Friday, March 20, 2015

ஒரு தாலி அறுப்பு !



சுன்னம் இடிக்கத் தொடங்கும் போதே சுற்றி இருக்கும் உறவுகளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போய்விடும். இனி என்ன இருக்கு என்ற ஒரு வெறுமை பரவத் தொடங்கும்..
மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு இனம் புரியாத விரும்பத்தகாத குளிர்ந்த பனிக்கட்டி ஒன்று உருண்டு பிரண்டு நெஞ்சுக்குள் அடைத்து உயிரோடிருக்கும் போதே ஜீவனற்றுப் போன விறைப்பான குளிர் உடம்பு முழுதும் பரவி மொய்த்துக் கொள்ளும்...
அப்படியொரு விரும்பி ஏற்றுக் கொள்ளாமலேயே எங்கள் வீட்டிலும்....நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது அன்று...
அப்பாவின் மூடிய கண்களின் மேல் தம்பிமார் மூவரும் இடித்த சுன்னம் மஞ்சளாக குழைத்து அவர்கள் கையாலேயே அப்பி விடும் அந்த வினாடி தான் அத்தனை நேரமும் அப்பா நித்திரை கொள்வது போலிருந்த மலைப்பு போய் அப்பா உயிரற்ற சடலமாகிவிட்டார் என்ற உண்மையை திணித்து கொள்ளும் பலவந்தம் , சொருகின வாளாக இதயச் சுவரிலும் அறிவுப் புதரிலும் இறங்கத் தொடங்கியது... அப்போது இயலாமையுடன் உடம்பும் மனமும் நிதர்சனத்தை ஏற்க மனமில்ல்லாமல் துடிக்கும் வலி இருக்கிறதே......வார்த்தைகளால் வர்ணிக்கவியலாது...
ஈமைக் கிரியைகள் எல்லாம் முடிந்த பின் எல்லாரும் அப்பாவைச் சுற்றி மாரடிக்கத் தொடங்கினார்கள்...வீல் என்று நானும் தம்பிமாரும் ஓலமிட்டோம்... அழுகையா அலறலா என்று இனம் புரியாத ஒலியில் உச்சச்தாயியில் அம்மா நெஞ்சு பிளக்கக் கூடாதா என்ற வெறியில் தன் கையால் தானே படார் படார் என்று குத்தி குழறினார்.. அப்பாவை கிடத்தியிருந்த பெட்டியைச் சுற்றி ஆஜானுபாகுவான ஆண்கள் பெட்டி மூடியுடன் வந்து ஆயத்தமாக நின்றார்கள்... உரிமைக்கார ஆண்கள் விரக்தியான பெருமூச்சுடன் பாடை தூக்க ஆயத்தமாக சால்வையை நாரியில் வரிந்து கட்டத் தொடங்கும் போதே , வயசான சில பெண்கள் அம்மாவை நோக்கி வந்தார்கள்...
அவர்கள் அம்மாவை பார்த்து அழுத படி மாரடிக்கிறார்கள்..
