Wednesday, July 19, 2017


பண்டாரவன்னியன்

“முல்லை மணி” வே.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய பண்டாரவன்னியன் வரலாற்றை ஆதாரமாக வைத்து  எழுதப்பட்டது இது

“முல்லை மணி” வே.சுப்பிரமணியம் அவர்களின் படைப்பை படித்ததிலிருந்து பண்டாரவன்னியன் என்ற நாயகன் என் மனதிலே அரியணை போட்டு அமர்ந்துவிட்டார். அன்று வன்னியில் தொடங்கிய வரலாறு இன்று வரை அப்படியே அச்சொட்டாக நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு புரியும்.

எத்தனையோ வகையான இலக்கிய வடிவங்களை படித்துவிட்டோம்; அதில் ஒவ்வொரு வகையிலும் நமது கைகளையும் நனைத்துவிட்டோம். ஆனால் வில்லுப் பாட்டு, நாட்டுக் கூத்து வடிவங்களில் கை வைக்கவில்லை....அதுவும் நாட்டுக் கூத்தின் இலக்கணமோ , வரலாறோ எதுவும் தெரியாது. அதனால் தள்ளியே இருந்துவிட்டேன்.

ஆனால் இம்முறை எமது தமிழ் பாடசாலை மாணவர்களை ஒரு கலை விழாவில் மேடையேற்ற வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்த போது புதிய வடிவில் மாணவர்களை மேடையேற்ற வேண்டுமென்று பள்ளியின் ஆசிரியைகளாகிய இந்திரா , நந்தினி & நான் விரும்பி என்ன செய்யலாம் என்று அலசிய பின் சரி பாட்டு நடனம் எல்லாம் மேடையேறியாகிவிட்டது. இனி தொட்டுப் பாராத விசயம் நாடகம், வில்லுப்பாட்டு தான்... வில்லுப் பாட்டு என்றால் கொஞ்சம் அதிக சிரமம் , நாடகம் என்றால் பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் உடனடியாக நாடகம் எழுதும் மனநிலையோ , ஆர்வமோ எனக்கு இல்லை. தவிர ஏற்கன்வே எழுதப்பட்ட ஒரு நாடகம் மேடையேறாமல் உடைப்பில் போடப்பட்டு கிடக்கும் போது புது நாடகம் எழுத மனம் வரவில்லை...

சரி நமது மண்ணின் வீரத்தை சொல்லும் பண்டாரவன்னியன் மாமன்னன் சரிதத்தை நாடகமாக எழுதலாம் என்று யோசித்தால் நாடகத்துக்கு வீர வசனம் எழுதியே என் ஆயுட்காலம் முடிந்துவிடும் போல் தோன்றியது...தவிர திரு முல்லை மணி அவர்கள் எழுதிய படைப்பே நாடக வடிவம் தான். அதை விட நம்மால் என்ன புதிதாக எழுத முடியும் ? சொல்லுங்கள் பார்க்கலாம்.. அது மட்டுமல்ல அவருடைய நாடக வசனங்களை படித்த போது வீரபாண்டிய கட்டப் பொம்மன் சிவாஜி தான் கண்ணுக்கு முன் வந்தார். பண்டாரவன்னியன் வரவில்லை...

அதனால் நாம் ஏன் பாட்டும் வசனமும் சேர்ந்த வடிவில் இந்த படைப்பை உருவாக்கக் கூடாது என்று தோன்றியது. ஒரு கதை சொல்லி மூலம் பண்டாரவன்னியன் சரிதத்தை சொல்லுவது போல் படைப்பை உருவாக்கலாம் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த ஆக்கம்.

இந்த ஆக்கம் மிக நீண்டதாக இருப்பதால் நமது மாணவர்களுக்காக ஆயிரதெட்டு வெட்டுக் கொத்தல் செய்து சுருங்கிய வடிவில் மேடையேற்றப்பட்டது வேறு விசயம். இது எந்த வெட்டுக் கொத்துமில்லாமல் உருவாக்கப்பட்ட அசல் ! இதில் முல்லை மணி அவர்களின் நாடகத்திலிருந்து இரண்டு வெண்பாக்களை சேர்த்திருக்கிறேன். மற்றவை அனைத்தும் என்னுடைய கைங்கரியமே...

மேற்கொண்டு இப்படைப்பை படிக்கும் முன் அனைவரையும் எச்சரிக்க விரும்புவது என்ன வென்றால்

நாட்டுக் கூத்து என்ற கலையின் அடி நுனி எதுவும் எனக்கு தெரியாது. அதில் ஏதோ மோடி வகை இருக்கிறதாமே..?..ஆனால் அவற்றின் வரவிவிலக்கணம் எதுவும் எனக்கு தெரியவே தெரியாது.
மரபு கவிதை எழுதுவதற்கான இலக்கண விதிகள் எதுவும் எனக்கு மண்டைக்குள் ஏறவே மாட்டுதாம்..

அதனால் அவற்றை பற்றி கவனிக்காமல் என் பாட்டுக்கு நான் எழுதியது தான் இது. படிப்பவர்கள் இதை எந்த வடிவாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை..ஆனால்...பண்டாரவன்னியனை பற்றிய கதையை உள்வாங்கிக் கொள்ளுமளவுக்கு எழுதியிருக்கிறேனா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்.. :) :)


பண்டாரவன்னியன்
முல்லை மணி” வே.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய பண்டாரவன்னியன் வரலாற்றை ஆதாரமாக வைத்து  எழுதப்பட்டது இது

காட்சி 1

விகடகவியும் அவர் குழாமும்  வருகிறார்கள்.

விகடகவி :
தந்தனத் தோம் தந்தோம்...தந்தோம்..தன தந்தோம் தந்தோமென்று
வந்தனங்கள் பல சொல்ல வந்தேனய்யா...இங்கு
சந்தனத் தமிழ் மணக்க தன்னுயிர் தந்து சென்ற
வன்னிமன்னன் கதை சொல்ல வந்தோமைய்யா…
கடை மன்னன் எங்கள் தங்க பண்டாரவன்னியன் திரு  கதை
சொல்ல வந்தோமைய்யா!!
ஐய்யா வந்து நின்று சபைக்கு நல்லதோர் வணக்கம் தந்தோமைய்யா!!

குழாம்:
ஐயா தமிழ் சபைக்கு ...நல்லதோர் வணக்கம் தந்தோமைய்யா!!

தந்தோம் தன தந்தோம்
தக தகிட தந்தோம் தன தந்தோம்..
தகிட தகதிமி தத்தி தகதிமி…
தளாங்கு தக தகதிமி…!!

விகட கவி : ஆலாபனை பாடுவது போல்  ஆஆஆஆ………………..என்று இராகம் பாடுகிறார்…

விகடகவி :  (வசனம்) அதாகப்பட்டது…தாய்மார்களே...தந்தைமார்களே..!!

குழாம் : அம்மாமாரே அப்பா மாரே

வி.க:  கூடியிருக்க்கும் தோழர்களே தோழியரே….!!

குழாம் : ஓமோம் தோழர்களே தோழியரே

விகடகவி : இன்று...இங்கு

குழாம் : ஓமோம்..

