Wednesday, November 27, 2013

தாயகக் கனவுடன்.....


இந்தப் பாடலை ஏதோ ஒரு காரணத்தில் மற்ற நாட்களில் வாய் முணு முணுத்து விட்டால் எப்படியும் கனநாளைக்கு அந்தப் பாடல் தான் மூளைக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் இசைத்துக் கொண்டிருக்கும்...!
உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள், உறவினர் வந்துள்ளோம்.

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே எங்கே, ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே, ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் 


என்ற வரிகள் கண்ணீரைத் தாண்டி என்றைக்குமே போனதில்லை....! வாய் முணு முணுக்கும் பாடல் அங்கேயே உறைந்து உடைந்து விடுகிறது...கண்ணீர் தானகவே உருளத் தொடங்குகிறது. அந்தளவுக்கு எங்கள் இழப்புகளையும், வலிகளையும் இந்தப் பாடல் எங்களுக்கு நினைவூட்டி மீட்டுத் தந்து கொண்டே இருக்கிறது. இந்தவரிகளைக் கேட்கும் போது கண் கலங்காத பெற்றோர் ,சகோதர சகோதரிகள், தோழர்கள் இருக்கமாட்டார்கள்..! 

இந்த வலிமையான வரிகள் என் அண்ணா, என் மாமி , என் சித்தப்பா குடும்பம் முழுவதும், என் தோழி அகல்யா இன்னும் பலர் என்று நான் இழந்தவர்களும் , நான் அனுபவித்தவையையும் அவற்றின் பிரதிபலனாக எனக்கு கிடைத்த நோயும், வலியும் ....என்று வரிசையாக திரும்பவும் நோகடித்து நோகடித்து செல்லரித்து போன வாழ்கையை தான் முன்னால் எடுத்துவைக்கிறது. என்னுடைய துயரம் வெறும் தூசு தான் ஈழப் போரில் பறிகொடுத்த மற்றவர்களோடு ஒப்பிடும் போது...எனக்கே இப்படியென்றால் என்னைவிட அதிகமாக பறிகொடுத்தவர்களும் அனுபவித்தவர்களும் எப்படியெல்லாம் உழல்வார்கள்??
எங்களின் உணர்வும் , தமிழீழம் என்ற தாகமும் இன்னமும் வற்றாமல் வினாடிக்கு வினாடி எங்களிடம் எரிதணலாக வீறு கொள்ளக் காரணமே  இந்த வலியும், வேதனைகளும் தான். இந்த வலிகளின்  பின்னால் தமிழீழத்திற்காக நாங்கள் ஆகுதிகளாக கொடுத்த பிள்ளைகளும், அண்ணா, அக்கா, தம்பி தங்கச்சிமாரின் உயிர்களும் அவர்களுடைய போராட்டமும் அடங்கியிருப்பதால் தான் நாங்கள் தமிழீழம் என்ற அந்த ஒற்றைச் சொல்லை எங்கள் உயிரோடு பொருத்திக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் எங்களுக்கு இந்த ஒற்றைச் சொல் இன்னொரு மாற்று - அல்லது அளவற்ற வெகுமதியை விட அதியுன்னதமாயிருக்கிறது. தமிழீழம் என்ற தாகம் எனக்கு அடங்குமானால்  அது என் அண்ணாவை நானே கொன்றவளானதற்கு சமன், இந்திய அமைதிப்படையினரும் ஒட்டுக் குழுவினரும் சேர்ந்து சிதைத்த என் தோழி அகல்யாவின் சீரழிப்புக்கு நானே உடந்தையானவளாயிருப்பதற்கு சமன். .என் மாமியின் சாவு சரியானதே என்ற தீர்ப்புக்கு நானே கையெழுத்திட்டதற்கு சமன். குடும்பத்தோடு என் சித்தப்பா கொல்லப்பட்டதும் கூட விபத்து என்று பொய் சொன்னதற்கு சமன்.  அத்தனை பொய்களை நான் சொல்ல எந்த ஜென்மத்திலும் என்னால் முடியாது..!!

என்றைக்கும் இலங்கையில் இராணுவத்தின் அட்டூழியத்தில் ஒரு சராசரி ஈழத்தமிழன் தன் புலத்தின் வாழ்கையில் என்னவெல்லாம் இழப்பான், என்னவெல்லாம் அனுபவிப்பான் என்பதற்கு ஒரு சாட்சியாக இருப்பதையே நான் முக்கியமானதாக கருதுகிறேன். 
என்னைப் போல் என்னை விட இன்னமும் உக்கிரமாக உறுதியாக இருக்கும் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்..
அவர்களில் யாரோ ஒருவர் தான் அத்தனை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் இன்றைக்கு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் அகல் ஏற்றிய ஆத்மா! தமிழீழத்தோடு தொடர்புடைய எந்த ஒரு செயலில் பங்குபற்றும் எவரும் ஒருவகையில் போராளிகள் தான். ஆயுதம் ஏந்தி களமாடமுடியாவிட்டாலும் நெஞ்சுரத்தோடு , சிங்கள அரசு மட்டுமல்ல உலக இராணுவமே வந்து அச்சுறுத்தினாலும் எங்கள் பிள்ளைகள், எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி மகத்தானது; முக்கியமானது என்பதை அந்த போராளி இன்றைக்கு உலகுக்கு உணர்த்தியுள்ளார். அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியும், சிரம் தாழ்த்திய வணக்கத்தையும் தெரிவிக்கிறோம். எல்லாவிதமான அபாயங்களையும் கடந்து வந்து இழப்புகளின் துயரச் சுமையோடு நாங்கள் இன்றைக்கு ஏற்றும் அகல்கள் அத்தனைக்கும் நடுவில் அந்த மனிதர் அத்தனை அச்சுறுத்தல்களுக்குள்ளும் மத்தியில் உயிர் பயமில்லாமல் ஏற்றி வைத்த அந்த தீபம் மிகவும் தெளிவான , சுடராக பிரகாசிக்கிறது எங்கள் மனங்களில்....!! இது தான் ஈழத்தமிழன்! எங்கள் உணர்வுகளுக்கும் அடுத்த கட்ட வழித் தடத்துக்கும் எங்கள் தலைவன் நேரில் வந்து சந்திக்கு சந்தி மேடை போட்டு , மைக் செட் போட்டு பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. வேட்டி சேலை குடம் என்று பிச்சை போட வேண்டியதில்லை... சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்விலும் ஓடிக் கொண்டிருக்கும் வரை மாவீரர் நினைவாய் ஒவ்வொரு கார்த்திகை 27 அன்றும் நாங்கள் ஏற்றும் அகல் சுடர் எங்கள் இழப்புகளின் எரிதணல் அடையாளங்களாயிருக்கும்!!
 


தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே...!!  




Wednesday, November 13, 2013

தமிழக அரசியல்வாதிகளும்...நாங்களும்...!! பகுதி 1


தமிழக அரசியல்வாதிகளை என்றைக்கும் நம்பக் கூடாது என்று நான் எழுதினால் அரசியல் அறிவில்லாதவள், காழ்புணர்ச்சியுடையவள், இராசபக்சேயைக் கூட இந்தளவுக்கு விமர்சிக்காதவள் என்றெல்லாம் என்னை தூற்றியவர்கள் உண்டு. அவர்களை நான் என்றைக்கும் வெறுத்ததில்லை. ஏன் என்றால் அவர்கள் என்னை தூற்றும் போது கூட அக்கா என்று அழைத்து தான் விமர்சிப்பார்கள். என்னுடைய கருத்துகளையும் கடந்து நானும் அவர்களை சகோதரர்களாகவே பார்க்கிறேன். ஏனென்றால் நம் இரு பிரிவினரும் சாதாரண மக்கள்.

ஆனால் எங்கள் இருவருக்குமே வித்தை காட்டும் இன்னொரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களை அரசியல்வாதிகள் என்று சொல்கிறோம். அவரவர் தங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகளுக்காக என்னுடன் வாதாடுகிறார்கள். தான் நம்பிய தலைவரை அக்காவிடம் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதும், அந்த தலைவரை இன்னொருவர் காட்டமாக விமர்சிப்பது தான் நம்பிய கொள்கையையும் பின்தொடர்தலையும் கூட அவமதிப்பதாக கருதுகிறார்கள் அந்தச் சகோதரர்கள். அவர்கள் தங்கள் தலைவரின் எந்த செயலை இன்னொருவர் விமர்சித்தாலும் நாகரீகமானவர் எனில் சில பல எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் என்ற பெயரில் பதிலளிப்பார்கள். சபை நாகரீகத்தைப் பற்றி அக்கறையற்றவர்களாயின் தூஷணைகளால் அர்சிப்பார்கள். அவ்வளவு தான். அதற்கு பயந்து நான் என்னுடைய கருத்துகளைச் சொல்லாமல் இருக்க முடியுமா??