பெரியம்மாவுக்கு தாங்க முடியவில்லை..தாத்தா இறந்த பின் அம்மா உட்பட அத்தனை சகோதரங்களையும் தன் பிள்ளை போல் வளர்த்தது பெரியம்மா தான்...அம்மாவுக்கு அப்பாவை தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணி வைத்தார். அதை எப்பவும் பெருமையாக சொல்லிக் கொள்வார்... அப்படி தேடி பிடித்து கொடுத்த வாழ்கை இன்று பாலை வனமாகிப் போக தன் கண் முன்னாலேயே தன் தங்கைக்கு தாலி அறுக்கப் போகிறார்களே என்ற வேதனை , வலி, இயலாமை என்று எல்லாம் ஒன்றாகி அழுகை பெருக்கெடுத்து ஓலமாக ஒப்பாரியாக எதிரொலிக்கிரது.... பெரியம்மாவிடமிருந்து...!
இந்தக் கொடுமையை எல்லாம் பார்க்கவா நான் இன்னும் இருக்கிறன் என்று பெரியம்மாவின் அழுகை எல்லாருடைய மனதையும் அறுத்துப் போடுகிறது.
அம்மா தன் தாலியை கையால் இறுகப் பற்றிக் கொண்டு அழுகிறார். எல்லாரையும் பார்த்து கெஞ்சுகிறார்.. அர்த்தமில்லாமல் தன் தாலியை தன்னிடமிருந்து பறிக்க வேண்டாமெண்டு பிறத்தியாரிடம் மண்டாடுகிறார். அந்த கிழவிகள் அம்மாவின் கையை பலவந்தமாக இழுத்து அம்மாவின் கையிலிருந்த தாலியை கழற்ற முயற்சிக்கிறார்கள்... என்னால் பொறுக்க முடியவில்லை...அம்மாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற் கூட்டத்தில் முண்டியடிக்கிறேன்.. என்னை யாரோ பலமாக இழுத்து அந்தாலப் பக்கமாய் தள்ளிவிடுகின்றனர்... குமர் பிள்ளை யாம், அந்த இடத்தில் நிற்கக் கூடாதாம்...
சின்ன தம்பி ஓடி வந்து “ விடுங்கோ அம்மாவை விடுங்கோ..அவவை விடுங்கோ” என்று ஆவேசமாக கத்துகிறார்..
மூத்தவன் ”அம்மாவுக்கு விருப்பமில்லையெண்டால் ஏன் நீங்கள் வில்லங்கத்துக்கு கழட்டுறீங்கள்” எண்டு சீறிக் கத்தினான்...
நடுவிலான் தேம்பி தேம்பி அழுகிறான்.. என்னிடம் “ அப்பாவே அம்மாவுக்கு நடக்கும் இந்த கொடுமையை- கண்ராவியை விரும்ப மாட்டார்” என்று சொல்கிறான்...
அது எங்களுக்குத் தான் தெரியும். அப்பாவுடன் வாழ்ந்த நாட்களில் இன்றைய இந்தப் பொழுதைப் போன்ற கொடுமையில் ஒரு சத வீதம் தன்னும் அப்பா அம்மாவுக்கு கொடுத்ததில்லை.. அப்பா அம்மாவுக்கு கொடுத்த அவர்களுக்கிடையேயான தாம்பத்தியத்தின் அடையாளத்தை பலவந்தமாக அறுக்கும் உரிமையை ஆரோ ஊர் பேர் தெரியாத அன்னியர்களுக்கு யார் தந்தது? என்ற ஆவேசம் எனக்குள் பீறிடுகிறது...
அம்மா அழ அழ அவரின் தாலி அறுக்கப்பட்டது. தலையில் வைச்சிருந்த பூவை பறித்து கசக்கி நாலு பக்கமும் எறிந்தார்கள். குங்குமத்தை இரக்கமேயில்லாமல் அழித்தார்கள்... அம்மா தன் முகத்தை கைகளால் அறைந்து அறைந்து அரற்றுகிறார். பெரியம்மா அவரைக் கட்டிக் கொண்டு அழுகிறார்...