வி.க:  ஸ்டேட்டண்ட் ஐலண்ட் தமிழ் பள்ளி சார்பாக….

குழாம் : ஓமோம் தமிழ் பள்ளி சார்பாக..


வி.க : (பாடுகிறார்)
அண்டம் மருவிய ஆழ்கடல் தன்னில்

குழாம் : ஆழ்கடல் தன்னில்

வி.க: ஆழி சுழி தள்ளி துப்பிய தீவு’

குழாம்: எங்கள் தீவு

வி.க: ஈழத்தீவு

குழாம் : ஓமோம் அது எங்கள் ஈழத்தீவு..

விகடகவி : அண்டம் மருவிய ஆழ்கடல் தன்னில்
        ஆழிபெருஞ்சுளி தள்ளி துப்பிய தீவு
        கெண்டை தமிழ்நிலம் ஈழதிருநாட்டின்
தீரம் மிகு பண்டாரவன்னியன் திரு சரிதம்
கொண்டு வந்தோமய்யா...வந்தோமைய்யா
கூடிய தமிழ் முன்னால் {கொண்டு} வந்தோமைய்யா!!

குழாம்:

ஓமோம் கொண்டு வந்தோம் கொண்டு வந்தோம்
இங்கு கூடிப் பரவிய தமிழ் முன்னால்
கொண்டு வந்தோம். ‘


விகடகவி: (வசனம்) அதாகப்பட்டது...அன்றொரு காலத்தில் , உலகெங்கும் ஒரு குடை கீழ் கொண்டு வந்த வெள்ளையன் காலத்தில் அடங்கா மண்ணாய் நிமிர்ந்திருந்த எங்கள் தேசம் .. வன்னி நிலம் எப்படி இருந்தது தெரியுமா?

குழாம் : தெரியுமா? தெரியுமா??

விகடகவி: அதாகப்பட்டது… எண் திசையும் புகழோச்சும் , எங்கள் பொன்னான வன்னி மண் எது என்று தெரியுமா?

குழாம் : தெரியுமா? தெரியுமா??

விகட கவி : கேளுங்கள்…..

குழாம் : சொல்லுங்கள்

விகட கவி:

எல்லை வடக்கில் எழில் யாழ் பரவுகடல்
பல்லோர் புகழருவி தெற்கெல்லை - நல்லதிருக்
கோணமலை கீழ்பால் கேதீச்சரம் மேற்கில்
மாணத் திகழ் வன்னி நாடு. எங்கள் நாடு..!!

குழாம்:  ஓமோம்...தமிழ் மானத்திகழ் நாடு எம் வன்னி நாடு!!



வி.க :  

பண்டை தமிழ் மண்ணை அன்னை திருவாக
கொண்ட மானத் தமிழ் மன்னன்
எங்கள் பண்டார வன்னியன் !!
தண்டமிட்டு மண்டியிட்டு தலை குனியா
கொண்ட மானம் பெரிதென்று
கொண்டவன்..எங்கள் தங்க தமிழ் பண்டாரவன்னியன்

குழாம் : எங்கள் தங்க தமிழ் பண்டாரவன்னியன்

விக :

அன்னை பூமியென் றும் அடங்காப் பற்றாம்
வன்னி மண்ணின் மானத்தைக் காத்திட
தன்னுயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மா
மன்னன் பண்டார வன்னியன்

குழாம் :

எங்கள் மன்னன் பண்டார வன்னியன்!!

வி.க :
(வீர வசனமாகவும் சொல்லலாம்)

அண்டமெல்லாம் நடு நடுங்க ஆண்ட வெள்ளையனை
கொண்டை முடியளவு கூட மதியா மன்னன் மாவீரன்..!!
தண்டை முழங்க சமர்வென்ற தமிழ் தந்த மன்னன் சபையில்
அண்டைக்கு ஓர் நாள்…...ஆனதொன்று கேளீரே…!!


பண்டாரவன்னியன் வருகிறார்.

தந்தோம் தக தக தக...திந்தோம் திண தின தினதக….தினதக
வந்தேனே வந்தேனே பண்டாரவன்னியன் வந்தேனே
அண்டம் சடசடக்க  அகண்ட வானும் இடியிடிக்க
தண்டை சத்தம் சலீர் சலீரென செங்கறு வீரவேங்கை வந்தேனே
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனே….

வி.க &  குழாம் :  (ஒரு இராகம் கலந்த வசனமாக சொல்லவும்)

ஐயன் வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தாரே…!!

அண்டம் சட சடக்க ….அண்டம் சட சடக்க
அகண்ட வானம் இடியிடிக்க ... இடியிடிக்க
அண்டம் சட சடக்க ….
அண்டம் சட சடக்க
அகண்ட வானம் இடியிடிக்க ... இடியிடிக்க
அண்டம் சட சடக்க ….
அண்டம் சட சடக்க
தண்டை சத்தம் சலீர் சலீரென வந்தாரே…வந்தாரே!!
குலசேகரன் , வயிரமுத்து , பண்டார வன்னியன் வந்தாரே..!!
எங்கள் ஐயன்..
குலசேகர வயிர முத்து பண்டார வன்னியன் வந்தாரே..!!

(fast)
அண்டம் சட சடக்க ….
அண்டம் சட சடக்க
அகண்ட வானம் இடியிடிக்க ... இடியிடிக்க
அண்டம் சட சடக்க ….
அண்டம் சட சடக்க
தண்டை சத்தம் சலீர் சலீரென வந்தாரே…வந்தாரே!!
குலசேகரன் வயிரமுத்து பண்டார வன்னியன் வந்தாரே..!!
எங்கள் ஐயன்..
குலசேகர வயிர முத்து பண்டார வன்னியன் வந்தாரே..!!

(வசனமாய் இராகம் பாடல்) அதாகப்பட்டது…………

ஆயிரஞ் சேனை பலசாலி…
அவன் வானமளக்கும் உயர் ஆலமரம்,
கோல மதயானையொற்றி கோமான் நடக்கும் அழகு பாரீர்!!
போதொடு தான் வளர் தம்பி இரு பெருமாவீரர் அருகில் பாரீர்!!
பாரீர்!!!

குழாம்: அழகு பாரீர்….பாரீர்...பாரீர்

காதோடு செண்டு அள்ள,
அள்ள..
கண்ணென்றிரு கெண்டை துள்ள
துள்ள
மானின் மிரள் அழகோடு
மதி வதனத்தோடு
அவன் உயிர் மாற்றாய் தங்கை பாரீர்!!
பாரீர்..பாரீர்!!

குழாம் : பாரீர் பாரீர்

போதாது என்று சொன்னாலின்னும் (2 அல்லது 3 தடவை குரல் உய்ர்த்தி)
அவர் பின்னால் சேனை பல பாரீர்..பாரீர்

குழாம்
அணி பாரீர்!! பாரீர்!!

வி.க:
வாளோடும் வரி அம்போடுமல்லால்
மறை கூரோடு அறிவும் அயுதமாம்
சீரார் பலர் படை சூழ
எங்கள் சீமான் மன்னன் வருமழகு பாரீர்…
பாரீர்!!

குழாம் : பாரீர்...பாரீர்

வி.க:

பாரோர் கண் பட்டு களிக்க ,  
நாளெல்லாம் நா திரு(ஷ்டி)ட்டி கழிக்க
பாதி நாள் போதாது பாரீர்!! பாரீர்!!