அரசியலில் ஒரு துண்டு சால்வையை வைத்து எத்தனை தடவை கட்சிக்கலர் கரையை மாற்றி மாற்றி வித்தை காட்டும் இந்த அற்பத்தனமான அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் கடைசி வரை தன் நிலையிலிருந்து மாறாத எதிரிகளுடன் இணக்கமாக போக எத்தனையோ வழிகள் , சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அடிபணியாமல் , மக்களோடு மக்களாக போராளிகளோடு களத்தில் போராளியாக தன் குடும்பம் முழுவதையும் பலிகொடுத்த எங்கள் தலைவரை நாங்கள் எப்படி எல்லாம் பூசிப்போம்? ! எங்கள் மனநிலையில் ஒரு வினாடியாவது நீங்கள் இருந்து பார்க்க வேண்டும்...!

 ஒவ்வொரு தடவையும் உங்கள் அரசியல்தலைவர்கள் ஈழம் , ஈழத்தமிழர், முள்ளிவாய்க்கால், பிரபாகரன்,இசைப்பிரியா என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் போதெல்லாம் நீங்கள் இந்தியாவிற்குள் இருக்கும் தமிழக அரசியல்கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்களாக - ஈழத்தமிழருக்காக பரிதவிக்கும் தொப்புள் கொடிகளாக இருக்காமல்,  போரில் உறவுகளைப் பறிகொடுத்த நாங்களாக இருங்கள்....! இவர்கள் சொல்லும் அத்தனை சமாதானக்களில், சப்பைக்கட்டுகளில் எதையாவது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று எனக்கு சொல்லவேண்டாம். உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்...போதும்!!

இத்தனையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் கீழே நீங்கள் மதிக்கும் அரசியல்வாதிகளிடம் தான் சில கேள்விகளை கேட்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது. அவற்றை நான் கேட்டால்
ஒரு சாரா(கோதர)ர் நாங்கள் தான் இந்த திடலை கட்டினோம் என்பீர்கள். இன்னொரு சாரா(கோதர)ர் எங்கள் தலைவர் தான் திடல் கட்ட இடம் கொடுத்தார் என்பீர்கள். மற்றொரு சாரா(கோதர)ர் எங்கள் ஐயா தான் திறந்து வைத்தார் என்பீர்கள்.  இடித்தவர்களும் வேறொரு சாரா(கோதர)ர் மதிக்கும் தலைமை தான்...!! இவர்களை ஆதரித்தால் தான் காங்கிரசையும் திமுகவையும் விரட்டலாம் என்ற அரசியல் சாணக்கியம் பேசிய தலைவர்கள் வேறு எங்கிருந்தும் வரவில்லை...! (இனி இவர்களை விரட்ட திரும்ப யாரை வரவழைப்பீர்களோ?)

எம் சகோதரர்களே...நீங்கள் மதிக்கும் அரசியல்வாதிகளிடம் தான் கேட்கிறோம்.....

எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்து எங்களை சிங்களவன் இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்தான்....அவன் எதிரி!

நீங்கள் ஒரு சாரார் எங்கள் மக்களுக்காக நினைவுத்திடல் கட்டினீர்கள்...திறப்புவிழா நடத்தினீர்கள்...மிக்க நன்றி...!!


இப்போது ஏதோ நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக காரணம் காட்டி சுற்றுச் சுவரை இடித்தும் விட்டீர்கள் இன்னொரு சாரார்.... சிங்களவனை விட வேக வேகமாக..!!

இப்போது உங்களை நாங்கள் இனி எந்த பட்டியலில் சேர்ப்பது??

உணர்வும், பறிகொடுத்த வலியும் அனுபவிக்கும் எமக்கு எங்கள் மாவீரர்கள் இரண்டாம் ஆண்டவர்கள். அவர்களுக்கான துயிலும் இல்லங்கள் எங்களுக்கு கோவிலைப் போன்றவை. முள்ளிவாய்கால் என்ற வார்த்தை எங்கள் வரலாற்றில் உயிரோடு பதைக்க பதைக்க எங்கள் இனம் கொடூரமாக அழிக்கப்பட்ட (holocaust) அடையாளம். ஈழத்தில் அமைக்கமுடியாத ஒரு விசயத்தை , இன்னலுறும் ஈழத்தமிழரின் ஒரு அடையாளமாக , வரலாறு சொல்லும் சாட்சியாக இந்த திடல் இங்கிருக்கட்டும் என்ற நோக்கம் தமிழக மக்களிடம் இருந்தது.

மக்களின் பார்வைக்கு எதிர்மாறாகத் தான் அரசியல்வாதிகளின் கணிப்பு இருக்கும் என்பது எமக்கு தெரியும். இனி இந்த முள்ளிவாய்க்கால் திடல் அரசியல்வாதிகளிடம் சிக்கி எப்படியெல்லாம் சீரழியப் போகுதோ என்ற கேள்வி ஈழத்தமிழர்களிடம் இருந்தது. அதனாலேயே ஈழத்தமிழர் பலர் இந்த திடல் பற்றி கருத்து வெளியிட விரும்பவில்லை.  ஆனால் பலர் வெளிப்படையாகவே எதிர்ப்பை தெரிவித்தனர்..!

நாங்கள் எதிர்பார்த்தபடி தான் தம்பிங்களா உங்கள்  அரசியல்வாதிகளின் நோக்கங்கள்.  இந்த திடலை வைத்து இனி எப்படி ஒவ்வொருவரும் அரசியல் காய்களை நகர்த்தலாம் என்று தான் திட்டமிடல் இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்கப் போவதில்லை.எங்கள் எதிர்பார்ப்பு சரியாக இருந்தது. ஆனால் இந்தளவு அவசர அவசரமாக மூன்று நாட்களுக்குள்  போட்டியைத் தொடங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை...தான்!! 

ஈழத்தமிழர்களாகிய எங்களுக்காக தமிழுணர்வாளர்கள் போராடினார்கள்; தங்கள் உயிரை துச்சமாக மதித்து தியாகம் செய்தார்கள்; தீக்குளித்தார்கள். அவர்களின் கனவும் ஈழத்தமிழருக்கானதாகவே இருந்தது. இவர்கள் முன் இந்த அரசியல்வாதிகள் எல்லாரும் அற்பமானவர்கள். இந்த தெளிவு எங்களிடம் இருக்கிறது. 

ஆக இந்த அரசியல்வாதிகளுக்கிடையில் நைந்து  நையப்புடைந்து வெறுத்துப் போக போவது என்னவோ மக்களாகிய நீங்களும் நாங்களும்...பாவம் நெடுமாறன் ஐயாவையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்....இந்த மனுசர் தன் கட்சிக்காகவோ , தன் குடும்பத்துக்காகவோ,தனக்காகவோ  என்றில்லாமல் ப்பாவம் ஈழத்தமிழருக்காக தெருதெருவாக நின்று போராடி சீரழிகிறார்...!  :(

ஆனால் ஒன்று.......
இனி எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் “இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு திடல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செப்பனிட்டு தருவோம்” என்று ஒரு வாக்கியத்தை அறிகையாக வைக்கலாம். - ஆக அரசியல்வாதிகளுக்கு இலாபம் தான் எப்படிப் பார்த்தாலும் ..!! 

Friday, October 11, 2013

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்....

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்.... 


படித்தது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி. கிறிஸ்துவப் பாடசாலை. ஆனால் எல்லா சமயத்தவருக்கும் பிராத்தனை இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பக்திப் பாடல்களும், சிவபுராணமுமாய் பொன்னையா மிஸ்ஸின் இனிமையான 
குரலில் பாடக் கேட்பதே ஒரு பரவசமான விசயம் தான். அதுவும் அவர் எம்.எஸ்.எஸ் அம்மாவின் காற்றினிலே வரும் கீதம் பாட்டைப் பாடும் கிடைக்கும் சந்தோசம் இருக்கே....இத்தனை வருசம் ஆகியும் அந்தக் குரல் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.

வருடா வருடம் நத்தார் பெருநாள் எந்தளவுக்கு சிறப்பாக கொண்டாடப்படுமோ அதே அளவு சிறப்பாக சரஸ்வதி பூசையும் கொண்டாடுவோம். நல்லூர் வீராளி அம்மன் கோவிலுக்கு கிட்ட இருக்கும் ஒரு மண்டபத்தில் தான் எங்கள் பள்ளிக்கூடத்து சரஸ்வதி பூசை கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
சரஸ்வதி பூசை கலை விழாவில் ஒவ்வொரு வகுப்பினரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி கொடுப்பார்கள். நாடகம், பாட்டு, வில்லுப்பாட்டு, நடனம், கோலாட்டம் என்று ஒரு பல்சுவை நிறைந்த கலைவிழாவாக அதிலும் விசேசமாக என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமுமாய் என்னவொரு சந்தோசமான கலைவிழாவாக அவை இருந்திருக்கின்றன தெரியுமா???