பறை உச்ச ஸ்தாயியில் முழங்கத் தொடங்க... நாங்கள் எல்லாரும் கதறக் கதற அப்பாவின் பெட்டி மூடப்பட்டு பாடையில் தூக்கி வைத்துவிட்டார்கள்... அம்மா மிகவும் களைச்சுப் போய் கீழே சாய்ந்துவிட்டார்... அம்மாவை திரும்பி திரும்பி பாத்தபடி கண்ணீர் வழிய கொள்ளிக்குடமும் நெருப்புச் சட்டியுமாய் தம்பிமார் மூன்று பேரும் தளர்ந்து போய் அப்பாவுக்கு பின்னால் நடந்தார்கள்...
அம்மாவின் கழுத்திலிருந்த தாலியை பத்திரமாக அந்தக் கிழவிகள் என்னிடம் தந்தார்கள்..
”இந்தா ராசாத்தி இதை கொண்டு போய் உள்ள வை.. ”
அந்த தாலியை வெறித்துப் பார்க்கிறேன்.
எத்தினை நகை நட்டு இருந்தும் என்ன ....அப்பா கட்டின ஒற்றை தாலி கழுத்திலிருந்து அறுக்கப்பட்ட பின் அம்மாவின் அடையாளத்தையே மாற்றிவிட்டது..
அம்மா இனி மூளி;விதவை; கைம் பெண்; முழிவியலத்துக்குதவாதவர்; நல்ல காரியங்கள் நடக்கும் போது பின்னால் நிற்க வேண்டியவர்; இதையெல்லாம் இந்த வினாடி அந்தக் கிழவிகள் அறுத்த என்னுடைய அப்பா என் அம்மாவுக்கு கட்டின தாலி சொல்லுகிறது.
அம்மாவுக்கு நெஞ்சிலும் மாரிலும் சுமந்த அப்பாவின் உறவு இனி இல்லை என்று சொல்லாமல் சொல்லியது. அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட சந்தோசமும், துயரமும் , உணர்வுகளும், உணர்ச்சிகளும் இனி எப்போதுமே கிடைக்காது என்பதை பறை சாற்றியது.
அம்மாவுக்கென்று இனி எதுவுமே அப்பாவால் இல்லை என்று தீர்ப்பு சொல்லியது..
இனி அது வெறும் விலையுயர்ந்த் உலோகம் மட்டும் தான். அதை உருக்கி ரெண்டு மூண்டு நகைகள் செய்யலாம்..ஆனால் அப்பா உயிருடன் இருந்த போது உயிர்ப்பாயிருந்த எந்தவொரு நல்லவிசயங்களையும் அந்த நகைகள் அம்மாவுக்கு திரும்ப தரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது. என்ர அம்மா அந்தளவு துடித்து சித்ரவதைப் பட்டு நான் பார்த்ததில்லை... உனக்கு உன்னுடைய புருசன் இனி இல்லை என்ற கொடூரமான உண்மையை தான் அம்மாவுக்கு மிச்சமாக விட்டு வைத்திருக்கிறது.... !
இப்பிடித் தான் எங்கட வீட்டில் ஒரு தாலி அறுப்பு நடந்தது...
ஆனால் இங்க என்னடாவெண்டால்.......விழா எடுத்து , மைக் செட் போட்டு தாலி அறுக்கினமாமே.....