குழாம் : பாரீர்...பாரீர்

வி.க:  (வசனம்)

ஆரங்கள் அலங்கரித்து நம்மரசன்
நடை  அழகு சொல்ல உமக்கு
பாரங்களாய் பல ஏடு வேண்டும்
தமிழ் பாடலில் பாட
புது சொற்களும் வேண்டும்
தேகமெல்லாம் ஆரத் தழுவி
அவன் தேவி காதல் படிக்கவென்றால்
காதல் நகக் கோலங்கள் போட
(அங்கு) காத வழியில்லை (அவன்) மார்பில்
வீர தழும்புகள் வரி பார்த்து மங்கை
வடிவாய் வீர வரலாறு மட்டும் பாடிப்பாள்…

ஆடலிசை கூடி ஆயகலைகள் (ளைனத்தும்)
அரங்கேறும்
பாவலர் பாட்டிசைக்கு நடுவில்
பண்டாரவன்னியன்
சீலக் கொலுவிருக்கும் கோலம்
பாட
ஒரு நூறு அகராதி போதா…
கோடானுக் கோடி வார்த்தை
கோர்த்து வர நாள் பல போதா…

(வசனம்) அதாகப்பட்டது...இப்படியான அதியுயர் தகுதிகொண்ட
எங்கள் அரசன் மக்கள் மன்னன்
தன் கொலு மண்டபத்தில் அமர்ந்து
மந்திரிகளோடும், தம்பிமார் கைலாய வன்னியர், பெரிய மெயினார் ஆகியோரோடும்  ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும்
வேளையில்….


ப.வ:

மாதம் மும்மாரி பொழிகிறதா ??
மாடு கண்டு சனமெல்லாம் நன்றா?
எண்டு வீணே விடுப்பாய் கேளேன் உம்மிடமே
என் தேச துயர் எலாம் யாமறிவோமே!2…

சந்தப் பாட்டாய் வாழ்கையிருந்த பொழுதுகள்
இந்தக் காலத்தில் ஓய்ந்து போனது கண்டேன்
சொந்த வீட்டோடு உறவும் சுற்றமும் சூழ
பந்தங்கள் கொண்டாடும் கோலகலமும் காணேன்
சித்திர தேரேறும் கோவில் குளங்களேதும்
தட்டும் மேள தாளமொன்றும் கேளேன்
வேட்டை வலம் வரும் முருகன் விழா கூடா
ஒரு பாட்டுக்கு முடங்கிய துயர் தாளேன்

என்றிந்த அந்நியன் எம் மண்ணில் வந்தானோ
அன்றெமக்கிந்த  ஏழரை சனி திசை தந்தானோ
ஆங்காங்கு போரும் உயிர் தின்ற சாவுமாய்
வாழ்விங்கு போய்க் கொண்டிருக்கு நாசமாய்
கொன்று புதைக்க வெறி ஏறுது சிரம் மேல்
கொண்டை முடி அறுத்து துரத்த வேணும் அவனை
அண்டை தமிழ் மன்னன் எல்லாம் திரண்டு
ஒருங்கில் அரணாய் படையொடு வந்தால்
சண்டையிட்டு சதிகாரனை ஒரு சத்தமில்லாமல்
துரத்தியடிப்பேனே….!
அந்த நிலை தான் நம்மிடையே ஆகிதில்லை பாரேன் தம்பி!
என்றெம் மக்கள் ஒன்று சேர்வார்?
எப்போதிந்த அந்நியர் ஒழிந்து போவார்?


கை.வ:
ஊரெல்லாம் கொள்ளை நோயாம் அண்ணை
பயிரெல்லாம் மழையில்லாமல் வாடுதண்ணை
சீரெல்லாம் சீரழிந்து போய் நம் தேசமெல்லாம்
ஒப்பாரி ஓலங்களண்ணை!!    
முன்ன மாதிரி மும்மாரி பெய்ய வேண்டுமெனில்
எம் கருமாரி அம்மாள் மெய் குளிர வேணும்
செம்மாரி துப்பும் யுத்தம் நின்று நம் எம்மக்கள்
செழிப்புடன் வாழ வழி வேண்டுமண்ணை..

பெ.மெ:
எப்போர் வந்தாலும் எவ்வுயிர் போனாலும்
செத்தாலும் நம் தமிழ் வாழ வேண்டும்
நப்போல் வளையாமல் நாம் நேர் நின்று ‘
நல்ல வழி அரசாள வேண்டும்..
மக்கள் பசிக் கொடுமை தீர்க்க வழியமைக்க
எங்கள் நெற்களஞ்சியங்கள் திறந்து வையாய்!
பஞ்ச வரட்சி ஓட வற்றாப்பளை அம்மன்
பங்காய் பாங்காய் மனம் குளிர்விப்பாய்!

ப.வ :
நாட்டில் ஒரு உயிரும் வீட்டிலுணவில்லை என
வன்னி ஆட்சியில் அழ வேண்டாம் தம்பி!
நம் மாட்சிமையில் மாசு வேண்டாம் தம்பி .
குடி மக்கள் மனம் குளிர்ந்தால் போது நம்பி!.
கோயில் குளமெல்லாம் மேளம் கொட்டட்டும்
வற்றாப்பளை அம்மன் கோவிலில்
பொங்கல் பொங்கட்டும்!!!
நாற்புறமும் கொட்டும் முரசம் கேட்டு
நம்மக்கள்  
நல்ல மகிழ்வோடு மனம் துள்ளட்டும்..!!

(பெரிய நாச்சியார் (பண்டாரவன்னியன் தாயார்) :

நாட்டு நலனும் பார்க்கும் போதினில்
கொஞ்சம் வீட்டு விசயமும் பாராய் மகனே
பார்த்து பல ஞாயிறாச்சு என்று பகர்ந்தாள்
உன் அருமை மனைவி கேளாய் மகனே!
வீட்டில் ஒரு குமர் கரை சேர்க்க வேண்டும் கெதியில்
என்று ஒரு ஏக்கம் எனக்குண்டு மனதில்..
சான்றும் சான்றோன் பலவானாய் பார்த்து
மாற்று மாலை போடவேண்டும் உடனே!!

கை.வ

வேண்டாம் விடு மனக்கவலை தாயே!
கை விடுவமோ எம்முயிர் நாச்சி தனையே!
தங்கப் புதையலாய் வந்த தங்கச்சி
தரித்திருக்கும் எம்முயிர் அவள் கட்சி!

பெ.மெயினார்:

வேங்கை புலி வழி வந்த மான் அவள்
அழகு சீலம் மட்டுமல்ல வீரதிருப்பிடம்!!
கோல மயில் தானெனினும் கோமகர்கீடா
கோதை அறிவுச் செருக்கேறிய திருவாம்!
ஞானகொலு எழில்  என் தங்கை தனை மணக்க
இங்கெவர்  ஈடாய் இருப்பர்?
என் கொழுந்து பொற்கமலம் கரம் பிடிக்க
வெறும் செப்புக் கரங்கள் போதா!!