எல்லா மாணவிகளுக்கும் சரஸ்வதி பூசை எப்ப வரும் என்ற ஏக்கம் இருக்கும் ..காரணம் அன்றைக்கு நாம் எல்லாம் பள்ளிச்சீருடைக்கு டாடா பை பை...தான்... பட்டுப் பாவாடை சட்டை என்ன, பாவாடை தாவணி என்ன... அல்லது வூலி நலைக்ஸ் , காஷ்மீர் ஸில்க், ஷிபான் கிரேப் சேலை என்ன என்று அழகழகான வண்ணாத்துப் பூச்சிகளாக , பூச்சரமும், காப்பு, சங்கிலியுமாய் அலங்காரங்களுடன் தோழிகளுடன் சந்தோசமாக கழிக்கும் நாள்.

கலை நிகழ்ச்சி முடிய கிடைக்கும் அவல், சுண்டல், பொங்கல், வடையை விட சேலை கட்டக் கிடைத்த சந்தோசமும், வெட்கமும், பூரிப்பும் தான் அதிகமான விசேசமாக இருக்கும்..!

பள்ளியின் நாலு சுவருக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவிகள் அன்றைக்கு ஒரு நாள் சுதந்திரச் சிறகு முளைத்திருக்கும் பட்டாம் பூச்சிகளாக ஆசிரியர்களின் துணையுடன் வீதியில் நடந்து மண்டபத்துக்கு போவோம். போகும் போது பக்கட்தில் இருக்கும் சென்.ஜோன்ஸ், சென்.பற்றிக்ஸ், பாடசாலை இளவட்ட மாணவர்கள் அவரவர் சைட் அடிக்கும் மாணவிகளைப் பார்க்க சைக்கிளில் வந்து சுழட்டிக் கொண்டு போவதும், கடைக்கண்ணால் பார்த்து தோழிகளுடன் கதாநாயகிகள் கிலுகிலுத்துக் கொண்டு போவதும்.........அதை வேடிக்கை பார்க்கும் சைட் அடிக்க ஆளில்லாத இரண்டாம் கதாநாயகிகளான நாங்களும், புரிந்தும் புரியாதவர்கள் போல் “கேர்ள்ஸ்...அங்க என்ன சிரிப்பு...ஒழுங்கா லைன்ல வாங்கோ பாப்பம்” என்று அதட்டும் ஆசிரியர்களுமாய்.........அடடா....!

எல்லாம் வருசா வருசமும் கொண்டாடும் சரஸ்வதி பூசை கலை விழாவில் எத்தனை வித்தியாசமான புது புது கலை நிகழ்சிகளை நடத்தினாலும் என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமும், கொலு படியின் முன்னால் மாணவிகள் கோரஸாகப் பாடும் ”வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்” என்ற இந்தப் பாட்டும் எல்லா வருசமும் மாறாமல் இருக்கும். இப்போது இந்தப் பாட்டை கேட்கும் நேரங்களில் திரும்பவும் பழைய பள்ளிக்கூடத்தில் போய் அதே தோழிகளுடன்...அதே ஆசிரியர்களுடன், அதே வகுப்பு மேசையில் இருக்க இன்னொரு சந்தர்ப்பத்தை இந்த வாழ்கை தராதா என்ற ஏக்கம் மனதை வாள் மாதிரி அறுக்கிறது.

Tuesday, October 8, 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

அந்தப் படம் வந்த மூட்டம் முதல் ஸீன் பார்த்த போது ரொம்பவும் ஸ்லோவா இருக்கிற மாதிரி தெரிய அந்த விசிடி தட்டை தூக்கி எங்கோ மூலையில் எறிந்துவிட்டு போய்விட்டேன்.

நேற்று என்றைக்கும் இல்லாத திருநாளாக என் பிராணநாதர் உட்பட வீட்டில் அனைவரும் உட்கார்ந்து அதே படத்தை வாய் விட்டு சிரித்து சிரித்துக் கொண்டெ பார்த்து முடித்தோம் .

கனநாளைக்கு பிறகு அன்றைக்கு தான் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து  படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது மனதுக்கு மிகவும் சந்தோசமாக  இருந்தது. படமும் அந்தமாதிரி ஒரு முஸ்பாத்தியான படம். ஒட்டு மொத்தமாக வீட்டிலிருந்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல் வாய் விட்டு சிரித்து பார்க்க தக்கதாக ஒரு படத்தை தந்ததற்கு அந்த திரைப்படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

அந்தப் படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.!! :)

கதாநாயகன் தான் விஜய சேதுபதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அசப்பில் எனது ஃபேஸ்புக் தம்பிமார்களில் ஒருவரான Yogoo Arunakiri யைப் போலவே எனக்கு தெரிந்தார்.  “என்னாச்சி...ஓ கிரிக்கெட் விளையாடினமா...நீ தானே அடிச்சே....?” என்று ஒவ்வொரு தடவையும் அவர் ஆரம்பிக்கும் போதெல்லாம் சம்மந்தமேயில்லாமல் தம்பி யோகா தான் நினைவில் வந்து கொண்டிருந்தார்.

அதுவும் திருமண reception ல் மணப்பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாகி “பா........”” என்று அலறியபடி திரும்பும் ஒவ்வொரு கட்டமும் நாங்கள் எல்லோரும் அவருடன் சேர்ந்து அதே மாதிரி “பா.....” என்று கலாட்டா செய்யுமளவுக்கு சூப்பராக இருந்தது. இன்று காலை குளித்து விட்டு தலை சீவிக் கொண்டிருக்கும் போது என் பிராணநாதர் என்னைப் பார்த்து “பா...” என்றாரே பார்க்கலாம். எனக்கு தெரியும் இனி கொஞ்ச நாளைக்கு நான் என்ன சட்டை போட்டாலும், எப்பிடி தலை இழுத்தாலும் இந்த “பா ....”சத்தம் கேட்க்கப் போவது நிச்சயமெண்டு....

தமிழில் நல்ல படம், இரசிக்கத் தக்க படம், வித்தியாசமான படம், தரமான படம், விரசமில்லாத படம் இனி வரவே வராது என்று ஒப்பாரி வைக்கும் திரைவிமர்சகர்கள் இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருந்தார்கள் என்று தெரியவில்லை...ஆனால் கன நாளைக்கு பிறகு ஆரம்பம் முதல் கடைசிக்கட்டம் வரை  நகராமல் இருந்து இரசிக்கத்தக்கதாக , தரமான, விரசமேயில்லாத, வித்தியாசமான , மனம் இலேசாகிப் போகுமளவுக்கு வாய் விட்டுச் சிரிக்க வைத்த நல்ல முஸ்பாத்தியான தமிழ் படம் பார்த்ததில் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

சிவாஜி செத்துட்டாரா???

என்னாச்சி.........??? 

பிற்குறிப்பு:

இவ்ளோ நாள் கழிச்சு ஒரு படம் பாத்திட்டு எழுதியிருக்கிறேன்... எவராவது வந்து இங்கன விஜய சேதுபதி மாதிரி டயலாக்  எழுதினீங்கன்னு வையுங்களேன்.....சூன்யம் வைச்சுடுவேன் ஆம்மா,...ஜாக்கிரதை !!!

Monday, August 5, 2013

ஊடகங்களுக்கான இறுதி அஞ்சலி !

 
 ஊடகங்களுக்கான இறுதி அஞ்சலி ! (ஜூலை 31 2013ல் எழுதியது)
 
செய்திகளை முந்தி தரும் போட்டா போட்டியில் ஒவ்வொரு ஊடகமும் அதுவும் உலகத்தரம் வாய்ந்த பி.பி.சி , கலைக்களஞ்சியம் என்று மார்தட்டிக் கொள்ளும் விக்கிபீடியா , விகடன்.காம் என்று பலதரப்பட்ட இணைய ஊடகங்கள் ,பத்திரிகைகள், தொலைக்காட்சி நி்றுவனங்கள் அத்தனையும் இன்று ஒரு பெண்ணை உயிரோடு இருக்கும் போதே சாகடித்து, மீண்டும் அந்தப் பெண் உயிரோடு இருக்கிறாராம் என்றும் இரண்டு செய்திகளை[ப் பரப்பி விட்டு அந்தப் பெண்ணிடமே போய் “ஏங்க நீங்கள் இறாந்துவிட்டதாய் செய்திகள் வந்ததே...அது பற்றிய உங்கள் மனநிலை என்ன? “ என்று ஒருவித குற்றவுணர்வு கூட இல்லாமல் எத்தனை இலகுவாக மைக்கை நீட்டிக் கேள்வி கேட்கிறார்கள்??? !!!!!!!

முன்பெல்லாம் பத்திரிகைக்கென்று ஒரு நேர்மையும் , நாகரீகமும் இருந்தது. உலகத்தில் நடக்கும் தவறுகளையும், பித்தலாட்டங்களையும் அம்பலமாக்கும் பத்திரிகையில் அவை பற்றிய செய்தியில் ஒரு துளிதன்னும் பொய்யோ பிழையான தகவலோ இருக்கக் கூடாது என்ற கவனிப்பும் அக்கறையும் இருந்தது. அத்தனையையும் மீறி ஒரு தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டால் அதன் அடுத்த நாளைய பிரதியில் மனம் வருந்துகிறோம் என்று ஒரு பெட்டிச் செய்தியில் அப் பத்திரிகை நிறுவனம் மன்னிப்புக் கோரியிருக்கும் சம்மந்தப்பட்டவர்களிடமும் , வாசகர்களிடமும். அத்தகைய நாகரீகமும், நேர்மையும் இப்போது எங்கே போய்விட்டது??