Monday, March 9, 2015

 நத்தைக்கூடுகள் சுமந்த காளிகள்... ! 




 ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 வருகிறது..!
போகிறது!! பெண்களுக்கான ஆர்ப்பரிப்புகளும், அவமானப்படுத்தலும். வாழ்த்துகளும் வசவுகளுமாக அந்த தினம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தாலும் தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு உன்னதமான தேவதையாகவும், சக்கரவர்த்தினியாகவும் நினைத்து பூரிப்படைய நினைக்கும் நாளாக பார்க்கிறாள்..மார்ச் 8 என்பது மகளிர்தினம் என்ற தகவல் தெரிந்தவளாயிருந்தால்....!

ஆனால் அவளாலேயே உணரப்படாத விசயம் இந்த நாள் அவளுடைய சமூகத்தில் அவளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கப்பட வேண்டிய நாள் என்பதை!!

தீபாவளி பண்டிகை, நத்தார், காதலர் தினம் போல் இந்த நாளும் கொண்டாட்டத்துக்குரிய நாளாக கருதும் எவரும் ஒரு வினாடி நின்று நிதானித்து பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்... மூளையின் செல்களை கசக்கி , நினைவுகளின் பக்கங்களை மேலே எடுத்து நடப்புகளின் வரிகளை கண் முன்னே கொண்டு வாருங்கள்.... அப்போது உங்கள் முன் விரியும் மிக அகண்ட கனன்ற நெருப்புக் குழிகளுக்குள்....உங்கள் சொந்தங்களில், உங்கள் நட்புகளில்...உங்கள் அயலில்...உங்கள் ஊரில்..உங்கள் நாட்டில்...உங்கள் அயல் நாட்டில்... உலகில்... எங்கெங்கெல்லாம் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும், கௌரவக் கொலைகளுமாய்...காட்சிகள்... 



எப்போதுமே இசைப்பிரியாவின் உயிரற்ற உடல் உலுக்கிவிட்ட உணர்வுகளை தேற்றமுடியுமா??

எப்போதுமே விபூசிக்காவின் கதறிய முகம் கண்ணைவிட்டு மறையுமா??

எப்போதுமே பதில் கிடைக்காத, கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்  உலகின் மிக நீண்ட கால (16 ஆண்டுகளாக ) உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய பெண், யாருக்காக போராடினாரோ அதே மக்களாலேயே தேர்தலில் படுதோல்வியடைந்த  பெண் இரோம் ஷர்மிளாவையும் மறைக்க முடியுமா??

36 வருடங்களாக வன்புணர்வின் போது கொடூரமாக தாக்கப்பட்டு . காயப்பட்டு கோமாவில் கிடந்து மடிந்து போன  அருணா ஷண்பக், மேலும் கூட்டு வன்புணர்வுக்குட்பட்ட ஷக்தி மில், மற்றும் ஜோதி சிங் மட்டுமல்ல கல்பனா, உமா மகேஸ்வரி, வித்தியா , கிருசாந்தி உட்பட பல பாலகிகள் காலம் உள்ளவரை இந்த சமூகத்தின் மறைக்கவியலாத இரணங்களாக வடுக்களாகிப் போன அடையாளங்களாக இருக்கப் போகிறார்கள் என்ற வலிகளுடன் தான் ஒவ்வொரு மார்ச் 8ம் திகதியையும் முகமன் கூறுகிறோம் .

நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவோ அல்லது எங்களை மற்றவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவோ இந்த நாள் வரையறுக்கப்படவில்லை. இந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான அடையாள நாள் அவ்வளவே!

சமைக்கத் தெரியாத அல்லது ஒரே உணவை தினமும் சமைத்து தரும் மனைவியை கொண்டவர்களும், தாய்க்கும் மனைவிக்குமிடையில் மாட்டிக் கொண்டு முழி பிதுங்குபவர்களும்,காதலில் ஏமாற்றப்பட்டவர்களும் அல்லது வெறுமனே பெண்களை கிண்டல் பண்ணுவதில் சந்தோஷிக்கும் ஆண்களுக்கும் இந்த நாள் கேலிக்குரியவொன்று தான். பெண்களின் தகுதி தெரியாதவர்கள் எவருக்குமே இது கேலிக்குரிய தினம் தான்,

 ஒவ்வொரு இசைப்பிரியாவும், விபூஷிக்காவும், கிருசாந்தியும், ஜோதி சிங்கும் , ஷக்தி மில்லும், அருணா ஷண்பக்கும், இரோம் ஷர்மிளாவும் போல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மனைவி, அம்மா , மகள், சகோதரி என்ற பெயரில் வெறும் சமையல்காரியாக, சலவைக்காரியாக, பிள்ளை பெறும் இயந்திரங்களாக , உழைத்துக் கொட்டும் ஏ.டி.எம் மெஷின்களான பெண்களும் இந்த   மார்ச் 8ம் திகதியை அடையாளப்படுத்துபவர்கள் ...!

இது யாதுமாகி அனைத்துமாகிய காளி நீ என்று போற்றப்பட்டுக் கொண்டே புரட்டி எடுக்கப்படும் சமூகத்தின் ஒரு பிரிவின் தேவையை உணர்த்தி அதற்கெதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாள நாள் மட்டுமே!!

ஐநா கணக்கெடுப்பு அது இது என்று ஆதாரங்கள் திரட்டி, கௌரவக் கொலைகள் முதல், வன்புணர்வு வரை சமூக ரீதியாகவும், அரசியல், இன, மத வெறி மூலமாகவும், குடும்ப ரீதியாகவும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைப் பற்றி எழுதுவதும் பாடுவதுமாய்...........பொதுக் கூட்டங்களுக்கு போவது, பெண்களுக்கான போராட்டங்களில் பதாகை தூக்குவது, குரல் கொடுப்பது, நிதி கொடுப்பது, நின்று , நடந்து ஆதரவு கொடுப்பது ............எல்லாம் தொடர்கிறது....இன்றைக்கு நாங்கள் விதைகளாக விதைத்தால் அது என்றைக்காவது முளைத்து வேர், கிளை படர உறுதியாகுமென்ற அற்ப நம்பிக்கையில்... ஒவ்வொரு அங்குலமாக பயணம் ஊருகிறது..!! ஊர்ந்து கொண்டிருக்கும் அந்த நத்தைகளில் ஒரு நத்தையாக தலைகுனிந்து ஊர்ந்து கொண்டிருக்கிறேனே தவிர என்னால் வேறு என்ன செய்ய முடிகிறது??

இந்த போராட்டங்களில் உறுதி எடுக்கப்பட்ட கணத்தின் உடல் வலிமையும், சூழ் நிலையின் சுதந்திர விரிவும் படிப்படியாக குறைந்து போய்க் கொண்டே இருக்கிறது...அடுத்த வருடம், அதற்கடுத்த வருடம்...இதோ இந்த வருடமும் வந்துவிட்டது... வருடா வருடம் வெவ்வேறு விதமான சுமைகளும், நோய்களும்,இடர்களும்,தடைகளும் நத்தையின் முதுகு கூட்டை பெரிதாக்கி பயணத்தை மட்டுப்படுத்திக் கொண்டே போகிறது...ஒரு புள்ளியில் நிலைகுலைந்து நத்தை வீழ்ந்துவிடும் போதில்....அதன் கனவும் இலட்சியமும் கூட சமாதியாகப் போய்விடும்.

ம்ம்ஹூம்....எந்த மாற்றத்தையும் சாதிக்க முடியவில்லை; எந்த விபத்தையும் ,எந்த கொடுமையையும் நிறுத்த இயலவில்லை.. எந்த பெண்ணையும் காப்பாற்ற முடியவில்லை... உதவ முடியவில்லை... எந்தப் பெண்ணுக்காகவும் கொடுத்த குரல் வெளியில் கேட்கப்படாமலேயே அமுங்கிப் போய்விட்டது...அல்லது செவிமடுக்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.. என்பதை வேதனையுடன் நீ என்ன செய்து கிழித்தாய் என்ற பாரிய வினாவின் முன் தலைகுனிந்து பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது .

நத்தைகளுக்கு மத்தியில் விசம் கக்கும் நச்சுப் பாம்புகளுக்கும் தெரியாமல் இடம் கொடுத்துவிட்டோமல்லவா ?? பாம்புகளை நம்பி பின்னால் ஊரும் நத்தைகளும் ஒரு முனைப்பில் பாம்புகளாக மாறும் என்ற எச்சரிக்கையுடன் இனியாவது இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மட்டும் கற்றுக் பெண்கள் கொள்ள வேண்டும் !! இந்த நத்தையால் எதையும் மாற்றி அமைக்க முடியவில்லை !!
இந்த நாளுக்கான வாழ்த்து சொல்லவும் வாழ்த்தைப் பெறவும் தகுதியில்லாத குற்ற உணர்வு உள்ளிருந்து அழுத்துகிறது.