48) ஈழத்தமிழ் பேச்சு வழக்கில் சில சொற்களின் அர்த்தங்கள் அதன் ஒலியையும் உச்சரிக்கும் தன்மையையும் வைத்து கணிப்பிடக்கூடியவை.
கெதியா / கெதியெண்டு /- சீக்கிரமா
டக்கெண்டு - உடன /அவசரமாக, வேகமாக
பட்டெண்டு - தாமதிக்காமல்
உடன - உடனடியாக
சுறுக்கா - விரைந்து , சுறுசுறுப்பாக
காலாற - ஓய்வாக அல்லது மெதுவாக
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு - சோர்ந்து போய் வரல்
ஆடிப் பாடி - நேரம் வீணாக்கல் /தாமதித்தல்
ஆடி அசைஞ்சு - தாமதித்தல் /நேரத்தை வீணாக்குதல்
மினக்கெடல் - தாமதித்தல் /நேரத்தை வீணாக்கி
மேலே தரப்பட்ட வார்த்தைகள் வேகத்துடன் சம்மந்தப்பட்டவை.
உதாரண வாக்கியங்கள்.
கெதியா - பாமா இங்க ஒருக்கா கெதியா வாரும் பாப்பம்.
(பாமா சீக்கிரமாக இங்கே வாருங்கள் பார்க்கலாம்)
கெதியெண்டு - கெதியெண்டு நடை பறிஞ்சால் தான் செக்கலுக்கு முன்னம் வீட்ட போய் சேரலாம்.
( விரைவாக நடந்தால் தான் அந்தி சாயும் முன் வீடு போகலாம்)
சுறுக்கா - எந்த வேலையெண்டாலும் அதை சுறுக்கா செய்து பழகு.
(எந்த வேலையையும் சுறுசுறுப்பாக / விரைந்து செய்யப் பழகு)
டக்கெண்டு - அவனுக்கு வந்த கோவத்தில இருந்த இடத்தை விட்டு
டக்கெண்டு எழும்பி போய்ட்டான்.
(அவனுக்கு கோபம் வந்ததால் இருந்த இடத்தை விட்டு
உடனடியாக /தாமதிக்காமல் எழுந்து போய்விட்டான்)
பட்டெண்டு - கொஞ்சமும் யோசிக்காமல் பட்டெண்டு வார்த்தையை
விட்டுடுறது..பிறகு இருந்து யோசிக்கிறது.
(முன் பின் யோசிக்காமல் சடக்கென்று வார்த்தையை விடுவது.
பின்னால் கவலைப்படுவது)
உடன - மினக்கெடாமல் உடன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால்
தான் கிழவியை காப்பாத்தலாம்.
(தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு போனால்
தான் மூதாட்டியை காப்பாற்றலாம்)
காலாற - பின்னேரங்களில கோவில் பக்கம் காலாற நடந்து போனால்
தான் நிம்மதியா இருக்கும்.
(மாலை வேளைகளில் கோவில்பக்கமாக ஓய்வாக நடந்த
போனால் தான் மனதுக்கு திருப்தி)
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு - நானே பகல் முழுக்க முறிஞ்சு போட்டு இப்ப தான்
ஆய்ஞ்சு ஓய்ஞ்சு வந்து குந்திறன்..நீ என்னடாவெண்ட்டால்
அதுக்கிடையில வேலை சொல்லுறாய்?
(நானே களைத்து விழுந்து வந்திருக்கிறேன். நீ என்ன
வென்றால் என்னிடம் வேலை சொல்கிறாய்)
ஆடிப் பாடி - அங்க என்ன ஆடிப்பாடிக் கொண்டு நேரத்தை
மினக்கெடுத்துறாய்?
ஆடி அசைஞ்சு - ஆடி அசைஞ்சு கொண்டு நிக்காமல் சுறுக்கா வா பாப்பம்.
மினக்கெடல் - நான் அங்கேருந்து மினக்கெட்டு உன்னை பாக்க வந்தால் நீ
உன்ர பாட்டுக்கு டிவில படம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
(நேரத்தை வீணாக்கி உன்னைப் பார்க்க நான் வந்தால் நீ
உன் பாட்டுக்கு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாய்)
Wednesday, December 16, 2015
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்
இன்று மூன்று சொற்கள் தேர்வு செய்திருக்கிறேன்.