இதுவரை நடிகை கனகாவின் மரணச் செய்தியை வெளியிட்ட அத்தனை இணையத்தளங்களும், அவர் உயிரோடிருக்கிறார் என்பதையும் வெளியிட்டதே அன்றி தங்களுடைய தவறுக்காக மனம் வருந்தியதாகவே தெரியவில்லை. ஒரு சிறு வருத்தமோ மன்னிப்போ வாசகர்களிடமோ அல்லது நடிகை கனகாவிடமோ தெரிவிக்க வேண்டிய நாகரீகம் , கடமை தங்களுக்கு இருக்கிறது என்ற சுரணையே இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

நடிகையின் மரணச் செய்தியிலும், , அவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தியிலும் தங்கள் ஊடகங்களை ஊதிப் பெருப்பித்த இலக்கு ம்ட்டுமே அவர்களுக்கு தேவைப்பட்டதாக இருந்திருக்கிறது.

இதோ விகடன்.காமில் இது போல் எமது ஊடக மூதாதையர்களே எத்தனை பேரை உயிரோடு இருக்கும் போது சாகடித்திருக்கிறார்கள் பாருங்கள் என்று பட்டியல் போட்டிருக்கிறதே தவிர அதுவும் தனது தவறையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை...!!
(https://www.facebook.com/photo.php?fbid=586939831364811&set=a.190403194351812.47794.189960617729403&type=1&theater )

இன்று உயிரோடிருந்த கனகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் மூலம் இணையத்தளம் முதற்கொண்டு அத்தனை ஊடகங்களும் அவர்கள் மீதான் நம்பகத்தன்மைக்கு மக்கள் மத்தியில் இறுதி அஞ்சலி பெற்றிருக்கிறார்கள். அவ்வளவே...!!

இனிமேலும் இந்த ஊடகங்களில் வரும் செய்தியை நம்ப முடியுமா என்ன??
 
 

விகடன் ஈ-மகஸினில் வந்திருக்கும் செய்தி:

இறந்தார்... ஆனால் இறக்கவில்லை!

நேற்றைக்கு நடிகை கனகாவை இறந்ததாக செய்தி வாசித்தார்கள் இல்லையா? இப்படி உலகம் முழுக்க யாருக்கெல்லாம் செய்தி வாசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போமா? http://bit.ly/14hiEsJ

* குத்தூசி ஒரு சிலை சிதிலமடைந்து கடந்ததைப்பற்றி எழுதுகிறபொழுது காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் என்று எழுதி விட்டார். அவருக்கு இதழ் வெளியான காலையில் ஒரு அழைப்பு, "நான்தான் காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் பேசுகிறேன்" என்று.

* அமெரிக்காவின் எழுத்துலக பிதாமகர் என புகழப்படும் மார்க் ட்வைன் உயிரோடு இருக்கும் பொழுதே அவர் இறந்து விட்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, "கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட இறுதி அஞ்சலி" என நையாண்டி செய்தார் அவர்.

* உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் ஜப்பானிய பத்திரிகைக்கு பேட்டி தரமாட்டேன் என்று மறுக்க, மனிதருக்கு இரங்கல் அஞ்சலி எழுதிவிட்டார்கள்.

* பாடகி மடோனா இறந்துவிட்டதாக பிபிசி யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோ வெளியானது. பின்னர் பார்த்தால் அது அவர்களின் சேகரிப்பில் இருந்தது என்பது தெரிந்தது. ஒருவர் சாவதற்கு முன்னமே முன்யோசனையாக வீடியோ தயார் பண்ணி வைத்து இருக்கிறார்கள். இதைப்பற்றி எதுவுமே வாயை திறக்கவில்லை பிபிசி.

* ரூட்யார்ட் கிப்ளிங் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்து விட்டதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட... அவர், "நான் இறந்து விட்டேன்; உங்களின் சந்தாதாரர் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விடுங்கள்!" என்று கடிதம் எழுதினார்.

* பிடல் கேஸ்ட்ரோ, போப் ஜான் பால் இருவரும் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்ததாக சிஎன்என் அறிவித்தது. அதிலும் பிடல் கேஸ்ட்ரோவின் மரணத்தை ரீகனின் மரணத்தோடு சேர்த்து வெளியிட்டது. உண்மையில் இருவரும் இறக்கவில்லை. கேஸ்ட்ரோவை தடகள வீரர், சினிமா நட்சத்திரம் என்று வேறு எழுதிவிட்டார்கள்.

* ஜெயப்ரகாஷ் நாராயண் இறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்து, பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. உளவுத்துறை தலைவர் மருத்துவமனையில் ஜெபியைப் போல இருந்த இன்னொருவரை பார்த்துவிட்டு வந்து கொடுத்த தகவலால் வந்த வினை!

* கொலரிட்ஜ் எனும் கவிஞர் இறந்துவிட்டதாக வந்த செய்தியை ஒருவர் வாசித்துக்கொண்டு இருந்தார். "அவர் ஒரு மாபெரும் கவிஞர்; சிறப்பாக அவரின் ரீமொர்ஸ் நாடகம் வெற்றி பெற்ற பின் அவர் தூக்கில் தொங்கியது விந்தையானது!" என்று அவர் வாசிக்க, கொலரிட்ஜ், "அதை விட விந்தையானது, அவர் உங்கள் முன் நிற்பது!" என்றார். இவரின் டி ஷர்ட்டை திருடிப்போன திருடன் அதை அணிந்து கொண்டு தூக்கில் தொங்கி விட்டான். அந்த சட்டையில் இவரின் பெயர் பொறித்திருந்ததில் வந்த சிக்கல் அது.

ஆல்பிரெட் நோபலின் தம்பி லுடிவிக் வெடிவிபத்தில் இறந்துபோக, 'மரணத்தின் வியாபாரி மரணம்!' என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க, அப்பொழுது மனம் வருந்தி நோபல் பரிசை உருவாக்கினார் ஆல்பிரெட் நோபல்!

- பூ.கொ.சரவணன்

Sunday, August 4, 2013

வலிகள் உணரப்படுமா??





 “First they came for the communists, and I did not speak out—
because I was not a communist;
Then they came for the socialists, and I did not speak out—
because I was not a socialist;
Then they came for the trade unionists, and I did not speak out—
because I was not a trade unionist;
Then they came for the Jews, and I did not speak out—
because I was not a Jew;
Then they came for me—
and there was no one left to speak out for me.”
― Martin Niemöller



எங்கள் வீடுகளிலும் இப்படித் தான் எங்கள் அம்மாக்கள் நினைவிழந்து மூர்ச்சித்து வீழ்ந்தார்கள்..!

எங்கள் பிள்ளைகள் தங்கள் அப்பாக்களை இழந்து, அண்ணன் தம்பிகளை இழந்து வெம்பி வெதும்பிப் போய் திக்கித்துப் போய் நின்றார்கள்.!!

இளம் மனைவிகள் விதவைகளாகி வெள்ளை சேலை கட்ட வைத்த பின் எங்களுக்கு சமாதானக் கொடியின் நிறம் மறந்து போய்விட்டது. !!

எங்கள் நெற்றிப் பொட்டுகள் கழுவப்பட்ட போதுகளில் எங்கள் மனதில் துளிர்விட்ட உணர்வுகளின் வடிகால்கள் எதை நோக்கி வழிநடந்தனவோ ......அதே உணர்வுகளின் சின்ன துளிர்கள் இப்போது உங்கள் மனதிலும் முளைவிட்டிருக்குமே....??

உங்களுக்காவது செத்தவீடுகள் கொண்டாட இடமும், பூதவுடல் பத்திரப்படுத்த பிரேதப் பெட்டியும் கிடைத்திருக்கிறது.. !!

ஆனால் செத்த இடத்திலேயே புதைக்கவோ, எரிக்கவோ முடியாமல் அனாதைகளாக பெற்றோர்களை, பிள்ளைகளை பிணங்களாகப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிய அவலங்கள்.... வீட்டு வளவுகளையே எங்கள் உறவுகளை எரிக்கும் மயானங்களாக்கிய கொடுங்காலங்கள் வாழ்நாள் முழுவதும் சீழ் வடிந்த ரணங்களாக சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் எங்கள் மரணங்களை கொண்டாடிய உங்கள் வீடுகளில் அதே அவலங்களை பரிசளித்திருக்கிறார்கள் உங்களவர்கள்....!!

இப்போதாவது புரியுமா எங்கள் இழப்புகளின் வலிகள் உங்களுக்கு..என்று ஒரு வினாடி யோசிக்க வைத்தாலும் , பொது நாகரீக வேடதாரிகளைப் போல் உங்களுக்காக பரிதாபப்படுகிறேன் , துடித்துப் போகிறேன் என்று பொய்சொல்ல முடியவில்லை ....எனினும் மனதின் ஒரு மூலையில் வலிக்கத் தான் செய்கிறது....!!

