. அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட சந்தோசமும், துயரமும் , உணர்வுகளும், உணர்ச்சிகளும் இனி எப்போதுமே கிடைக்காது என்பதை பறை சாற்றியது.
அம்மாவுக்கென்று இனி எதுவுமே அப்பாவால் இல்லை என்று தீர்ப்பு சொல்லியது..
இனி அது வெறும் விலையுயர்ந்த் உலோகம் மட்டும் தான். அதை உருக்கி ரெண்டு மூண்டு நகைகள் செய்யலாம்..ஆனால் அப்பா உயிருடன் இருந்த போது உயிர்ப்பாயிருந்த எந்தவொரு நல்லவிசயங்களையும் அந்த நகைகள் அம்மாவுக்கு திரும்ப தரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது. என்ர அம்மா அந்தளவு துடித்து சித்ரவதைப் பட்டு நான் பார்த்ததில்லை... உனக்கு உன்னுடைய புருசன் இனி இல்லை என்ற கொடூரமான உண்மையை தான் அம்மாவுக்கு மிச்சமாக விட்டு வைத்திருக்கிறது.... !
இப்பிடித் தான் எங்கட வீட்டில் ஒரு தாலி அறுப்பு நடந்தது...
ஆனால் இங்க என்னடாவெண்டால்.......விழா எடுத்து , மைக் செட் போட்டு தாலி அறுக்கினமாமே.....
No comments:
Post a Comment