மூன்று சொற்களும் ஒரே மாதிரியான சொல்லைக் கொண்டு தொடங்குபவையாக இருந்தாலும் வென்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுவனவாகும்.
மூன்று சொற்களும் ஒரே மாதிரியான சொல்லைக் கொண்டு தொடங்குபவையாக இருந்தாலும் வென்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுவனவாகும்.
1) அரிதட்டு /மாவரி/அரிக்கன் தட்டு / அத்திமடக்கு (மட்டக்களப்பு தமிழ்) - சல்லடை
அரிதட்டு அல்லது மாவரி அல்லது அரிக்கன் தட்டு என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம்.இதில் மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.
2) அரிக்கன் சட்டி - அரிசி களைந்து கல், நெல் அகற்றி அரித்தெடுக்க உபயோகிக்கப்படும் மண் அல்லது ஈயத்தாலான பாத்திரம்.
3) அரிக்கன் லாம்பு - மண்ணென்ணெயில் எரியும் விளக்கு ;ஹரிக்கன் காற்றில் கூட இந்த விளக்கு அணையாது என்ற அர்த்தத்தில் இந்த விளக்குக்கு ஹரிக்கேன் இலாம்பு என்று பெயர் வைத்தார்களாம். ஹரிக்கேன் அரிக்கனாக மருவி விட்டது.
ஈழத்தில் விளக்கை (இ)லாம்பு என்று சொல்வார்கள். லாம்பு என்ற வார்த்தையும் அன்னிய மொழியிலிருந்து தமிழுக்குள் வந்த வார்த்தையே .
உதாரணம்:
1) மாவரிக்க நல்லதா அரிதட்டு ஒண்டு வாங்க வேணும்.
2) அரிக்கன் சட்டியில அரிசியை அரிச்சால் அரிசியை விட கல்லு தான் கனக்க வருது.
3) இருட்டப் போகுது, அந்த அரிக்கன் லாம்பை கொளுத்தி வையன்.
அரிதட்டு அல்லது மாவரி அல்லது அரிக்கன் தட்டு என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம்.இதில் மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.
2) அரிக்கன் சட்டி - அரிசி களைந்து கல், நெல் அகற்றி அரித்தெடுக்க உபயோகிக்கப்படும் மண் அல்லது ஈயத்தாலான பாத்திரம்.
3) அரிக்கன் லாம்பு - மண்ணென்ணெயில் எரியும் விளக்கு ;ஹரிக்கன் காற்றில் கூட இந்த விளக்கு அணையாது என்ற அர்த்தத்தில் இந்த விளக்குக்கு ஹரிக்கேன் இலாம்பு என்று பெயர் வைத்தார்களாம். ஹரிக்கேன் அரிக்கனாக மருவி விட்டது.
ஈழத்தில் விளக்கை (இ)லாம்பு என்று சொல்வார்கள். லாம்பு என்ற வார்த்தையும் அன்னிய மொழியிலிருந்து தமிழுக்குள் வந்த வார்த்தையே .
உதாரணம்:
1) மாவரிக்க நல்லதா அரிதட்டு ஒண்டு வாங்க வேணும்.
2) அரிக்கன் சட்டியில அரிசியை அரிச்சால் அரிசியை விட கல்லு தான் கனக்க வருது.
3) இருட்டப் போகுது, அந்த அரிக்கன் லாம்பை கொளுத்தி வையன்.
Tuesday, December 15, 2015
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.
இன்றைய தேர்வாக எங்களூரில்
ஒவ்வொருவரினதும் காணிகளும் வீடுகளும் இன்னொருவரின் காணிகளிலிருந்தும்
வீடுகளிலிருந்தும் பிரிக்க வேலியோ அல்லது மதிலோ நடுவில் இருக்கும். அவை
பற்றிய அலசல் இன்றைக்கு,
- வேலி
- மதில்
வீடுகளை
சுற்றியும், வளவுகளைச் சுற்றியும் கட்டப்பட்டிருக்கும் இந்த அமைப்பில்
மதிலை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. காங்கிரீட் கற்களால் கட்டப்பட்ட
மதில்கள் அநேகமாக கல்வீடுகளைச் சுற்றி இருக்கும். பெரும்பாலும் வ்சதி
படைத்தவர்களின் வீடுகளிலும் காணிகளிலும் தான் மதில்கள்
கட்டப்பட்டிருக்கும்.