Thursday, May 2, 2013

கான மயிலாட கண்டிருந்த வான் கோழி...!

சீமான் என்ற சினிமாக்காரர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் குரல் கொடுத்தார் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக சீமானின் செயல்பாடுகள் எதையும் விமர்சிக்கக் கூடாது என்றில்லை. சீமானை விட , சீமானுக்கு முன்பிருந்தே எமக்காக குரல் கொடுக்கும் எந்தத் தலைவரையும் அவர்கள் வழி பிரளும் போது விமர்சிக்க ஈழத்தமிழர்கள் என்றைக்குமே பின்வாங்கிய்தில்லை. தேசியத்தலைவர் இருக்கும் போதே விமர்சனம் செய்தவர்கள் நாங்கள். அவர் இல்லையென்ற தைரியத்தில் எங்கள் மாவீரர்களையும் அவர்களையும் வைத்து பிழைப்புவாதம் நடத்தும் எவரையும் ஒத்து ஊதி உயர்த்திவிடும் பஜனைக் கூட்டம் அல்ல நாங்கள்.

ஈழத்தமிழருக்காக எவருமே குரல் கொடுக்காத நேரத்தில் அவர் ஒருவர் தான் குரல் கொடுத்தார் ..அவரை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று என் அன்புக்கு பாத்திரமான ஒரு சகோதரர் எழுதிய போது மிகவும் மனவருத்தமாகத் தான் இருந்தது. ஆனால் உண்மையில் ஈழத்தமிழரையும், எங்கள் போராட்டத்தையும்  கொச்சைப் படுத்துவது எங்களைப் பொறுத்தவரை சீமான் தான் ! நாங்கள் அல்ல!!
சீமான் 30 வருடத்துக்கும் மேலான எங்கள் போராட்டத்தையும், மாவீரர்களையும், எங்கள் தலைவரையும்  தன்னுடைய ஒவ்வொரு செய்கையாலும் கொச்சைப்படுத்துகிறார். மாவீரர் நாளுக்கான தனிப்பெரும் பாடலை தன் கட்சியின் ஆவணமாக்கினார். விடுதலைப்புலிகளின் சின்னத்தையும், கொடியையும் தன் கட்சிக் கொடியாக்கினார்.  சாதி பேதங்களை அழிக்க வேண்டுமென்ற தேசியத்தலைவரின் பெயரை சொல்லிக் கொண்டே  அவர் என்னென்ன சாதி கூட்டங்களில் பங்கெடுக்கிறார் என்று எல்லோரும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்??

இதென்ன அவர் டைரக்ட் பண்ணும் சினிமாவா???  இவர் யார் போராளியா அல்லது அரசியல்வாதியா? இவர் ஒரு இரண்டுங்கெட்டான். தேசியத்தலைவருடன் நின்று எடுத்த ஒரே ஒரு போட்டோவுடன்  சினிமாவை விட்டு அரசியலில் குதித்து தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆயுதம் தான் ஈழத்தமிழருக்காக கொடுக்கும் குரல்!!   2008ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திலிருந்து 2009 மே17ம் திகதி வரை  (நீங்கள் சொன்னீர்களே எல்லோரும் வாய் மூடிக் கொண்டிருந்த நாளில் இவர் மட்டும் தான் குரல் கொடுத்தார் என்று??!அன்றைய நாட்களில்)  அவருடன்  தொடர்பிலிருந்த ஈழத்தமிழர்களில் நாங்களும் அடக்கம். அதனால் நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே சீமானை அறிந்து , தெரிந்து, பின் உணர்ந்து விலகியவர்களில் நான் அடக்கம்! அதனால் கொச்சைப்படுத்தல் எங்கு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் முழுத்தகுதியும் எங்களுக்கு இருக்கிறது.

உண்மையான போராளிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி வருசக்கணக்காக தங்கள் தங்கள் துறையில் கடுமையான உழைப்பிலும், பயிற்சியிலும், மக்கள் சேவையிலும் ஈடுபட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்;மடிபவர்கள். தேசியத் தலைவரின் பின்னால் படை வந்தது என்றால் அந்தப் படை உண்மையான ஆயுதங்களை கைகளில் ஏந்தி கல்லிலும், முள்ளிலும், காடுகளிலும் , புளுதிகளிலும் அல்லல்பட்டு , கடும் உழைப்பிலும், பயிற்சியிலும் தேர்ந்த உண்மையான களப்போராளிகள்...இந்த மாதிரி நாடக காஸ்டியூம் போட்டுக் கொண்டு வந்து நின்றவர்கள் அல்ல. இங்கு இதில் இந்த கரும்புலிகள் போல் வேசம் போட்டுக் கொண்டு நிக்கும் இந்த நபர்கள் யார்?? துணை நடிகர்களா?? இவர்கள்  என்ன பயிற்சியில் தேர்ந்தவர்கள்?? இது என்ன வகையான படையணி?? இதை எப்படி சீமான் அங்கீகரித்தார்??? புலியை பார்த்து பூனை சூடு போட்டால் பூனை புலியாகாது..

எங்களுக்காக குரல் கொடுத்தார் எங்களுக்காக குரல் கொடுத்தார் என்று சொல்லியே எங்கள் வாயை மூடிக் கொண்டிருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் கேட்டு கிண்டல் பண்ணிச் சிரிக்கிறோம்..! எங்களுக்காக இவர் மட்டும் தானா குரல் கொடுத்தார்??? அமீர் குரல் கொடுக்கவில்லையா?? சிறை செல்லவில்லையா?? சத்யராஜ் குரல் கொடுக்கவில்லையா?? மணிவண்ணன் சார் குரல் கொடுக்கவில்லையா?  இவர்கள் எல்லாம் 2009ல் தான் குரல் கொடுக்க பழகினார்கள். ஆனால் அதற்கு முன்னமே காலம் காலமாய் வைகோவும், நெடுமாறன் ஐயாவும் எங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே....இவர்கள் யாரும் எங்களை வைத்து , அல்லது எங்களுக்காக குரல் கொடுத்தேன் பேர்வழி என்று சொல்லி பிழைப்பு நடத்தவில்லை ...சீமானை தவிர!!

சீமானின் பின்னால் போகும் அத்தனை இளைஞர்களும் சீமானுக்காக போகவில்லை. அவருடைய கட்சிக் கொடியிலிருக்கும் புலி -பிரபாகரன் என்ற மாவீரனின் சின்னம் என்ற உணர்வில் , அவர்களையும் விடுதலைப் புலிகளாய் நினைக்க வைக்கிறது. தேசியத்தலைவரை மனதார நேசிக்கும் அப்பாவிகளான ஆனால் தமிழ் உணர்வு கொண்ட இளைஞர்கள் அவர்கள். ..பிரபாகரன் வழியில் சீமான் செல்கிறார் என்று நம்பிக் கொண்டு பின்னால் செல்கின்றனர். ஒரே ஒரு நாள் சீமான் தனக்கான கொள்கை என்று ஒன்றை தனியாகச் சொல்லி, விடுதலைப் புலிகளுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சும்மாவேனும் சொல்லிப் பார்க்கட்டுமேன்...ஆந்த வினாடியிலிருந்து கட்சியில் சீமானைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்...இது என்னுடைய சவால். அப்படி இல்லை சீமானுக்காக தான் இருக்கிறோம் என்றால் சீமான் விடுதலைபுலிகளின் கொடிச்சின்னத்திலும், மாவீரர் பாடல்வரிகளிலும் கை வைக்காமல் தனக்கென்று தனிப்பட்ட சின்னத்தையும் கொடியையும் ஆவணத்தையும் தயாரித்திருக்க வேண்டும்!!

நடிகன் என்றைக்குமே நடிகன் தான்...அரசியல்வாதி என்றைக்குமே அரசியல்வாதி தான்..இரண்டு ஜாதியும் சாக்கடைகளுக்கு சமமானவை...போராளிகள் என்று சொல்லி வேசம் தான் போட முடியுமே தவிர இவர்களால் போராளிகளாக ஆக முடியாது.

எங்களுக்காக குரல் கொடுத்தார்கள் என்பதற்காக எங்களுக்காக உயிரையே கொடுத்த எங்கள் மாவீரர்களின் மதிப்பிலும், மாண்பிலும் புளுதி சேர்ப்பவர்களை பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தால் எங்களைப் போல் ஈனப்பிறவிகள் வேறு யாரும் இருக்க முடியாது..!

Wednesday, March 6, 2013

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்.......!

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்.......!



