Saturday, January 4, 2014

100 சிறந்த கதைகளின் கதை...


பண்புடன் என்றொரு குழுமம். எழுத்துச் சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே  இலக்காக வைத்து தொடக்கப்பட்ட கூகிளின்  தமிழ் குழுமம்.  ஊருப்பட்ட உறுப்பினர்கள்..பலவிதமான கருத்து மோதல்கள்..விதம் விதமான சமூகப் பார்வைகள். அங்கே விவாதிக்கப்படாத அலசப்படாத விசயங்கள் தேடிப் பார்க்க வேண்டும்.. அப்படியொரு குழுமத்தில் நானும் ஒரு உறுப்பினர்.

ஒருவர்  நாலாண்டுக்கும் மேலாக ஒரு இழையை “  100 சிறந்த கதைகள்” என்ற தலைப்பில் உருவாக்கி ஒவ்வொரு  சிறுகதைகளாக தேடி தேடி எடுத்து , உட்கார்ந்து , தட்டச்சி பண்புடன் குழுமத்தில் பிரசுரித்து வந்து கொண்டிருந்தார். இழை ஆரம்பிக்கப்பட்ட திகதி மார்ச் 14 , 2010.

நானும் அப்பப்ப வாசித்து விட்டு ம்ம்ம்..நல்ல கதை தான் என்று சிலதையும், விசர்க் கதை என்று சிலதையும் மனதுக்குள் ஒப்பீடு செய்துவிட்டு போய்விடுவேன்... இன்றளவில் அந்த இழையின் உழைப்புக்குரியவருக்கு  நல்லா இருக்கு என்று ஒரு பின்னூட்டம்  போட்டதாக நினைவில்லை.ஆனால் அந்த கதைகளை வாசிக்க கிடைத்த சந்தர்ப்பங்கள் பலவும் மிகப் பெறுமதியான நிமிசங்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன் ஏன் இவர் இப்படி கஷ்டப்பட்டு , நேரம் மினக்கெட்டு ஒவ்வொரு கதையாக தட்டச்சி இழையிலிட்டுக் கொண்டிருக்கிறார் என்று. ஏன் என்றால் ஒரு சின்ன பதிவு எழுதி முடிக்கவே  எத்தனை சோம்பல் முறிப்பும், இழுபறியுமாய் நாள் கணக்கில் இழுத்தடித்து நாலு வரி தட்டுகிறோம் நாம்.. ஆனால் இவர் நாலு வருடமாக ஒவ்வொரு கதையாக தட்டச்சி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய அந்த குறிப்பிட்ட இழைக்கு போய் பார்த்தால்  தெரியும் ஒவ்வொரு கதையும் எத்தகையது என்று. இழையில் கதைகளை வாசிக்கும் போது இந்தக் கதைகளை எங்கிருந்து எடுத்துப் போடுகிறார் என்ற புரிதல் இல்லாமல் அவர் வைத்திருக்கும் கதை புத்தகங்களிலிருந்து  பார்த்து பார்த்து டைப் பண்ணி அனுப்புகிறாராக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒவ்வொரு கதையையும் பதிவேற்றும் முன் அந்த கதைகளை எப்படியெல்லாம் தேடி எடுத்திருக்கிறார் என்று இன்று தான்  புரிந்து கொண்டேன்.

 இன்று காலை ஆசிப் அண்ணா தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவல் போட்டிருந்தார்.  வாசித்த போது மனது மிகவும் வலித்தது. அந்த குறிப்பிட்ட இழையை உருவாக்கி  நாலு வருடங்களாக மெருகேற்றி வரும் சென்ஷி என்ற சகோதரர் ஒரு சில கதைகளை தேடி எடுக்க பட்ட கஷ்டங்களை ஆசிப் அண்ணா விவரித்திருந்தார்...

Asif Meeran 
14 மணி நேரம் முன்பு கைபேசிஇலிருந்து பதிவேற்றப்பட்டது
ஒரு சிறுகதை - இலங்கை எழுத்தாளர் எழுதியது.. அதன் பிரதி எங்கும் கிடைக்க வாய்ப்பேயில்லை என்ற நிலையில் விஜய் மகேந்திரனிடம் அந்தப் பிரதி இருப்பதை அறிந்து அந்த ஒரே சிறுகதைக்காக ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அதனை வாங்கினான் +me senshe. நான் கூட அவனைத் திட்டினேன். "இவ்வளவு கிறுக்குத்தனம் பிடித்து இதனைத் தொகுத்து என்ன செய்யப் போகிறாய்? " என்று. ஆனால் இலக்கியத்தின் மீதிருந்த தீவிர ஆர்வமும் தேடித் தேடி வாசிப்பதில் இருக்கும் ஆனந்தமும் அடைய முடியாதையும் அடைந்தே தீர வேண்டுமென்ற தீராத வேட்கையும், இரவு பகல் பாராமல் தட்டச்சு செய்து கொட்டிய உடல் உழைப்பும், அதற்குப் பின்ன்னல் இருந்த பொருள் செலவுகளுமாக நான்கரை வருடங்களாகத் தவம் போல கடும்பாடுபட்டு ஒருவன் சிறுகதைகளைத் தேடித் தேடி தொகுப்பான். வலிக்காமல் வியாபாரம் செய்வார்கள் இலக்கிய வியாபாரிகள்.. எஸ். ரா தன் முன்னுரையில் நன்றி சொல்லி விட்டாராம்.. அடடே!! அவருக்குத்தான் எத்தனை பெரிய மனது?? இங்கே இலக்கியம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்ள எந்த மயிரானுக்கும் அருகதையில்லை.. காசு.பணம்..துட்டு..மணி மணிதான்.. இந்த நான்கரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம் தராதவர்களைக் காலம் மன்னிக்காது.