மற்றும்படி வேலிகளே எங்கள் ஊரில் எங்கு திரும்பினாலும் எல்லைக் கோடுகளின் அடையாளங்களாயிருக்கும்.
வேலியில் நாட்டும் கிளை . இது கிளுவந் தடிகளாலோ , பூவரசம் மரக் கிளைகளாலோ அல்லது சண்டி மரங்களினது தடிகளையோ வரிசையாக வளவின் எல்லயில் கதியால்களாக நட்டு வைப்பது வழக்கம்.
கிளுவங் கதியால் வேலி ஊரில் சகஜம்.
இது போல் பூவரசம் மரக்கதியால்கள், சண்டி மரக் கதியால்கள் என்று வேலிக்காக பல மரங்கள் பயன்படும். இது தவிர பனை மட்டை வேலி , தென்னை மட்டை வேலி, பனையோலை வேலி, கிடுகு வேலி போன்றவற்றையும் எங்களூரின் வேலி வகைகள்.
கிடுகு -
தென்னை ஓலைகளால் முடையப்பட்டு வேலியாக அடைக்கப் பயன்படும் . இது கிடுகு வேலி எனப்படும். விபரங்கட்கு https://ta.wikipedia.org சொடுக்கவும்.
(நன்றி: தமிழ் விக்கிபீடியா)
பனையோலை வேலி -
பனை மட்டைகளுடன் விசிறி போல் விரிந்திருக்கும் பனையோலைகளை மறைப்பாக வைத்து அமைக்கப்படும் வேலி.
நன்றி https://jaffnaheritage. wordpress.com
பனை மட்டை வேலி -
தடி வேலி -
மெல்லிய கிளைத்தடிகளால் பிணைக்கப்பட்ட வேலி அமைப்பு
வேலி அடைக்க பயன்படும் சாதனம்/ உபகரணம். குத்தூசி படம் தேடினேன் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள்.
காம்புச் சத்தகம் -
வேலி அடைக்க பயன்படும்

பொட்டு அல்லது வேலிப்பொட்டு
இரண்டு வீடுகளுக்கிடையிலான வேலியில் நட்போடும், தேவைக்காகவும்
அமைக்கப்படும் ஒரு சிறு வழி. சமயத்தில் சுற்றி வளைத்து போக வேண்டிய அடுத்த
தெருவுக்கு அப்படி சுற்றி வளைத்துப் போகமல் குறுக்கு வழிப் பாதையாகக் கூட
இந்த வேலிப் பொட்டுகள் உதவும்.
எங்களூர் வேலிகள்
வெறும் நிலப்பரப்புகளின் அரண்களாக மட்டுமல்ல ஊர்களின் ஒவ்வொரு
அயலவர்களினதும் உயிரோட்டங்களையும் தினசரி வாழ்வியலையும் தாங்கி நிற்கும்
அடையாளங்களாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு வீட்டு வேலியும் இரண்டு
பக்கங்களிலிருந்தும் பகிரப்பட்ட புதினங்கள், விடுப்புகள், சோகங்கள்,
சந்தோஷங்கள் என்று தன்னோடு வைத்திருக்கும்.
பிற்குறிப்புகள்
Mathu Suthany பனைமட்டையால் வேலி கட்டிப்போட்டு அதன் மேல் பாகத்தில்
இரண்டடுக்கு கிடுகு கட்டி அதற்கொரு கோடு போட்டதுபோல்
ஒரு வரிச்சும் கட்டிவிட்டால் பத்து வருஷம் அசையாமல் இருக்கும்
Monday, December 14, 2015
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.
பிட்டு
பிட்டு , இடியப்பம், பாண் போன்றவை காலை அல்லது இரவு உணவாக உட்கொள்ளப்படும்.