கை.வ:
கோல மயில் இவளுக்கிணையாய்
எம் குலத்தில் -,
வன்னியர் இனத்தில்..,
தமிழ் புலியாய் தரணியில் ஒருவன்,
மாமன்னன் காக்கை வன்னியன் தானே??
வீரம் , தீரம் ,  என்று  இணையாய்
மூளை சாதுரியமும் நல்ல நிறைவாய்
கோலத் திருமகன் அவனே…
நம் சாதி , சனத்தில் உயர்வாய்
சீலன் திரு காக்கை வன்னியன்  தானே??
அவன் சித்தமும் இவள் மட்டும் தானே??

ப.வ :
நன்று சொன்னாய் என் சின்னவனே
நல்ல பொருத்தம் அவன் தானே
தங்கை தனை கொடுத்து அவனுக்கு
சொந்தமாக்கி விடு அவனை நமக்கு!

என்றாலும் ஒரு சொல் கேள் அவளை
இத் திருமணம் நாளை அவள் வாழ்கை
மனக்கிடக்கை தனில் விருப்பம் எனில்
கணப் பொழுதும் தரிக்காமல் காரியம் செய்

(எல்லோரும் நாச்சியாரை பார்க்கின்றனர், நாச்சியார் வேதனையுடன் அவ்விடத்தை விட்டு ஓடிவிடுகிறாள்)

ப.வ:
ஹஹஹ (சிரிக்கிறார்)
ஓடி போகுது புள்ளி மானாய்…
வெட்கம் பிடுங்கித் தின்னுது தேனாய்
கோடித் தங்கத்தீடாய், பெருமாட்டி
எங்கள் கோலத்திருமகள் சொக்கத் தங்கம்!!

பெ.நா:(தாயார்):

அது நாணமில்லையென்று நானறிவேனே
அவள் மனதில் நாட்டமில்லையென்று
இந்த தாயறிவேனே
கேடு சில வரப் போகுதெண்டு
மனவேடு துடிக்குது பயத்தோடு
விதி விளையாட்டில் என் மகள் பலியாய்
குல நாசம் கெதியாய்
வருமோ வலிதாய்??

ப.வ:

அன்னியனே நடுங்கும் அண்ணனை
அடங்காப்பற்று அரசனை
சென்னி குனிய வையாள் , என் நல்ல தங்காள்
சொப்பனங்களும், கற்பனைகளும்
வீணே வேண்டாம்
தாயே கவலை வேண்டாம்
அவள் மனநிலை மறந்து
ஒரு விருந்து, மருந்துக்கும் நடவாது
கருது!!



காட்சி 2
(நந்தவனம். நாச்சியாரும் புலவர் புவியழகனும் உரையாடல்)

புவியழகன்:

கட்டுக்கடங்கா மத யானை தேகம்,
களிறு பிளிறும் கடிதென  வேகம்
செப்புக்குளடங்கா செந்தமிழ் ஞானம்
செருக் கொண்ட புலவன் புவியழகன் நானே!!

கட்டுக் குலையா மங்கையவள்
மன்னன் தங்கையவள்
நாச்சியார் மனம் வென்றவன்…!!
அற்ப ஏழை தானவன் ஆயினும்
அன்பால் காதலில் செல்வந்தன்!!

பட்டுத் தளிர் மேனி பெண்ணவள்
முற்றும் முழுதாய் காதலுடன் என்னவள்
எட்டி தொட முடியா உயரத்தில்
வைத்திருக்கின்றனர் அவள் அண்ணர்கள்!!
விட்டு அகல முடியவில்லை
அவள் அன்பினால் கட்டி வைத்தாள் கைதியாய்
எட்டி இந்த சேதி தெரிந்திடில்
சிறையிட்டு வெட்டி வைப்பர்  தமையனார் செம்மையாய்!!

(நாச்சியார் வருகிறார்)
நாச்சியார்:
சாதி சனம் பார்க்கவில்லை காதலில்
தமிழ் பாடி என்னுயிர் மேவிய ஏந்தலே!
வீடு ஏகும் எண்ணமோ விட்டு என்னையே
காடு செல்லும் என் பிணம் நீரில்லையேல்!!


புவி:
எல்லாமும் அறிந்தவனென்றிருந்தேன்
இன்றுன் காதலில் விழுந்தே - இனி
என்ன செய்வதென்றறியேன்…!
அறிவுக் கண்ணைக் கட்டிய காதல்
என் கையையும் காலையும் கட்டியதே..

நாச்சியார்:

போதுமிந்த புலம்பல்…
தமிழ் புலமைக்கு ஏனிந்த அலம்பல்?
காலம் ஒரு நாள் இந்த கண்டம் கொண்டு வருமென்று
நானும் பயந்திருந்தேன் நாளும்
அந்த நாளும் வந்ததின்று…பாரும்!
கூடி கலந்து பேசி ஒரு கூறை பட்டுடுத்தி
காலத்தில் எனை கரை சேர்க்க
கலியாணப் பேச்சு நடக்குதங்கே!!

தேடி ஒரு வழி தெரியவில்லை
போடி என நீரும் போகும்படி சொன்னால்
நாடி விடுவேனென் உயிரை
உம் தமிழில் எழுதி வையும் என் சொல்லை!

புவி:
மேட்டுக்குடி மன்னன் தங்கை நீ எழிலே
ஒரு மாற்றுக் குறையா தங்கப் புதையலே
உன் காற்றைத் தன்னும்   தொட தகுமோ என்
பேற்றை யறிந்தும்  ஏனிந்த பேதமை??

உயிர் மாற்றாய் உனை போற்றும் அண்ணன்
என் எண்ணம் தெரிந்தால் உயிர் எடுப்பான்
கழுவேற்றி என் கதை முடிப்பான் - தெரிந்தும்
காதல் மிகக் கொண்டது என்னே சொல்..
உன்னை பிரிந்தால் உயிர் விடுவேன் தங்கமே
உனை நினைத்தாலும் உயிர் தங்காது திண்ணமே
வினைப் பயன் என்னவோ விதி எழுதியது யாரறிவார்
தனை மறந்த காதல் கொல்ல சேனை படை திரள் வரும் கணமே!

நாச்சியார் :

எதுவரினும் என் உயிர் பிரிவிலும் உமை தவிர
வேறோர் உறவு ஏற்கேன் அன்பரே.. - எனை விட்டு
ஏகி வேறிடம் செல்ல ஏது நினைவிருந்தால்
உமை கொல்லும் முதல் புலி நான் தான்!!

புவி:
(அதிர்ந்து)

அடி பாவி...ஆரம்பத்தில் காதல் மொழி பேசி
மடி வீழ்த்தி அரவணைத்தாய் கொடி போல்
கடி தென மாறி அரவந்தனையிணையாய்
விடம் துப்பி கொலை மிரட்டல் பகர்வதென்ன தேனே??

நாச்சி: (சிரித்து)
வேறென்ன சொல்வதாம் உம் பயப்பிராந்தி தனை பார்த்து
கூறாக எனை பிளந்தாலும் ஒவ்வொரு துளி அணுவும்
கூறும் உம் பெயர் மட்டும் தானே என்றறிந்தும்
பாராமல் போக துணிந்தால் பாரில் நான் என்ன செய்வது கூறும்??

