Saturday, November 14, 2015

தினம் ஒரு ஈழத் தமிழ் சொல்.

மச்சாள் - மாமா மகள், சகோதரன் மனைவி.
மச்சான் - மாமா பையன், தங்கை கணவர் .

ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு வகையில் நேசிப்புக்குரியதாயும், மதிப்புக்குரியதாயும் இருப்பினும் மாமன் அல்லது மாமி மகன், மகள் உறவுகள் கால காலத்துக்கும்  இனிமையானவையும் அலாதியானவையுமாகும். உறவு முறைகளை சுட்டும் சொற்களில்  மச்சாள் , மச்சான் என்பது ழத்து பேச்சு வழக்கில் அத்தை அல்லது மாமாவின் மகள் , மகனை குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகளாகும்.

அக்கா கணவரை அத்தான் என்று அழைக்கும் வழக்கம் எங்களிடம் உண்டு. அதே போல் தங்கை கணவரை மச்சான் என்று அழைக்கிறோம்.
அதே போல் அத்தை பெண்ணையும் சகோதரன் மனைவியையும் மச்சாள் என்று அழைக்கிறோம். அண்ணன் மனைவியை அண்ணி என்றும் அழைக்கும் வழக்கம் இருந்தாலும் மச்சாள் என்பதே பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் வார்த்தை எனலாம்.

இரண்டு மூன்று சகோதரர்கள் இருந்து அவர்களுக்கு மனைவிமார் வரும் பட்சத்தில் அவர்களுடைய வயது அல்லது அவர்கள் கணவரின் வயதை வைத்து பெரிய மச்சாள் , சின்ன மச்சாள் , குட்டி மச்சாள் என்றோ அல்லது அந்த மச்சாளின் பெயரை சேர்த்தோ அழைப்போம்.

உதாரணம் : ஸ்ரீதேவி என்பவர் தம்பி உதயனின் மனைவி. நிறைய தம்பிமார் இருப்பதால் அவரை பெரிய மச்சாள் என்றோ சின்ன மச்சாள் என்றோ குறிப்பிட்டு அழைக்க இயலாது.. அத்தகைய சூழலில் ஸ்ரீதேவி மச்சாள் அல்லது தேவி மச்சாள் என்று அழைப்போம். அதே போலவே மச்சானுக்கும்...

உதாரண வாக்கியங்கள் :

1) இண்டைக்கு என்ர ஸ்ரீதேவி மச்சாளுக்கு பிறந்தநாள்.
(இன்று என்னுடைய தம்பிமனைவி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள்)

2) எங்கட பெரிய மச்சாள் தான் எங்கட வீட்டில அம்மாவுக்கு அடுத்தபடி..
(எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவுக்கு அடுத்து அண்ணி தான் எல்லாமுமே)

3) என்ர மச்சான் இருக்கிறவரை எனக்கு எந்த பயமுமில்லை
(என்னுடைய மைத்துனன் இருக்கும் வரை எனக்கு எந்த கவலையுமில்லை)

4) எங்கட மச்சான் / அத்தான்  வீட்டுக்கு வந்த நேரம் எல்லாம் நல்லபடியாக நடக்குது
(எங்கள் மைத்துனர் வீட்டுக்கு வந்த வேளை எல்லா விஷயங்களும் சுபமாக நடக்கிறது)

பிற்குறிப்பு:

எம்மவர்கட்கு! இதில் ஏதும் திருத்தம் வேண்டுமா என்று பார்த்துச் சொல்லுங்கள்....நாங்கள் எங்கள் குடும்பத்தில் வயதில் மூத்த மாமா பையனையும் அக்கா கணவரையும் அத்தான் என்றும் வயதில் குறைந்த மாமா மகனையும் தங்கை கணவரையும் மச்சான் என்றும் கூப்பிடுவோம்.. அதை வைத்தே இந்த பதிவை எழுதியிருக்கிறேன்... உங்கள் அபிப்பிராயம் என்ன?

No comments:

Post a Comment