அப்பம் தோசை இட்டலி போன்றவை எப்போதாவது எல்லோரும் ஒன்றாக இருக்கும் ஓய்வு
நாட்களில், வாரக் கடைசியில் , அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் காலை
உணவாக உட்கொண்டிருக்கிறோம். கால மாற்றங்களும் , போர் சூழலும் , புலம் பெயர்
வாழ்வும் இந்த சுழல் வட்டங்களையும் , வகைகளையும் மாற்றியிருந்தாலும்
பெரும்பாலான மக்கள் இன்றும் இப்படியே உணவுப் பழக்கத்தை கொண்டவர்களாக
இருக்கிறார்கள்.
பிட்டு அல்லது புட்டு என்பது எத்தகைய பாரம்பரியமான பழமை வாய்ந்த உணவு என்று நான் சொல்ல தேவையில்லை. சிவபிரானே
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கிய கதை எல்லாம் படித்திருக்கிறோம்;
ஆகையால் பிட்டு என்ற உணவு வகை மிகப்பழமை வாய்ந்த உணவு என்பதில்
சந்தேகமில்லை. அத்தகைய பழமை வாய்ந்த உணவை இன்று வரை பெரும்பாலான ஈழத் தமிழ்
குடும்பங்களின் அன்றாட உணவாக இடம் பிடித்திருக்கிறது என்பது நமது
பாரம்பரியம் எத்தனை சந்ததிகளாய் புறக்கணிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
அது என்னவோ
நம்மவர்களிடம் பிட்டு அல்லது இடியப்பம் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிக
மிக குறைவு . எல்லோருக்கும் மிகப் பிரியமான உணவாக அது இன்று வரை
இருக்கிறது. பிட்டுக் குழைத்து அவிக்கத் தெரியாத பெண்கள் ஈழத்தில் இருந்தால் அது உலகின் அதிசயங்களில் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அந்தளவுக்கு பிட்டு எம்மோடு ஒன்றிப் போய்விட்ட உணவு.
பிட்டு பொதுவாக சிவப்புப் பச்சை அரிசி மாவில் கொதி நீர் விட்டு, அளவான உப்பு கலந்து மாவைக் கிளறி அழகழகான மணிகள் போல் உருட்டி எடுத்து அதனுடன் தேங்காய் பூ தூவி நீராவியில் வேக வைத்து எடுத்து பரிமாறப்படும்.
காலப் போக்கில் வெள்ளை அரிசி மா, சோளன் மா, ஒடியல் மா, குரக்கன் மா , அமெரிக்கன்(மைதா) மா, கோதுமை மா
(ஆட்டா மா) , உளுத்தம் மா போன்ற சகல மா வகைகளிலும் (வறுத்தோ அல்லது நீராவியில் வேக
பண்ணியோ அரித்தெடுத்த மா), தயாரிக்கக் கூடியதாக முன்னேறியிருக்கிறது.
எங்கள் ஊரில் பிட்டை இரண்டு விதமாக அவிப்போம்.
குழல் புட்டு
நன்றி :(http://tamilbeautytips.com/?p=12979))நன்றி(https://ta.wikipedia.org)
நன்றி :(http://www.arusuvai.com)
குழல் பிட்டு
குழல் பிட்டு என்பது மூங்கில் குழல்களில் பிட்டு மாவை போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது.
இப்போது அலுமினியம் போன்ற உலோகங்களில் புட்டுக் குழல்கள் தயாரிக்கப்படுகின்றன.
நீத்துப் பெட்டிப் /நீற்றுப் பெட்டி புட்டு
நன்றி(தமிழ் விக்கிபீடியா)
நன்றி: (yarl.com)
பனை ஓலையால் பின்னப்பட்ட கூம்பு வடிவான கலயத்தில் புட்டு மாவும் தேங்காய் பூவும் கலந்து போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது.
இப்போது
Steamer போன்ற வசதி கிடைப்பதால் நீத்துப் பெட்டி அருகி வருகிறது. அதுவும்
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நீற்றுப் பெட்டி கிடைப்பது
அரிதென்பதால் இந்த ஸ்டீமர் முறையில் அல்லது அலுமினிய புட்டுக் குழல்கள்
மூலம் பிட்டு அவிக்கிறார்கள்.