ம்... ம்... இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் தூண்டுதலில் பத்துப் பதினைந்து பெண்கள் கொடி பிடித்துக் கொண்டு போகும் ஊர்வலத்திலும் இன்று பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றிய கதைகள் பேசப்படலாம், பெண்ணியம் பற்றி ஆவேசமான கருத்து தர்க்கம் நடை பெறலாம், பெண் அடிமைத் தனம், பெண் சுதந்திரம் என்று கூச்சல் போடலாம். எல்லாம் அடங்கிப் போய் இன்றைக்கான கண்துடைப்பின் சரியான நிறைவேறலின் மகிழ்வில் தூங்கப் போகலாம்; நாளை மறந்து போகப்படலாம். அது தான் இன்றைய மகளிர் தினம். வழமையாக ஒவ்வொரு வருடமும் இப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறது எந்த வித்தியாசமும் இல்லாமல்??


 ஆனால் சமூகத்தில் பெண்களின் நிலமையில் நாளுக்கு நாள் எத்தனை எத்தனை வித்தியாசமான ஏற்றத் தாழ்வுகள்??முரண்கள்? முடங்கல்கள்?முடக்கபடல்கள் என்று தெரிந்து கொள்கிறோமா?? அவற்றைப் பற்றி ஆர்வம் காட்டப் போகிறோமா என்றால் என்னுடைய பதில் இல்லை என்பது தான்.


பெண்ணியம் என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் அநேகமானோரின் முகச்சுளிப்புக்கு இடமளித்துள்ளதே தவிர அதனுடைய தேவையைப் பற்றி பெண் இனத்தின் பெரும்பகுதியினரே புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விசயம். ஆணாதிக்கம், அடிமைப்படுத்தல் என்று கூச்சல் போடும் பெண்ணினத்தின் பெரும் பகுதி வெறும் கூச்சலுடன் தான் இதுவரை நிற்கிறது. தனக்கான பாதிப்பை புலம்பலில் மட்டும் வெளிப்படுத்துவதோடு அநேகமானோர் ஒதுங்கி, ஒடுங்கி விடுகிறார்கள்.   சூழல், குடும்பம், குழந்தைகள்,கலாச்சாரம் என்று பல  காரணங்களால் முடக்கப்பட்டு யாரும் அந்த பாதிப்புகளிலிருந்து தம்மை விடுவிக்க முற்படுவதில்லை.

பெண் என்றால் பொறுமையின் சின்னம், தியாகத்தின் திருவுருவம் என்று சொல்லிச் சொல்லி மூளைச்சலவை செய்யப்பட்ட  ஒரு இயந்திர மனப்பான்மை பெரும்பாலான பெண்களிடம் ஆழமாக வேரூன்றி இருப்பதால் எந்த அடிமைத்தனத்தையும், அடக்குமுறையையும் தாங்குவதும், அதை சமூகத்திடமிருந்து மறைப்பதும் தனது சிறப்பியல்பாக இவர்கள் நினைக்கிறார்கள்.இப்படிப்பட்ட பெண்கள் தான் ஆண்களை விட பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாத அறியாமையிலிருப்பவர்கள். பெண்ணியத்தின் தேவையை பரப்ப நினைக்கும் உண்மையான  பெண்ணியவாதிகள் இவர்களைப் போன்றவர்களுக்கு தான் முதலில் புரியவைக்க முயல வேண்டும்.

பெண்ணியம் என்பது மற்றவர்கள் நினைப்பது போல் கலாச்சாரத்தையோ, பண்பாட்டையோ மீறவைக்கும் வழிப்பாதையல்ல. சமுதாயத்தில் சரி சம உரிமை என்பது ஏதோ பாவப்பட்ட செயலாக கருதுமளவுக்கு பெண்னினம் எதிலும் தாழ்ந்து போனதல்ல என்பதை பெண்களுக்கும், சமூகத்துக்கும் புரியவைக்கும் ஒரு சமூக சீர்த்திருத்தத்தின் தத்துவம் அது!


பெண்ணியத்தின் முதல் புரட்சி முன்னெடுப்பு இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தான் நடந்தேறியது. முதலாவது பெண்ணியப் புரட்சி 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டங்களிலும் நடத்தப்பட்டதாகவும், இரண்டாவது புரட்சி 1960, 1970களிலும் பின்னாளில் 1990 இலிருந்து இன்று வரையும் நடந்து கொண்டிருப்பதும் வரலாற்றுச் சான்றுகள் என்றால் உலகத்தில் மானுடம் தோன்றிய காலந்தொட்டு இந்த  குறிப்பிட்ட காலகட்டம்  வரை பெண்களின் நிலமை எத்தகையதாயிருந்திருக்குமென்று உணர்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் பகுத்தறிவுள்ள எவருக்கும் தேவையில்லை. ஏன் இப்போது கூட பெண்ணியம் என்ற தத்துவம் சமூகத்தில் வரவேற்புக்குரியதாயிருக்கிறதா அல்லது வெற்றி பெற்றிருக்கிறதா என்றால்...ப்ச் என்று உதட்டைப் பிதுக்கிக் கொள்கிறார்கள் மனித உரிமை சங்கங்களைச் சார்ந்தவர்களும், பெண்ணிய ஆர்வலர்களும்.

பெண்ணியம் என்ற சொல் எந்தவொரு மொழி பேசுகின்ற, எந்தவொரு இனம் சார்ந்தது என்ற தளநிலைகளில் இல்லாமல்   பாலியல் வேறுபாட்டால் மட்டும் வித்தியாசப்படுத்தப்பட்டு,இது வரை காலமும் ஒடுக்கப்பட்டு  இருந்து வரும் மானுடத்தின் மறுபாதிக்கான போராட்டம் அல்லது தீர்வு எனக் கொள்ளலாமா?? என்ற
இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமானால், முதலில் பெண்ணியம் என்றால் என்னவென்று சரியான புரிந்து கொள்ளல் நம்மிடம் இருக்க வேண்டும்.

 பெண்ணியம் என்பது  பல்வேறு தளத்தில் ஆராயப்பட்டு வரும் பாரிய சமூக தீர்வுக்கான ஒரு போராட்டம் தான். பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல் (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PSYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ள ஒரு பாரிய விடயம்.


பாலியல் ரீதியாய் பல நிலைகளில் பலவீனப்படுத்தப்பட்டதாயும், ஒடுக்கப்பட்டதாயும் இருக்கும் ஒரு மானுடத்தின் ஒரு பகுதி தனக்குரிய  சமத்துவத்துக்காக அறிவித்துள்ள, அல்லது ஆராய்ந்து கொண்ட  ஒரு  போராட்டம் என்று அறிவுறுத்த முற்பட்ட போது ஓர் முனைவர் என் முன் வைத்தை கேள்விகள் பின்வருமாறு:

  • பெண்ணியம் என்ற சொல்லின் பொருள் எல்லா நாட்டிற்கும் எல்லா இனத்திற்கும் பொதுவானதா? 
  • ஈழத்துப் போர்க்களத்தில் நின்ற பெண் போராளியைக் குறிக்கும் போதில், போர் மறவர் என்றே குறிப்பிட வேண்டும். அங்கே போர்க்களத்தில் நிகழும் நிகழ்சியைப் பெண்ணியத்திற்கு எதிராக நிகழ்த்தப் படுவதாகக் கூறுதல் பொருந்தாது.
  • அதேபோல், அரபு நாடுகளில் பெண்ணியத்தை என்னவென்று கூறுவது?
  • அஸாமில் பெண்ணின் வாழ்க்கை அமைப்பை எவ்வாறு கூறுவது?
  • தமிழகத்து கிராமத்துப் பெண்ணுக்கும் சென்னை போன்ற நகரத்துப் பெண்ணுக்கும் ஒரே வகையான பெண்ணியக் கோட்பாடு கூற முடியுமா?
  • பெண்ணியம் பற்றிப் பேசுகின்றவர் பெண்ணியம் என்றால் என்ன என்பதை விளக்கி அதை அனைத்துப் பெண்களும் ஏற்கச் செய்ய இயலுமா?
  • ஒரே கூட்டில் வாழ்கின்ற இரண்டு பெண்களுக்கு ஒரே வகையான பெண்ணியக் கொள்கை இருந்திடுமா?

இந்தக் கேள்விகள் எல்லாரிடமும் இருக்கும் . சிந்திக்க வேண்டியவை தான். ஆனால் உண்மையில் பெண்னியத்தின் முக்கியத்துவத்தையும், அதனுடைய உண்மையான அர்த்தத்தையும் சரியாகப் புரிந்து கொண்டால் முதல் கேள்விக்கான விளக்கமே மற்றைய கேள்விகளுக்குமான  பதில் என்பதை உணர முடியும்!