புவி:
காதலில் எது வரினும் கடி துயர் தரினும் - சாயேன்
பாவையுன் பார்வை ஒன்று போதும் பலமாகும்
படைதிரண்டு வந்தாலும் எதிர் கொள்வேன்
கடி மணம் புரிவேன் கயல் உனை மறவேன்…!!

(நாச்சியாரும் புவியழகனும் ஒன்றாக இருக்கும் அந் அந் நேரத்தில் காக்கை வன்னியன் பூங்காவினுள் நுழைகிறான்)

காக்கை வன்னியன்: (பாட்டு)

தட்டத்தடதட…...தடதடவென வ்ந்தேனே…வந்தேனே
கன்னியர் கனவின் காதல் நாயகன்
காக்கை வன்னியன் வந்தேனே
எட்டு திக்கும் சுற்றிப் பார்க்கினும்
எங்கெவன் எனக்கிணையாவான்???
பச்சைக் கிளிகள் கொத்திக் கொண்டேகும்
நாவல் பழம் போல்
தொட்டுச் செல்லும் காத்தும் நின்று
மூச்சு வாங்கும் சுந்தர வதனன் வந்தேனே
கண்ணுக்கினிய மன்மதன் மறு பிறவி
வன்னிமண்ணில் வந்துதித்து
வந்தேனே..வந்தேனே!!


(நாச்சியாரும் புவியழகனும் காதலில் மூழ்கி இருபப்தை கா.வ பார்த்து கோபமடைகிறான்..)

ஆரடா நீ , என் ஆருயிர் அணங்கை அரவணைத்த அரவா!
சீர் பெரும் மன்னன் தங்கை , தங்கச் சிலையை
ஊர் பெயர் அறியா புலையா ஏழை மடையா
எங்கணும் தொடுவாய் இழி ஞமலி …..

(ஆத்திரத்தில் அவனை இழுத்து தள்ளிவிடுகிறான்)

நாச்சி:

நில்லும் வன்னியரே..!
நிதானம் நிலை குலைந்த சண்டியரே!
என்ன மதியோடு இங்கு வந்தனை  
எந்த அனுமதியில் இடம் புகுந்தனை??
சிந்து ம் வார்த்தைகள் சிந்திக்க வேண்டாவோ
என்னை உம் உரிமையென்ரு யார் எழுதி தந்தனரோ??


கா.வ:

மன்னு புகழ் மன்னன் தங்கை நீ
என் மனைவி எனிமேல் நீ
என்ற விதி எப்பொழுதோ   வரித்திருக்க
இங்கிவனை நீ கொஞ்சி மயங்கினையோ
இந்த ஏழை ஞமலியிடன் இரஞ்சினையோ
மன்னர் குல மங்கை ஒரு மண் காசு பெறா புலவனிடம்
என்ன பேச்சு தனிமையில் இது தானா உன் வளர்ப்பு

புவி
வார்த்தைகளில் கவனம் வேண்டும் காக்கையா
உன் வாள் மட்டும் பேசாது பக்குவமாய்
சேட்டையெனில் என்னுடன் இனிமேல்
போர் பார்த்திடலாம் வா வாளில்..!1

கா.வ:

என் வாளுக்கு இரையே  உன் தலையே
இன்று முறையே
ஒரு கோலுக்கு சமானாக சனியே
வா வெளியே சமர் புரிய…
தோளுக்கு கரமில்லாமல் வார்ந்து
உன் தோல் உரித்து வாசலில் உலர்துவேன்
பாலுக்கு ஆசைப்பட்ட சேரி பூனை
உன் சாவுக்கு நான் பாலூற்றுவேனே!!

(இருவரும் வாள் போர் புரிகின்றனர்.. அப்போது அங்கு வரும் பண்டாரவன்னியனும் தம்பிமாரும் அதிர்ந்து போகின்றனர். கா.வ தோற்றுப் போகிறான்..புலவன் வேடம் கலைய இளவரசன் நிற்க எல்லொரும் அதிந்து போகின்றன்ர்)

ப.வ::
அன்றே நினைத்தேன் இவன் அறிவில் புலவனாயினும்
எங்கோ ஒரு இராச களை இவன் முகத்தில் தெரிந்ததென்று
என்னே இது வேச நாடகம் ஏனிந்த திரை மறைவு வேவு??
முன்னே வந்து செப்பும் முறையாய் நீர் யாரென்று கூறும்

புவி:
அன்பால் நாச்சியார் தனை சேர அரச உடை களைந்து வந்தேன்
என்பால் இருப்பதை விட என்பால் மட்டும் அவள் வர வேண்டி
தென்பாலிலங்கை மன்னன் நுவரவன்னியன் மகன் குமரசிங்க வன்னியன் யான்
உம்பால் பொய்யுரைத்தமைக்கு இப்பால் மன்னிப்பு இறைஞ்சினேன்!!

ப.வ:
ஆஹா...ஆஹா
நண்பன் மகனா நீ நல்ல விசயம் தான் …
தங்காய் உன் சித்தம் போல்
குமரசிங்கத்தை துணையாய் தருவோம்
பண்பால் உயரிய வம்சம் நம் வன்னியர் அம்சம்
கண் போல் காக்க வேண்டியது உன் கருமம்   
விண் போல் வாழ வேண்டும் நீங்கள் இருவரும்!!

(நாச்சியார் மகிழ்ச்சியுடன் ஓடி போகிறாள்)
(கீழே விழுந்த கா.வ ப.வ எழுப்பி விடுகிறான்)

ப.வ

நாமொன்று நினைக்க அவர் காதல் வேறொன்று விதைக்க
பார் இந்த விளைவு ,
என்றாலும் ஏதோ ஒரு பாதையில் நல் விளைவு
சீ என்று எண்ணாதே சீராளா…!!
அவள் சித்தம் தான் எம் சொத்து  தெரிவாயா??
மாரோடூ தூக்கி வளர்த்த என் மயில்
அவள் மகிழ்வே என்றும் என்  உயிர்!!
குறையொன்றும் நினையாதே தோழனே ..
மனக் குறை விடுத்து எழுந்திரு மைந்தனே!!

(கா,வ  மிகவும் மனவேதனையொடு எழும்புகிறான்...பண்டாரவன்னியன் முன்னே போக கா.வ பின்னாலிருந்து கறுவுகிறான்)

கா.வ

என்னையா எட்டி தள்ளினாய்  மடையனே
இனி உனக்கும் எமன் நான் தானடா மூடனே
இன்று முதல் வெள்ளையன் என் தோழனே
வலை விரித்து  உனை கொல்லுவான் இந்த வன்னியனே!!

காட்சி 3

விகட கவி :

இப்படியாக தானே மன்னன் பண்டாரவன்னியன் ஆண்டு வந்த நாளில்….

(பாடுகிறாள்)
உற்ற உயிராய் தேசமும் , உயர் மானமும் கொண்ட வீரமும்
நற்றமிழ் மொழி உணர்வும், இன பாசமும்  முற்றிய மன்னன்
சுற்றியிருந்த பகை கண்டஞ்சான்...படை வென்றான்
கப்பங்கட்ட சொன்னால் கழுத்தறுத்து,
பகை வென்றான்

ஓரங்கட்டியே பகை விரட்டி ,
படை திரட்டி
பனங்காமம் முதல் அடங்காப் பற்று வரை
கோலோச்சிய எங்கள் வீரன் , தமிழ் சூரன்
நிலை கொண்டான் தமிழ் வரலாற்றில் ..


வன்னிப் படை அனுப்பி , மத்தியில் கண்டி போரையும் நடத்தி
கடையில் காக்கை வன்னியன் நரி போல் புகுந்தான்…
சொந்தப் பகையை பழி தீர்க்க அன்னியனுடன் குலவி
சொந்த இனத்தை அடி வீழ்த்த மனங்கொண்டான் ...மாபாதகன்..!!

அன்றொரு நாள் காக்கை வன்னியன்  பண்டாரவன்னியன் அரண் நோக்கி வந்தான் நண்பனை போல்….

காவலன் வந்து ப.வன்னியனை வணங்கி

காவலன் :
கொன்றை வேந்தன் கொலுவே!
வீரம் வென்ற மறவர் அமுதே!!
வன்னி மண்ணின் உயிர் மூச்சே!!
வணங்காமுடி தனி அரனே!!
கண்ணின் கண்ணான உயிரே -எங்கள்
மண்ணின் காவல் அரனே!
பண்ணிலினிய தமிழ் மகனே - எங்கள்
பரனே பண்டார வன்னியரே!
கொண்டு வந்தேன் ஒரு சேதி
அரண் வாசலில் காக்கை வன்னியன் மேவி
வந்து நிலை கொண்ட வீறு அட ..பாரு..!!
வல்ல படை சேனாதிபதியோடு..!
வாசல் நிலை கொள்ளா தாறுமாறு..
சுற்றி வர சேவகர் நூறு!
முரசூதும் மறவர் பிற நூறு!!
பரி ஏறிய படை ஒரு  முல்லை ஆறு…
களியேறிய மடை யாறு...எழில் பாரு!
சாமரம் வீச எழில் நங்கையர்,
சாரட் வந்த வழியெல்லாம் மலர் செண்டைகள்
பாரம் சுமந்த சிவிகையர் தோளில் பின்னால்
பரிசம் ஏந்திய பாவையர் பல நூறிவர்
தேடியே வந்து நிற்கும் திரள் சனம்
பின்னால் தீரனும் வீரனுமான காக்கை வன்னியர்
காவல் இருக்கும் சேதி கொண்டு வந்தேன்
இந்த காவலன் உம்மை நாடி!!

ப.வ:  
ஆஹா….மாவீரன் , மதியுகன்
எம் சிநேகன் காக்கையன் வந்தனனோ??
வாசல் வந்து நின்றனனோ??
தேடி எமை சீரோடும் திறையோடும்
வந்தேகினென் எனில் -
வாரும் இளவலரே வாசல் போய்
ஆரத் தழுவி அவனை , அரண் உள்ளே
அழைத்து வாரும் உடனே!!

(பெரிய மெயினாரும் கைலாய வன்னியரும் தலை வணங்கி போகின்றனர்)

காக்கை வன்னியன் எண்ட்ரி

ப.வ:

வாராய் வன்னி மண்ணினொரு மைந்தா!
வரி வேங்கையொத்த மது சூதனனே
சீராய் சிறப்பாய் செழிப்பாய்
சிரம் நேராய் நெறியாய் வழி வாழ்வாய்!
ஊரில் யாவரும் சுகமோ??
உன் உடலும் உள்ளமும் நலமோ?
ஆற அமர ஒரு ஆறு நாள் நம்மோடு
கூடியிருந்து
போதொடு விருந்துண்டு , செல்வாய் கோமகனே
கொலு வந்து எம்மருகில் அமராய் சீராளனே!!

கா.வ

கூடியெனை அணைத்த கோமகனே
குடி தலை மகனே.. நம் தலைமகனே!
பார்த்து பரவசமானேன் தமிழ் மகனே
பாரில் யாரிணை நமக்கிதில் பகரேன்!!

கை.வ:
ஆரத் தழுவி அன்பையெல்லாம்
ஆரும் தொடா வண்ணம் பொழிந்திட்டாய்
சீரத் திருவளர் நின் புகழ் - இந்த
சீலம் முழுதும் சென்றடையும்!!

குழாம்:  ஓமோம்….சீலம் சென்றடையும்

கோல சிலை பெண்ணொருத்தி கெதியில்
உன் குடும்ப பெண்ணாக மருவி
மாலையிட்டு மணவாளனாய்  -உனை
காண வேண்டும் மறு பொழுதில்!!

பெ.மெயினார்:
ஊரில் நீரொரு காதல் மன்னன்
என்ரு கேள்வி…

குழாம்: அப்பிடியா??

ம்ம்ம்ம்
சீலத் திரு மரபில் அது தேவையில்லாத
ஒரு புள்ளி..

குழாம்: நமக்கு தேவையில்லாத கரும் புள்ளி!!

வேலும் வாளும் ஆயுதம் எம் வீரம்
நமக்கது போதும்

குழாம்: ஓமோம் போதும் போதும்!!

ஞாலம் போற்ற நாம் வாழ்வோம் - இங்கு
தமிழ் மானம் காக்க சிரம் கொடுப்போம்.

குழாம் :: ஓமோம் மானம் காக்க நம் சிரம் குடுப்போம்

கா.வ:
ஊரில் ஆயிரம் வாயுண்டு - அவை
ஒவ்வொன்றிலும் நாரல் பேச்சுண்டு
காதல் பெண்டிருடன் சகவாசமா??
ஐயோ காது கொள்ளா கொடும் விசமா??

குழாம்: ஐயோ காது கொள்ளா கொடும் விசமே??

பெ.மெயினார்:
வெள்ளை துரை பலரோடு உமக்கு
சேரல் என்று பல சேதி கேள்வி

குழாம்:
அது என்ன பேதி??

ஏறல் முக வரலாற்றில் -இவை
நமக்கேதும் நலமில்லை பாரு!!

கா.வ

ஊரில் பல கலகங்கள் வெள்ளைப் பயல்களால்
வந்த கோலங்கள் ஏதுமறியலையோ??
வாளேந்தி புனல் சிந்தி உயிர்பலி வேண்டாவென்று
என் மூளை கொண்டு சில வலை பின்னி சென்று
மோதல்  தவிர்த்து  வெள்ளையனை வெட்கிகுனிய வைத்தேன்..

சோரம் போவேனோ என் சொந்தங்களை விற்று
மனப் பாரம் ஏதும் வேண்டாம் மாமன்னன்
வேண்டாமென்று எனை விரட்டியடித்தாலும்
வீழ்ந்து கிடப்பேன் உம் வாசல் வழியே!!

ப.வ:
பெரிய வார்த்தை ஏன் பிதற்றுகிறாய்…
உரிய உரிமை உனக்குண்டு உற்றவனே
கொடிய நட்புகள் வேண்டாமென்று
கவலை கொண்டானென் சோதரனே!

கா.வ:
வார்த்தைகள் தான் உரிமையென்று வருகுது
வாழ்கை துணையாய் உறவில் தள்ளி வைத்தீரே
முறையில் எனக்குரிய மடந்தை தனையே
கடையில் எவனுக்கோ தத்தம் தந்தீரே..