பிட்டு
எல்லாவிதமான கறி வகைகளுடனும் மட்டுமல்ல , முக்கனிகளோடும் , தேங்காய்
சம்பல், சீனி, சர்க்கரை , சொதி , முட்டைப் பொரியல், கருவாடு என்று எந்த ஒரு பக்கத்துணையுடனும்
உட்கொள்ளக் கூடிய உணவு வகை. ஆயினும் பெரும்பாலும் வாழைப்பழம், சொதி ,சம்பல்
போன்றவை அனைவராலும் தேர்வு செய்யப்படுபவை.
குரக்கன் மா பிட்டு, ஒடியல் மா பிட்டு, உளுத்தம் மா பிட்டு, கீரைப் பிட்டு என்று விசேஷமான பிட்டு வகைகள் இருக்கின்றன.
குரக்கன் மாவில் சர்க்கரை அல்லது பனங்கட்டி தூள்களை தேங்காய் பூவுடன் கலந்து அவிப்பார்கள்.
குரக்கன் மாவில் சர்க்கரை அல்லது பனங்கட்டி தூள்களை தேங்காய் பூவுடன் கலந்து அவிப்பார்கள்.
அதே போல் உளுத்தம் மா பிட்டு தேங்காய்ப் பால் கலந்து உளுத்தமாவில் தயாரிக்கப்படும் பிட்டு ஆகும்
. இந்த விசேட வகையான பிட்டை சாமத்தியப் பட்ட பெண் பிள்ளைகளுக்காக
தயாரிப்பார்கள். இந்த பிட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கிய கத்தரிக்காய்
கறியுடன் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள்.
கீரைப் பிட்டு என்பது முருங்கை இலைக் கீரை கலந்து வேக வைக்கும் பிட்டு.
Sunday, December 13, 2015
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.
ஆக்கினை
அகரமுதலி - ஆக்கினை
ஆக்கினை என்ற சொல்லுக்கு அகராதியில் பலவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவையாவன:
கட்டளை
உத்தரவு
தண்டனை
எனினும் ஈழத்துப் பேச்சு வழக்கில் இந்த ஆக்கினை என்ற வார்த்தை அன்றாட உபயோகத்தில் சிரமங் கொடுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற அர்த்தங்களிலேயே பெரும் பாலும் இடம்பெறுகிறது.
எங்கள் தாலாட்டுப் பாடல் ஒன்றில் இப்படி வருகிறது.
”ஆராரோ ஆரீவரோ
ஆரடித்து நீர் அழுதீர்?
அடித்தவரை சொல்லியழும்.
ஆக்கினைகள் செய்து வைப்போம்.”
யோகாசனத்தில் “ஆக்கினை தவம்” என்றொரு முறை இருக்கிறதாம்.
ஆக ஆக்கினை என்ற பதம் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.
உதாரணம்:
1) உதென்ன பெரிய ஆக்கினையா கிடக்குது?
(இது என்ன பெரிய தொந்தரவாக இருக்கிறது)
2) வரதன்ர ஆக்கினை தாங்காமல் தான் அவன்ர பெண்சாதி கிணத்துக்குள்ள குதிச்சவளாம்.
(வரதனின் கொடுமை தாங்க முடியாமல் தான் அவனுடைய மனைவி கிணற்றுக்குள் குதித்தாளாம்)
3) பள்ளிக்கூடம் போக மாட்டன் எண்டு இவன் ஒரே ஆக்கைனைப்படுத்துறான்.
(பாடசாலைக்குப் போக முடியாது என்று இவன் அடம்பிடித்து தொந்தரவு செய்கிறான்)
4) இப்பிடியே நீ அவளை ஆக்கினைப்படுட்திக் கொண்டிருந்தியெண்டால் ...ஒரு நாளில்லை ஒரு நாள் அவள் உன்னை கொன்றே போட்டுடுவாள்.
( இந்த மாதிரி அவளை நீ துன்புறுத்திக் கொண்டிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவள் உன்னைக் கொன்றுவிடுவாள்)
5) புதுச்சட்டை வாங்கித் தா எண்டு வீட்டில பிள்ளையளின்ர ஆக்கினை / ஆக்கினையை தாங்க முடியவில்லை.