அதாவது  ஆண், பெண் என்ற பாலியல் வேறுபாட்டை வைத்தே சமூகத்தில் இரண்டு பிரிவுகளாக மானுடம் வித்தியாசப்பட்டிருக்கிறது. அதன் பின் பெண்ணினம் ஆணினத்தின் ஆளுமைக்குட்பட்டதாயும், இரண்டாம் பட்ச தர நிலைக்கு தள்ளப்பட்டதாயும், ஆண்வர்க்கத்தின் தேவைகளுக்கமையவே செயல்படும்  அடிமைக்குரிய  அந்தஸ்தில் தான் வர்க்கப்படுத்தப்பட்டுமிருக்கிறது. இந்த நிலைப்பாட்டின் வன்மையால் பெண்ணினம் பிற்படுத்தப்பட்ட ஒரு சூழலில் நின்றே எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.  இவை எல்லா நாட்டிலும், எல்லா மதம் சார்ந்த பெண்ணுக்கும், எந்த மொழி பேசும் பெண்ணுக்கும் ஒரே வகையான பாதிப்பைத் தான் விளைவிக்கும். அப்படியிருக்க நாட்டுக்கு நாடு  எப்படி பெண்ணியம் வித்தியாசப்படும் ??
உதாரணத்திற்கு பெண்ணியத்துக்கு எதிரான 'ஹானர் கில்லிங்' என்ற கௌரவக் கொலைகளை எடுத்துக் கொள்வோம். இவை அதிக பட்சமாக இஸ்லாமிய நாடுகளில் நடக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் இஸ்லாமியம் சாராத மற்ற நாடுகளிலும் இன்று வரை நடந்து கொண்டு தானிருக்கிறது. ஒரு மானுடம் தன்னுடைய உரிமைகள் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் , அதன் விருப்பத்துக்கு மாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள விருப்பமின்றி அவற்றை எதிர்த்தால் அதற்குரிய பலாபலன் அந்த மானுடத்தின் ஆண் உறவுகளாலேயே கொல்லப்படுதல் கௌரவக் கொலைகள் எனில் இத்தகைய செயலை ஒரு நாட்டில் சரியென்றும், இன்னொரு நாட்டில் தகாது என்றும் பெண்ணியக் கொள்கையால் ஏற்றுக் கொள்ள முடியாது.  எந்த ஒரு இனத்திலும், எந்தவொரு மதத்திலும், எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய  கொடுஞ்சயல்கள் பெண்களுக்கெதிராக இழைக்கப்படுவதை பெண்ணியம் அனுமதிக்காது.

ஆனால்  கீழ் வரும் நாடுகளின்   சட்டமுறைகள் கௌரவக்கொலைக்கு சாதகமாக உள்ளன. எப்படியெனில்...:

ஜார்டன்: தண்டனை ஒழுங்கின் 240ம் ஷரத்தின்படி "எந்த நயாராவது அவர் மனைவியோ, குடும்பப் பெண்ணோ மற்ற ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வது தெரிந்து அவளை கொன்றால் அல்லது காயப் படுத்தினால், அவர் தண்டனையிலிருந்து நீக்கம் அடைவர்."

சிரியா: ஷரத்து 548 படி "ஒரு ஆண் தன் குடும்பத்தின் பெண்ணை கள்ள காதல் செய்கைகளில் பிடித்து, மரணமோ, கொலையோ ஏற்ப்பட்டல், அவர் தண்டனையிலிருந்து நீக்கம்"

மொராக்கோ: தண்டனை ஒழுங்கு ஷரத்து 548 "கொலை, அடித்தல், காயமேற்ப்படுத்தல் இவை ஒரு கணவனால் கள்ளக்காதலுடைய மனைவியின் மேலேயோ அவள் காதலன் மேலேயோ செய்தால், அச்செய்கைகள் மன்னிக்கப்படும்"

ஹைடி: தண்டனை ஒழுங்கு ஷரத்து 269 " ஒரு கணவன் தன் மனைவியையோ அல்லது (பெண்) சகவசிப்பவரையோ கள்ளப் காம செய்கைகளில் கண்டுபிடித்து கொலை செய்தால், அவருக்கு மன்னிப்பு"

துருக்கி: துருக்கியில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும்

அதே நேரம் பின்வரும் நாடுகளில் கௌரவக்கொலை சட்டத்திற்க்கு புறம்பானது ஆனால் மிகப்பரவலான முறையில் கௌரவக் கொலைகள் இந்நாடுகளில் நடக்கின்றன.

பாகிஸ்தான்: கௌரவக்கொலை பாகிஸ்தானில் காரி-காரோ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்தக் குற்றம் சாதாரணமான கொலையாக கருதப்பட்டு வந்தது;வருகிறது. பெரும்பான்மையாக நடந்த இத்தகைய கொலைகளை காவல் துறையும், நீதித்துறையும் கண்டுகொள்ளாமலே இருந்திருக்கின்றன. ஆனால்  சர்வதேச அழுத்தங்கள் காரணமாக  பாகிஸ்தான் டிசம்பர் 2004ல், இக்கொலைகளை தடுக்கும்படி சட்டம் இயற்றியது; இச் சட்டம் கொலையுண்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு கொலைகாரனால்  'தண்டனைப் பணம்' கொடுப்பது போல் அமைக்கப் பட்டிருக்கிறது. பாகிஸ்தானிய மாதர் நலச்  சங்கங்களும், மனித உரிமைக் கமிஷனும் இந்த சட்டம் ஒரு கேலிக்கூத்தென்றும், சர்வதேசத்தின் முன் ஒரு கண் துடைப்பெனவும் குரல் கொடுக்கின்றனர். காரணம் கருணைக் கொலைகளை பெரும்பாலும் ஒரு பெண்ணின் தகப்பனாரோ அல்லது சகோதரர்களோ தான் செய்கின்றனர்.  பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷன் அறிக்கை அறிக்கையின் படி, 1998ல் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 286 கௌரவக்கொலைகள் செய்யப்பட்டன. உண்மையான, தகவலறியப்படாத குற்றங்கள் இதற்க்கு மேல் பல மடங்கு. 4 வருடங்களுக்கு முன் முக்தர் மாய் என்ற பெண் 'கௌரவ கற்ப்பழிப்பி'ற்க்கு ஆளானார்.

பாலஸ்தின்: பாலஸ்தின் பெண்ணுரிமை அறிக்கையின் படி காசா, மேற்க்கு கரைகளில் 1998 மட்டுமே 20 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் தகவல் இல்லாமல் மேலும் பல பெண்கள் 'கௌரவ' கொலைக்கு ஆளாவதாக நம்பப்படுகிறது. 

 இது இப்படியிருக்க பின்வரும் தரவுகள் உலகத்தில்  ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் பெண்களின் நிலையைக் காட்டுகிறது.: (Consider the following from the US Department of Justice, General Statistics:)
  • ஒவ்வொரு 9 வினாடிகளுக்கொருமுறை, ஒரு பெண் அடித்து துன்புறுத்தப்படுகிறாள்.
  •  1992ல், அமெரிக்காவின் மருத்துவத் துறையின் கணிப்புப்படி 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் அவர்களது கணவர்களாலும், காதலர்களாலும், மூர்க்கமாகத் தாக்கப்பட்டு, வன் கொடுமை, வன்புணர்ச்சி போன்றவற்றால் சித்ரவதைப்படுகிறார்கள்.
  •  அமெரிக்காவில் ஹோம்லெஸ் எனப்படும் வீடிழந்து தெருவில் வசிக்கும் பெண்களிலும் , குழந்தைகளிலும் 50% சதவீதமானோர் குடும்பத்தினரின் வன்முறைக்கு பலியானவர்கள்.
  • அமெரிக்காவில் விலங்குகளுக்கான புகலிடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களுக்கான புகலிடங்கள்  இருக்கின்றன. 

ஜனநாயகத்துக்கும், சமவுரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்காவிலேயே பெண்களின் நிலை இப்படியென்றால் மற்றைய நாடுகளில் எப்படியிருக்குமென்று சொல்ல வேண்டுமா??

பெண்களும் சிறுமிகளும் பெண் சிசுக்கள் உட்பட வருடத்திற்கு 5000 பேர் அவர்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்படுகின்றனர் என்பது சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு. இக் கொலைகளில் 99% சதமான கொலைகள் கற்பு, நடத்தை, வாழ்வியல் கோட்பாடு, மதக் கொள்கை என்ற போர்வையில் பெண்ணினத்தைக் கடுமையாக ஒடுக்கி வைத்திருக்கும் கலாச்சார பின்புலன்களில் ஊறியவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாடுகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் இனங்களைச் சேர்ந்த குடும்பங்களில் இருக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்துக்கோ, இன, மதக் கொள்கை - கோட்பாடுகளுக்கோ புறம்பான உறவு, நடத்தை வழிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்தகைய உறவு முறைகளை அல்லது நடத்தையைத் தமது குடும்பத்துக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் இழைக்கப்படும் பேரிழிவாகக் கருதி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் இத்தகைய படு பாதகமான, கொடூரமான மூர்க்கத்தனமான முறையில், தான் பெற்ற மகள் என்றோ, தன் சகோதரி என்றோ, தன் பேத்தியென்றோ, மனைவி என்றோ, தாயென்றோ உணர்வேதுமில்லாமல் அந்தப் பெண்களைக் கொலை செய்கின்றனர்.

இத்தகைய செயல்கள் எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இத்தகைய செயல்கள் நடக்காதபடி ஒழிக்கப்பட வேண்டும். அப்படியானல் பெண்ணியம் என்பது சகல சமூகத்துக்கும் பொதுவானதாயிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.  இல்லை என்று எவரவது மறுதலித்தால் அவர்கள் கௌரவக் கொலைகள் போன்றவற்றை  பகிரங்கமாகவே ஆதரிக்கிறார் என்று தான் அர்த்தம்; அப்படிப்பட்டவர்களின் மனோநிலையை மாற்றியமைக்க வேண்டிய தார்மீகக் கடமை பெண்ணியவாதிகளிடமிருக்கிறது.