பவ:

மணையில் இருந்தால் தான் உறவில் வருமோ
உதிரம் தந்த சொந்தம் உயிர் உரசாமல் போகுமோ
பதியம் வைத்த பெண்டிர் வேரூன்ற வேறு நிலம்
நியதி அது  தான் என்றால் விதி மாற்ற நாமார் சொல்லாய்

காதல் மனம்  ஒருவனிடம் , கட்டுண்ட உடல் உன்னிடமுமாய்
போதல் முறையாமோ என்று பேதை கேட்டாள் கேள்வி ஒன்று
சாதல் அன்றி வேறு வழி ஏதுமறியேன் என்றால்…
மீதமென்ன இருக்கு எமக்கு அவள் வாழ்வையழித்த பிறகு??

கை.வ:

ஆதலால் தானே காக்கையா!
அவளை அவனுக்கே கொடுத்திட்டோம்
ஏதிழையாள் போல் இன்னொரு தங்காய் எமக்கில்லை உனக்கீயவே
போதுமினி நமக்கு பழங்கதை எதற்கு புதினங்கள் சொல்ல இருக்கு
பரிவாரங்களோடு வந்தாய் பரிசங்கள் பல தந்தாய்..பகன்று சொல் எமக்கு

கா.வ

ஏதுமில்லை பெரிசாய் , வெள்ளை ஏவலாளி வந்தான் ஒருநாள்
தூது வந்த அவனை நீரும் துரத்தி அடித்தனுப்பினீராமே
போரில் வென்று வென்று ஒரு பொழுது போக்காச்சு உமக்கு
வீணில் உயிர் போகாமல் மக்கள் வாழ வழி வேனும் நமக்கு

ப.வ

வாற வெள்ளையன்  எல்லாம் வரி கேட்கிறான் எம்மிடமே
ஊரும் நிலமும் எங்கள் சொத்து , ஊரான் வந்து சட்டம் போடவோ
நாரும் நாராய் நாலாய் கிழித்து நாயை வாசலில் தொங்க விட
பாராய் என் கை பதறுது இங்கே அவன் பத்திரமாய் போனதே பெரிய பிழை

என் அம்மை என் அப்பன்  எம் முறவு உலவிய நாடு இது
என் சந்ததி உரிமை கொள்ளவென்ற மண்ணிது..
பண்டைய சரிதமும் இண்டைய கதையும் நாளைய வரலாறாய்
நம் சரிதம் மணக்க வேண்டிய திரு நாடு இது
மானந் தன்னை விற்று மாற்றானிடம் மாற்றாய்
மண்ணை விட்டுக் கொடுப்பேனோ ...என்னுயிரை ஈவேனே ஈடாய்!!

கா.வ

எப்படியோ எங்கள் மண் எம் வசமானால் போதும்
எப்பவும் உங்கள் வலமாய் வலம் வருவேன் நானும்
செப்பவும் செம்மலே செய்வதின்னவென்று
இப்பவே இறங்குவேன் செயலாய் இடந்தரியாது!!

ப.வ

நட்பென்று இதை தான் சொல்வது
எதுவந்த போதும் இணைபிரியாதிருப்பது
கரவுகள் பல்விருந்தாலும் மனதில்
கரம் கோப்பது கடையில் இடர் வரும் போது!!

எப்பெரிய மனதுனக்கு மன்னன் மகனே
இப்பெரும் பக்கத்தில் என்னுயிர் தம்பியர்
அப்பக்கத்தில் நண்பன் ஞானத்திரு காக்கைவன்னியன்
எக்கொம்பன் வரினும் இனி இங்கு குறைவில்லை
சட்டென்று அன்னியனை வென்று வருவேன்
கொன்று புடைப்பேன் …
பண்டார வன்னியன் நானே!!


காட்சி 4

கடைசி பாகம்.

(காட்டில்   கா.வ உலவிக் கொண்டிருக்கிறான்…)

கா.வ:
ஆஹா ஆஹா...ஆனந்தமே…
ஆனந்தமே….பரமானந்தமே
அடங்காப் பற்று அடிமையாகும் நாள் அண்மையிலே
பனங்காமமும் வீழ்ந்தது பரங்க்யரிடம்
எனைப் பாராமல் ஊரானுடன் சார்ந்த பாவி மகளும் மாய்ந்தனள் போரினிலே
அவள் பதியும் போயினன் ஆவியிலே…
கண்டி இராச்சியமும் கவிழ்ந்தது...கோட்டை கொடியும் வீழ்ந்தது
இண்டைக்கு  இருக்கு மண்டையா….எனி
எப்போதும் எழும்ப மாட்டாய் பண்டாரா வன்னியா!!

சண்டையில்லாமல் நானே மிக தந்திரமாகத் தானே
உன்னை வீழ்த்தினன் நானே ஒரு உறவுமில்லை கடையில் தானே??
தம்பிமாருண்டு தாரணியிலே தனியொரு குறைவுமில்லையென்று ஏறினியே!!
இன்று உன் சாவில் சாம்பர் அள்ள ஒரு நாதியுமில்லாமல் போகிறியே!
வல்லவன் இந்த காக்கை வன்னியன்
என் சாணக்கியம் சரித்தது உன் சரித்திரத்தை
நல்லவன் என்று நான் கண்ட பேறு ஏதுமில்லை இந்த நானிலத்தில்
உன்னை வெல்வதன்று வேறு தேவையில்லை ..!!

தோளில் கை போட்டு முதுகில் குற்ற ஒரு தீரமான திறன் வேண்டும்
தேனில் ஊறிய வார்த்தைகள் சொல்லி தீர்த்துக்கட்ட
மகா சாதுர்யம் வேண்டும்
அத்தனையும் உண்டு என்னிடமே …
ஆரையடா புறந்தள்ளிவிட்டாய்??
அத்தனைக்கும் இன்று கைமேல் பலனாக
உன் ஆவி கொண்டு மனம் ஆறுவேன் நானும்!!

(ப.வ வருகிறான். மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன்…)

வெள்ளையன் படையுடன் வரக் கூடும் …
விடிவதற்குள் வேறிடம் போக வேண்டும்
கோழி கூவும் நேரத்திலே கோட்டை வாசலில்
வெள்ளையன் தலை தொங்க வேண்டும்
போர் என் உடமை தின்றது; உறவுகளை கொன்றது
ஆயினும் தாய் மண்ணை தரேன் உயிருள்ளவரை
நான் மாண்டு போனாலும் கவலையில்லை
நீ நிண்டு போராடி மண் மீட்க வேண்டும் வன்னியனே!!

கா.வ:
கவலையை விடுங்கள் மன்னவரே…
காவலிருப்பேன் , எதிரி உயிர் குடிப்பேன் இந்தக் காக்கை வன்னியனே!
அன்னியன் வந்து ஆள்வதோ எம் அன்னை மடியை
நாம் என்ன ஆரணங்கு ஆடையோடோ அலைகின்றோம் கடிதினிலே

ப.வ
நல்ல வார்த்தை சொன்னாய் நல்ல நண்பனே
தமிழ் மானம் பெரிதெமக்கென்று சொன்னவனே
என்னுயிர் போயினும் இனி கவலையில்லை
எதிரி தலையறுக்க நீயொருவன் போதும் மீதியிலே!!