(புது உடை வாங்கித் தர சொல்லி வீட்டில் பிள்ளைகளின் தொந்தரவு / தொந்தரவை தாங்க முடியவில்லை )
பிற்குறிப்புகள்:
Sadayan Sabu ஆக்ஙை என்பது தான் ஆக்கினை ஆனது ஈழத்தில். ஙை என எழுதுவதின் சிரமமானதால் குறுகி ஆனை ஆனது. ஆக்ஙை , கட்டளை என பொருளில் வரும்
***********************************
இளங்குமரன் தா புனித வேதாகம வசனங்களில் பொல்லாத ஆக்கினைகளிலிருந்து காப்பாற்றும்.. என்று ஆக்கினை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.
***********************************
ஈஸ்வர் சிவகிருஷ்ணன் ஆக்கினை- வடசொல். கட்டளை, அரசகட்டளை, உத்தரவு(உத்தரவும் வடசொல்) தண்டனை என்ற பொருளிலும் வரும் சிரசாக்கினை- தலையைவெட்டுதல்..... இச்சொல் இங்கு வழக்கில் அரிது இல்லையென்றே சொல்லலாம்....
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.
சாலம்
University of Madras Lexicon
சாலம்¹
Multiple matches found. Best match is displayed
n. jāla. 1. See சாலவித்தை. 2. Artfulness, pretence; நடிப்பு. சாலமென்னசொல்லுவேன் (பணவிடு. 316). 3. Multitude,company, flock, herd, shoal; கூட்டம். திரிந்தனசாலமீன் சாலம் (கம்பரா. வருணனை. 25). 4. Assembly, court; சபை. (பிங்.). 5. [T. jāla.] Net;வலை. அளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடும் (கந்தபு.திருநகரப். 18). 6. [T. jāla.] Latticed window;பலகணி. (பிங்.) 7. Flower-bud; அரும்பு. (W.)8. Slander; குறளை. (பிங்.). 9. cf. sāra. Learning;கல்வி. (திவா.) 10. cf. sāra. Medical science;வைத்தியநூல். (W.)
தமிழ் தமிழ் அகரமுதலி
சாலம்
கூட்டம்; மதில்; ஆச்சா; பலகணி; வலை; பூவரும்பு; கல்வி; தாழ்வாரம்; பெருமை; வஞ்சகம்; மாயவித்தை; நடிப்பு; சபை; அகலம்; குறளை; மருத்துவநூல்; கொடிமரம்; வகை.
J.P.Fabricius Tamil and English Dictionary
சாலம்
Multiple matches found. Best match is displayed
ஜாலம், s. magic, trick, மாயவித் தை; 2. a feigned promise, purposed delay, வஞ்சகம்; 3. a net, வலை; 4. multitude, company, flock, கூட்டம்; 5.a flower-bud, அரும்பு; 6. slander, குறளை.
சாலக்காரன், a hypocrite; an artful person.
சாலமாலம், tricks, artifice, evasion.
சாலம்பண்ண, to make a false promise without having a mind to fulfil it; to protract or delay; to play tricks.
சாலவித்தை, the magical art.
இந்திரஜாலம், legerdemain, jugglery.
இத்தனை அர்த்தம் சாலம் என்ற இந்த வார்த்தைக்கு இருப்பினும்
இந்த வார்த்தையை ஈழத்தில் நம்மவர்கள் பொய் பேசுதல், நடிப்பு போன்ற அர்த்தத்திற்கே பயன்படுத்துகின்றனர்.
ஒருவர் இன்னொருவரிடம் அன்பு, காதல் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் மீது அன்பும் காதலும் இருப்பது போல் நடித்து ஏமாற்றுவது,
சுயநலம், சூழ்நிலைக்கமைய நேரத்திற்கு ஒரு விதமாக தன்னை மாற்றி மாற்றி பொய்யாக இன்னொருவரிடமோ , அல்லது பலரிடமோ பழகுவது போன்றவற்றை சாலம் காட்டுதல் என்று சொல்வோம்.
குழந்தைகள் தங்கள் காரியத்தை சாதிப்பதற்காக அழுவது போல் நடிப்பது, கெஞ்சுவது , கொஞ்சுவது போன்றவற்றையும் விளையாட்டாக சாலம் காட்டுதல் என்று சொல்வோம்..