இன்றைக்கும் தமிழகத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் கணவனாலும், கணவன் வீட்டாராலும் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதைக்குட்படுவதும், கொல்லப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது; இன்று வரை தலித் இன பெண்கள் மேல்தட்டு ஜாதி வர்க்கத்தினரால் வன்புணர்வுக்குட்படுவதும், பாலியல் வன்கொடுமைக்குட்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு தானிருக்கிறது என்றால் இதை ஒழிக்க தமிழ் சமுதாயம் இதுவரை என்ன செயற்பாட்டில் இறங்கியிருக்கிறது? காவல் துறை மற்றும் ம்னித உரிமை சம்மந்தப்பட்ட பாதுகாவலர்களும் என்ன சாதித்திருகின்றனர்??

வெறும் போலி சாமியார்களின் ஊழல்களையும் வேஷத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட பெண்களின் அந்தரங்கங்க நடத்தைகள் தான் ஊடகங்களுக்கே தேவைப்படுகிறது என்றால் பெண்ணியத் தத்துவத்தை எப்படி ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் வித்தியாசப்பட வைக்க முடியும்??

பெண்களுக்கான பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சமூக சீர்த்திருத்தத்திற்கு முக்கிய தேவை பெண்ணியத்தின் அறிவு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்பது மட்டுமல்ல அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் தான். 

இத்தகைய கொடும் செயல்களை உலகில் உலவ விடுவது மனித சமுதாயத்துக்கே இழுக்கு. இவற்றைத் தட்டிக் கேட்கும் திராணியில்லாத எமக்குப் பெண்ணியம், பெண் விடுதலை, சமத்துவம் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? தாய் நாடு என்கிறார்கள்; தாய் மொழி என்கிறார்கள்; இயற்கையையும் சக்தியையும் பெண்ணாகவே கருதுகிறார்களாம்... ஆனால் பிறப்பால் ஆண்களுடன் இருக்கும் எம்மைப் பெண்ணாக மனிதாபிமானத்துடன் மதிக்கிறார்களா? இல்லை...!!

நாங்கள் பங்கெடுத்தால் தான் குற்றவாளிகளா? இல்லை.. இன்னமும் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை மௌனமாக வேடிக்கை பார்ப்பதாலும் குற்றவாளிகள் ஆகின்றோம். சரி.. பெண்ணாகிய நாம் எங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறோம்??

குடும்பத்தினரால் கொல்லப்படும் இந்த ஹானர்ஸ் கில்லிங் கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.சி.ஏ.ஹெச்.கே (International Campaign Against Honour Killings) என்ற அமைப்பு. பெண்ணினத்தை ஒடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதும், உதவுவதும் இவ்வமைப்பின் நோக்கம். மேலதிக விபரங்களுக்கு http://www.stophonourkillings.comஎன்ற இணையத்தை பார்வையிடவும். கௌரவக் கொலைக்கு உதாரணமாக இந்தக் காணொளியையும் பாருங்கள். கௌரவக் கொலைகள்!



பாதுகாப்பற்று, சாவின் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு பெண்ணுக்கும் தகுந்த ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது. மிகவும் அந்தரங்கமான, ரகசியமான ஆலோசனைகளுக்கு இந்த அமைப்பினரின் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்: Nina:  ninasalih@googlemail.com.

மேலதிக விபரங்களுக்கு: ICAHK's founder Diana Nammi : diana.nammi@gmail.com

தொலைபேசி: l +447862733511

இந்த குறிப்பிட்ட தொலைபேசியுடன் எல்லோராலும் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அப்படியான சூழ்நிலையிலிருக்கும் பெண்கள் தமது பாதுகாப்புக்காக வேறு ஏதாவது வழிகளில் முயற்சிக்க வேண்டும். அண்மையிலிருக்கும் மாதர் சங்கங்களையோ, மகளிர் காவல் நிலையங்களையோ தயங்காமல் நாட வேண்டும். ஆபத்து வரும் வரை காத்திராமல் முதலிலேயே வரும் முன் காப்பவளாயிருக்க வேண்டும். தனது அந்தரங்கங்களை  பகிர பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை..அதிலும் தனது கணவனோ அல்லது கணவர் வீட்டாரோ செய்யும் கொடுமைகளை பயம் காரணமாகவோ அல்லது அவமானம் கருதியோ வெளியிட மாட்டார்கள். ஆனால் அவளுடைய உயிருக்கே ஆபத்தான நிலையிலிருக்கும் போது இப்படி தனக்குள் எல்லாவற்றையும் அமுக்கி வைக்கப் பழகிக் கொள்வது மனோரீதியாகவும், உயிருக்கும் ஆபத்தானதே..! தன்னுடைய மனநிலையையும் சரி, சூழ்நிலையையும் சரி  நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


எமது கலாச்சாரக் கட்டமைப்பு ஒரு பெண்ணின் வாழ்கையை அவளை முதன்மையாக அடையாளப்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறது. கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவள் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டியவளாகவே இயக்கப்படுகிறாள். பிறந்த வீட்டிலிருப்பவர்கள்  ஒரு பெண்ணை  புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கும் போது "கணவன் வீட்டில் என்ன நடந்தாலும் அவள் அவற்றைத் தாங்கிக் கொண்டேயாக வேண்டுமென்ற கட்டாயத்தை போதனையாக உருப்போட பழக்கப்படுத்தப்பட்டவளாக  அனுப்பி வைக்கிறார்கள்.

இப்படியான சூழலில் வாழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தம்மைத் தாமே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் சுதந்திரமும் பாதுகாப்பும் எங்களுடைய கவனத்தில் மட்டுமே தங்கியிருக்கின்றது. வரதட்சணைக் கொடுமையோ, அல்லது கொடுமைப்படுத்தும் கணவனின் வன்முறையோ அல்லது வன்புணர்தலுக்கு முயல்பவர்கள் பற்றியோ உடனடியாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். வன்முறைகளைச் சகிக்கும் எந்தப் பெண்ணும்  முட்டாளே.

உங்கள் குடும்பத்தார் மூலம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் உடனடியாக உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருடன் அதைப் பற்றி சொல்லிவிடுங்கள்.

பெண் சமுதாயம் இற்றைத் திகதிகளில் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது கேள்வி என்றால் சகல துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு பரவியிருக்கின்றது என்பது மேம்போக்கான விடை மட்டுமே. சமூக ரீதியாக, சராசரியாக சொல்லப்படும் ஒரு நிகழ்தகவு தான் பெண்ணின் முன்னேற்றம் என்பது.

ஆனால் தனிப்பட்ட வாழ்கையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடலியல், உளவியல், கருத்தியல் ரீதியாக எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றும் பெண் சிசுக் கொலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. போன வருடத்தை விட இவ்வருடம் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற ரீதியான தகவலே தவிர முற்றாக நிறுத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம். வரதட்சணை, பாலியல் வன்முறை, வன்புணர்தல், கொலை போன்றவை பெண்ணினத்துக்கு எதிராக இன்றும் நடைபெற்று வருபவையே..!

பெண் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு முதல் காரணம் அவள் தான். தாரமாவதற்காகவும் தாயாவதற்காகவும் மட்டுமே பெண் என்பவள் படைக்கப்படுவதாய் நினைத்துவிடுகிறாள். அவள் குடும்பம், பாசம், அன்பு என்று முழு ஈடுபாட்டுடன் ஐக்கியமாகிவிடுவதால் தன் வாழ்கையில் முக்கியமான உறவுகளிடம் பலஹீனமாகிவிடுகிறாள். அவளுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையே பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மிகப் பரந்த இந்த உலகத்தில், வாழ்கை என்பது பலவித கோணங்களிலிருந்து ரசித்து, உணர்ந்து அனுபவிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம். அதைப் பெண் என்பவள் மற்றவர்களால் விதிக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் முடங்கி மற்றவர்கள் எதிர்பார்ப்பிற்கமைய வாழ்வதை விதியாக ஏற்றுக்கொள்வாள் என்றால் அவளுக்கு வாழ்கை என்பதே அனாவசியம். அந்த வாழ்கையில் எந்தவொரு சுயமும் இல்லை.

எந்த ஒரு பெண் தன் கருத்துகளுக்கு அமைய, தன்னுடைய சொந்த உணர்வுகளால் மட்டுமே வாழ்கையை வாழத் தலைப்படுகிறாளோ அந்தப் பெண் சுதந்திரமானவளாகக் கருதப்படுவாள். அப்படி ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே அடையாளப்படுத்திய தனது வாழ்கையை வாழத் தலைப்படும் போது தான் பெண்ணியம் முதல்படியாக தனது வெற்றியை நோக்கி பயணிப்பதாக அமையும்.