(திடீரென்று வெள்ளையர்கள் பண்டார வன்னியனை சூழ ப.வ திகைக்கிறான். கா.வ் கெக்கலிட்டு சிரிக்கிறான்.. )

வெ.து:
ஹஹாஹ
அம்பிட்டான் பண்டாரவன்னியன்...ஐலசா!
இனி வன்னி நாடும் நம் வசம்

ப.வ:
சீ வாயை மூடு …
தீரமாய் நின்று எமை வென்று வர துப்பில்லை
வீரமாய் என்னடா கெக்கலிப்பு
இந்த வீணன் காட்டிக் கொடுத்த தித்திப்பு…
போடா  இப்பவும் நீ பேடியே.
நேர் நின்று மோதும் தீரமில்லையே
போரில் மாண்ட என்  சேடி சேலை வாங்கி கட்டு..
அவள் தீரம் கொஞ்சம் உறைக்கும்
உன் உதிரத்தில் அப்போது!!

வெ.து:
என்ன நான்சென்ஸ் பேசுகிறாய்?
எனக்கும் வாள் ஃபைட்டிங் வரும் பார்..!
ஸ்டூப்பிட்..
உன்னை விட்டுவிடுவோம் நாமும்
கப்பங் கட்ட சம்மதித்தால் நீயும்
சுற்றி வர எம் படை நிக்கு…
ஒரு உச்சு கொட்டினால் உன் உயிர் போச்சு
மெத்த அதிகாரம்  பேசி
டைம் வேஸ்ட்  பண்ணாமல் யோசி!
உயிர் பிச்சை தருவோம் நீ யாசி!


ப.வ

பிச்சையெடுக்க வந்த வெள்ளைப் பன்றி  
வெம் புலியின் பசிக்கு புல்லுக் கட்டு போடுவாயோ??
கட்டி வைத்து வீரம்  பேசவா - இந்த
பட்டுத்  துணி போர்த்தி வந்த வேசமா?
இந்தப் பிறப்பில் நீ ஆண்மகனெனில்
என் வாளுக்கு பதில் சொல் வீரனெனில்
ஒற்றை வாள் வீச்சில் உன் பற்றைத் தலை பறக்கும்
சீமை தனை நோக்கி!!

வெ.து:
Don’t waste your time
By Bark at the moon
My Actions speak louder than your words
So stop your nonsence
வெறும் சாய வேரும் வரியும் தான் கேட்டோம்
மாட்டேன் எண்டாய் மடையா!
உன் உயிர் கேட்டோம்  காக்கை வன்னியனிடம்
கூண்டோடு தந்தான் உன் இனத்தையே…
பிழைக்க தெரிந்தவன் அவன்..
பிதற்றி சாவாய் நீ!!

இன்று முதல் இனி எமது கொடி கோட்டை மேல்  - உன்
மண்ணின் முடி பிரிட்டிஷ் காலடி கீழ்
முட்டி போட்டு வணங்குவாய் வெள்ளையாட்சியை
விட்டு வைப்போம் உன் உயிர் பிழைத்துப் போகவே..
ஒட்டு மொத்த இலங்கையும் எம்மிடம்
உன் ஒருவன் மட்டும் எமக்கு எம் மாத்திரம்

ப.வ (சங்கிலையை அறுத்துக் கொண்டு வாளை உருவுகிறான்…)
ஆரையடா சொன்னாய் கோழை என்று?
அடங்காபற்று மண்ணின் மைந்தன் நானென்று
ஆரும் சொல்வார் உன் முன் நின்று…
கூலியடா  இவன் காக்கை வன்னியன்
கூறு போட்டு விற்றது மண்ணையல்ல
அவன் அன்னை மானத்தை…!!
தேவையில்லையடா இந்த உயிரெனக்கு
பிச்சை நீ போட அள்ளி எடுப்பதற்கு
ஓடுவது உன்னப்பன் உதிரமெனில்
வாளையெடு வா சண்டைக்கு….!!

(இருவரும் சண்டையிடுகின்றனர்..ஒருவன் மறைந்திருந்து பண்டாரவன்னியனை சுட மார்பில் குண்டு பாய்ந்து வீழ்கிறான் பண்டாரவன்னியன்)

கா.வ பார்த்து…. கவலையுடன்

சீ..தூ நாயே
நான் செத்துவிட்டால்  நீ உய்ர்ந்திடுவாயா பேயே?
பாரடா உன் பெண்ணாசைக்கு
உயிர் மானமடா நீ விலை குடுத்திருப்பது
உன்னை கொன்று போடாமல் விட்ட பழி
சுமந்து செல்கிறதே என் ஆவி
வீழ்வது பண்டாரவன்னியன் மட்டுமே
நாளை விளையும் விதைகள் பழி தீர்க்கும் முறையே!!

தாய்மண்ணே ! என்னை மன்னித்துவிடு!
நரிகளை நண்பராக நம்பி
உரிமைகளையும் இனத்தையும் அகதியாக்கிவிட்டேன்..!
வரலாறே என்னை மறந்துவிடு..!
பறங்கியரிடம் தோற்றுப் போன என்னை
இந்த குமரமுத்து பண்டாரவன்னியனை!!

(ப.வ. தலை சாய்கிறது)

விகட கவி:
அந்தோ எங்கள் ஆலமரம் வேரறுந்து வீழ்ந்ததே….!
ஐயோ எங்கள் ஆலயத் தேர் குடை சாய்ந்து போனதே!!
எங்கோ இருந்தவனால் வெல்லவியலா வேம்புலியே -உன்னை
இன்று பின் நின்று கொன்றவன் எம்மினமே….
வெந்தே மாளும் எம்மினம் இந்த ஈனன் செயலால் மானமிழந்து
வேம்புலி நாட்டில் வெறும்  குள்ளநரி குலநாசம் செய்து போனதே!!

என்னே எம் தலைவிதி...இது ஒரு தொடர்கதையாகிப் போனதே..
எம்மை நம்மவனே எதிரிக்கு பலியாய் பரிசளிப்பனே..
வெந்தே உடல் கருகினும் இந்த விசப் பழி
சுமந்தே போகும் நம்மினமே!!  

குண்டு மழை பொழிந்தது….குலக் கொடிகள் உயிர் பறந்தது
வெந்து சாம்பலானது இந்த வெம்புலி தமிழ் இனம்
தோள் கொடுப்பான் தோழன் என்பார்
தேள் கொடுக்கான விச வரலாறு தெரியார்..
தோளில் கை போட்டு கூட்டி வந்தார்
முதுகில் குத்தி காட்டிக் கொடுப்பார்
தோழனென்று துரோகியை சேர்த்து வைத்து
முழு தேசமும் இன்று முடமாகிப் போனது கண்டு
விடமுண்ட ஈசனும் பார்த்திருப்பனோ
என்னே விதி எம்மினத்துக்கென்று
பேசாதிருப்போமோ இனியும்???  
வீறு கொண்டு எழுவோமோ - இனி
வேறெங்கு போவோமோ??
இனி வேறெங்கு போவோமோ???

(திரை மூடுகிறது)








No comments:

Post a Comment