உதாரணம்:
1) தாய் யசோதாவிடம் சாலம் காட்டுவதில் கண்ணன் கை தேர்ந்தவன்.
2) ஏன் இப்ப உந்த சாலங்காட்டுறாய் எனக்கு?
( ஏன் இப்போது இப்படி என்னிடம் நடிக்கிறாய்)
3) உன்ர சாலங்காட்டுற வேலையெல்லாம் என்னட்டை வேகாது .
( உன்னுடைய நடிப்பு எதுவும் என்னிடம் செல்லுபடியாகாது)
4) என்ன சாலக்கார வித்தை போட்டு என்ர மகனை மயக்கிட்டாளோ தெரியாது
( எப்படி எல்லாம் நடித்து என் மகனை ஏமாற்றிவிட்டாளோ தெரியாது)
எங்க எல்லாரும் ஒருக்கா வந்து சாலங்காட்டுங்கோ பாப்பம்
பிற்குறிப்பு :
ஈஸ்வர் சிவகிருஷ்ணன் ஜாலம்- வடமொழி சொல், இந்திரஜாலம், மகேந்திரஜாலம் என்று கண்கட்டிவித்தையைக்கூறுவார்கள். அது பேச்சுவழக்கில் ஏமாற்றுபனைப்பார்த்து யாருகிட்ட ஜாலம்காட்டுற என வழங்குகிறது. இங்கும் அப்படித்தாங்க, கடன்வாங்கிட்டு என்னஜாலம்காட்டுறான் பாருங்க என்பார்கள்........ஜாலம், சாலம் ஆகிவிட்டது
ஜாலம், சாலம் என தமிழில் வழங்குகிறது அது வடசொல். கண்மா இந்த சாலமெல்லாம் என்னிடம் வேண்டாம், என்று சாலம், ஏமாற்றல், நடிப்பு, பசப்புன்னுகூடச்சொல்லலாம். பல வட்டாரவழக்கில் திரிதல் மருவுதல் எல்லாம் இயல்பாக இருக்குங்க.....பல அகராதிகளில் வடசொற்களும் சேர்த்திருப்பார்கள் அதனாலும் நாமும் மயங்க வேண்டியிருக்கும்......
**************************************
Semmalai Akash சாலக்கு காட்டுகிறாயா? அவன் சாலக்குகாரன் என்று சொல்வது வழக்கம். அவன் நல்லா சாலக்கா பேசி காரியம் சாதித்துவிடுவான் என்று சொல்வார்கள் ( சாலம்) என்பது எங்களுக்கு புதியதாக தெரிகிறது. சாலக்கு=நடிப்பு
**************************************
தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.
இரண்டு வினைச்சொல் சேர்ந்த வார்த்தைகளும் உண்டல்லவா?இன்று அவற்றையும் பார்க்கலாமே
வந்து கொண்டிருந்தேன் - வந்து கொண்டிருந்தன்
வந்து கொண்டிருக்கிறேன் - வந்து கொண்டிருக்கிறன்
வந்து கொண்டிருப்பேன் - வந்து கொண்டிருப்பன்
1) அண்டைக்கு ஆமிக்காரங்கள் வரேக்கில அம்மன் கோவில் வெளிவீதில தான் வந்து கொண்டிருந்தன்.
2) கொஞ்சம் பொறுங்கோ...இந்தா..பக்கத்தில தான் வந்து கொண்டிருக்கிறன்
3) நாளைக்கு இந்நேரம் யாழ் தேவில யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருப்பன்.
*******************************************************************
போய் வந்தேன் - போய் வந்தன்
போய் வருகிறேன் - போய் வருகிறன்
போய் வந்தேன் - போய்ட்டு வந்தன்
*******************************************************************
வந்து போனேன் - வந்து போனன்
வந்து போகிறேன் - வந்து போறன்
வந்து போவேன் - வந்து போவன்
*******************************************************************
அதே போல் ...
வந்துவிட்டு போனேன் - வந்திட்டுப் போனன்
வந்துவிட்டு போகிறேன் - வந்திட்டு போறன்
வந்துவிட்டு போவேன் - வந்திட்டு போவன்
*******************************************************************
திரும்பி போனேன் - திரும்பிப் போனன்
திரும்பிப் போகிறேன் - திரும்பிப் போறன்
திரும்பிப் போவேன் - திரும்பிப் போவன்
*******************************************************************
திருப்பி தந்தேன் - திருப்பி தந்தன்
திருப்பி தருகிறேன்- திருப்பி தர்ரன்
திருப்பி தருவேன் - திருப்பி தாறன்
இதே போல் ஆண் பால், பெண்பால், பலர் பால் வகைகளும் மூன்று காலங்களில் பொருந்தி வரும்.
உதாரணமாக
ஆண்பால்:
வந்து போனான் - வந்திட்டு போனான்
வந்து போகிறான் - வந்து போறான்
வந்து போவான் - வந்து போவான்.
*******************************************************************
பெண் பால்:
வந்து போனாள் - வந்திட்டு போனாள்
வந்து போகிறாள் - வந்து போறாள்
வந்து போவாள் - வந்து போவாள்
*******************************************************************
பலர்பால்
வந்து போனார்கள் - வந்திட்டு போய்ட்டினம்/வந்திட்டு போனவை/வந்திட்டு போனவையள்
வந்து போகிறார்கள் - வந்து போகினம்
வந்து போவார்கள் - வந்து போவினம்
(இன்னும் வரும்)
வந்து கொண்டிருந்தேன் - வந்து கொண்டிருந்தன்
வந்து கொண்டிருக்கிறேன் - வந்து கொண்டிருக்கிறன்
வந்து கொண்டிருப்பேன் - வந்து கொண்டிருப்பன்
1) அண்டைக்கு ஆமிக்காரங்கள் வரேக்கில அம்மன் கோவில் வெளிவீதில தான் வந்து கொண்டிருந்தன்.
2) கொஞ்சம் பொறுங்கோ...இந்தா..பக்கத்தில தான் வந்து கொண்டிருக்கிறன்
3) நாளைக்கு இந்நேரம் யாழ் தேவில யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருப்பன்.
*******************************************************************
போய் வந்தேன் - போய் வந்தன்
போய் வருகிறேன் - போய் வருகிறன்
போய் வந்தேன் - போய்ட்டு வந்தன்
*******************************************************************
வந்து போனேன் - வந்து போனன்
வந்து போகிறேன் - வந்து போறன்
வந்து போவேன் - வந்து போவன்
*******************************************************************
அதே போல் ...
வந்துவிட்டு போனேன் - வந்திட்டுப் போனன்
வந்துவிட்டு போகிறேன் - வந்திட்டு போறன்
வந்துவிட்டு போவேன் - வந்திட்டு போவன்
*******************************************************************
திரும்பி போனேன் - திரும்பிப் போனன்
திரும்பிப் போகிறேன் - திரும்பிப் போறன்
திரும்பிப் போவேன் - திரும்பிப் போவன்
*******************************************************************
திருப்பி தந்தேன் - திருப்பி தந்தன்
திருப்பி தருகிறேன்- திருப்பி தர்ரன்
திருப்பி தருவேன் - திருப்பி தாறன்
இதே போல் ஆண் பால், பெண்பால், பலர் பால் வகைகளும் மூன்று காலங்களில் பொருந்தி வரும்.
உதாரணமாக
ஆண்பால்:
வந்து போனான் - வந்திட்டு போனான்
வந்து போகிறான் - வந்து போறான்
வந்து போவான் - வந்து போவான்.
*******************************************************************
பெண் பால்:
வந்து போனாள் - வந்திட்டு போனாள்
வந்து போகிறாள் - வந்து போறாள்
வந்து போவாள் - வந்து போவாள்
*******************************************************************
பலர்பால்
வந்து போனார்கள் - வந்திட்டு போய்ட்டினம்/வந்திட்டு போனவை/வந்திட்டு போனவையள்
வந்து போகிறார்கள் - வந்து போகினம்
வந்து போவார்கள் - வந்து போவினம்
(இன்னும் வரும்)
Subscribe to:
Posts (Atom)
நன்றி (
நன்றி 