********************************************* 


Asif Meeran நன்றிDyno Buoy .. கைக்குழந்தையாக ஆஹில் இருக்கும்போது அவனை அம்மாட்ட விட்டிட்டு சென்ஷி கேட்ட புத்தகம் வாங்க விஜயா பதிப்பகம் போயிருக்காங்க சென்ஷியின் மனைவி..ஒவ்வொரு கதைக்காக 3, 4 புக் வாங்கி செல்போன்ல போட்டோ எடுத்து மெயில் செஞ்சிருக்காங்க. அதை தட்டச்சு செஞ்சு இலக்கிய சேவை செஞ்சிருக்கான் நம்ம சென்ஷி...ஆனால்..... தொகுப்பாசிரியர் யாரு??? என்ன கொடுமை சார்??;-(

************************************************

எறும்புகள் தங்கள் உணவை எப்படி சிறுகச் சிறுகச் சேமிக்குமோ , தேனீக்கள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தேன்கூட்டில் தேன் சேர்க்குமோ அது போலத் தான் பண்புடன் குழுமத்தில் அந்த இழையில்  சென்ஷி எடுத்த முயற்சி. உழைப்பு, தொகுப்பு...எல்லாம்..!!

அந்தக் கதைகள் எதுவும் சென்ஷியால் எழுதப்பட்டவை அல்ல. ஆனால் அதை தொகுக்க அவர் உழைத்த உழைப்பை - நாலு வருடமாக அந்த மனிதர் இழைத்து இழைத்து பதிவேற்றிய ஒரு தொகுப்பை இன்னொருவர் தன் தொகுப்பாக புத்தகம் வெளியிட்டு அது வரப்போகும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்கும் வரப் போகிறதாம்..

இதை எந்த வகையில் எடுத்துக் கொள்ளலாம்??
 நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே...!!

சில நாட்களாக இணையத்தில் இலக்கிய வியாபாரிகளின் நரித்தனங்கள் பற்றியும், சில்லறைக் குணங்களைப் பற்றியு படித்து வருகிறோம். . இன்று இன்னொரு இலக்கிய வியாபாரியை அடையாளம் கண்டிருக்கிறோம்.

நன்றி : http://abedheen.wordpress.com/2014/01/04/sram100/    இந்த சுட்டியில் மேலும் விபரங்கள் அறியலாம். படிக்கலாம்.

3 comments:

  1. மனம் வலிக்க்கும்போது, உடலும் வலிக்கும். உடல் வலிக்கும்போது மனம் வலிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். உங்கள் ஆதங்கம் புரிகிறது. மனிதனுக்கு வக்ரகுணம் உண்டு, என்ன செய்ய முடியும். என் உடலும் வலிக்கிறது, மன வலியினால். நான் கூட எழுதும் கொஞ்சநஞ்சத்தையும் நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன். குடும்பம் கூட கவலைப்படுகிறது, இந்த வலியை கண்டு.

    ReplyDelete
    Replies

    1. இந்த விடயத்தில் பலர் சென்ஷியின் உழைப்பையும், நோக்கத்தையும் சரிவர புரிந்து கொள்ளாமல் அல்லது அதை அலட்சியப்படுத்துபவர்களாகவே இருப்பது தான் வேதனையாக இருக்கிறது..! இப்படி ஒரு தொகுப்பை என்னாலோ அல்லது வேறு எவராலோ ஏன் நோகாமல் முனகாமல் காப்பி & பேஸ்ட் செய்திருக்கும் அந்த பிரபல எழுத்தாளராலோ தொகுத்திருக்க முடியுமா?? இத்தனை முயற்சிகளை நாம் எடுக்க நினைத்திருப்போமா என்பது தான் எனது ஆதங்கம். :( மற்றப்படி எழுத்துரிமை, தொகுப்புரிமை, ராயல்டி , பக்கி, சொக்கி என்ற பதங்களுக்கான விளக்கம் எதுவும் என்னுடைய வாசிப்பறிவுக்கு அப்பாற்பட்டது. ஒரு நல்ல இலக்கியத் தொகுப்பொன்றை நான் வாசிக்க உதவிய சகோதரர் சென்ஷி..அவருடைய புத்தகப் பையிலிருந்து இன்று அந்த தொகுப்பு களவாடப்பட்டிருக்கிறது என்பதும் அதை களவாடியவர்கள் தங்கள் களவுக்கு நியாயம் கற்பிப்பதையும் தான் சகிக்க முடியாமல் இருக்கிறது. அவ்வளவே... 

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete