Sunday, January 5, 2025

சொற்கள் அல்லாத தொடர்பு………………..

 சொற்கள் அல்லாத தொடர்பு………………..   


மூச்சடக்கி முக்குளித்து மூவாயிரம்

சிப்பியிலோர் முத்தை ஒத்த

பேச்செடுத்துக் கோர்த்துயரும் கருவை அளிக்க

மையெடுத்துப் போதிலையென மருகி

காட்சிக்கடல் கண்டெடுத்தும் காணான் தானும்

களித்திலை யெனில்விண் ணேகி

மாட்சிமுகில் சாறெடுத்து வந்துசாற்றித்

தமிழ்ப்பாலை ஒன்றும் வெறியாம்  - 



கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றியதாம் நம் மூத்த மொழி தமிழ் மொழி என்பார்கள்…..இந்த மொழி தோன்றும் முன்பே மனிதகுலம் தோன்றி…அது தனது வாழ்கையை வழி நடத்திக் கொண்டிருந்தது…மொழிகள் இல்லாமலேயே…!!  வெறும் ஒலிகளும் கை , கண் அசைவுகளை மட்டும்  ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கையாண்ட  காலம் அது.  அது தான் சொற்களல்லாத தொடர்பு எனப்படும் Non verbal Communication ! 


என்னைக் கேட்டால் எந்த மொழியினரும் அறிந்து வைத்திருக்கும் இன்னொரு மொழி இதுவாகத் தானிருக்கும்.  இன்று வரை வாய்பேச முடியாதவர்களின் மொழியும் இதன் பரிமாணம்  தான்.  


ஒலிகளின் தொகுப்பு வடிவங்களில் இசை , மொழி என்ற பரிமாணங்களின் முதல் படிமம் இந்த சைகை மொழி அல்லது சொற்கள் அல்லாத தொடர்பு. எனலாம்… !!  ஒலியில்லாமல் தொடுகை, பாவனை, சைகை என்று பல் வேறு படிமங்களையும்

 கொண்டது எனலாம்.. 


மொழிகளேயற்ற காலகட்டத்தில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் தமது வாழ்கையின் சம்பவங்களை குகை ஓவியங்களாகவும், முத்திரைகளாகவும் சொற்களற்ற தொடர்பு முறையில் பொறித்து வைத்திருந்ததை வைத்து தான் இன்றளவும் மனித வாழ்கையின் ஆரம்பக்காலம் எதுவாக இருந்திருக்கும் என்ற கணிப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் மிகையாகாது. 


இன்றுவரை அகழ்வாராய்சிகளில் கிடைக்கும்  பண்டைய கால மட்பாண்டங்கள் முதல் நாணயம் வரை  சரித்திர, வரலாற்றுக் காலங்களை மொழிகள் கற்ற மானுடத்துக்கு  கணிக்க உதவுவது என்னமோ சொற்களற்ற மானுடம் விட்டுப் போன  சுவடுகள் தான். 


பூமியின் முதல் இரண்டு ஜீவராசிகளும் மொழியென்ற சொல்வடிவமில்லாமல் , தொடுகையையும் பாவனையையும் சைகையையும் கொண்டே தமக்குள்ளான உறவை ஆரம்பித்திருக்கின்றது. உலகின் மூத்த கலாச்சாரம், நாகரீகம், மொழி என்ற பெருமைகளைக் கொண்ட எமது இனத்தின் மூத்த குடிகளும் இதே நிலையிலிருந்து பரிமாணமடைந்தவர்கள் தான். இன்றளவும் எமது கலைகளினூடாகவும், வாழ்வியல் வழியாகவும் இந்த சொற்களல்லாத தொடர்பு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 


பண்டைய தமிழ் இலக்கியங்களான அகநானூறு புறநானூறு இதிகாசங்கள் காப்பியங்கள் யாவற்றிலும் கூட  சொற்களல்லாத தொடர்பான NVC சிலாகிக்கப்படுகின்றன.  பண்டைய காலங்களில் பெண்களின் பண்புகளும், வாழ்கை நியதிகளும் மிகவும் கடுமையானவை. நிலத்தை பார்த்து குனிந்து நடக்க வேண்டியவள். ஆண்களை தலை நிமிர்ந்து பார்க்கக் கூடாது. போன்ற விதிமுறைகள் அவளுக்கிருந்தன. ஆனாலும் அப்படிப் பட்ட சூழலிலும் பெண்கள் காதல் வயப்பட்டார்கள். அத்தகைய தருணங்களில் வாய்மொழியால் அவர்கள் பேசியது அரிது. தலையாட்டல்… சைகை மொழி, கண்னால் குறிப்புணர்த்துதல், பரிபாசை போன்ற உத்திகளே அவர்கள் கையாண்டது என்லாம். 


காதல் கலவி களவு என்று கலந்த கலவையாக தான் அவர்கள் வாழ்கை யிருந்தது….  


மொழியால் பேசாமலே முகத்தின் உணர்வுகளை கவனித்து குறிப்பால் உணர்த்தவும் உணரவும் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள்….இப்போதும்  இருக்கிறார்கள்….


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை கூட உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவரின் முகபாவங்கள், உணர்வுகள், உணர்ச்சிகளை வைத்தே அவரது மனநிலை. சூழ்நிலை போன்றவற்றை கணிக்க முடியும்…!! 


கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல 


என்கிறது வள்ளுவரின் குறள் ஒன்று… அதாவது அவனுக்கும் அவளுக்குமிடையே காதல் அரும்பியபின், அவன் அவளைப் பார்த்து உரையாடி அவளது உள்ளக் கருத்தினை அறிய விழைகிறான். அவள் அவனைப் பார்க்கிறாள். அப்பார்வையில் இரண்டு நோக்கு உள்ளன. முதல் நோக்கு காதல்நோயைத் தருகின்றது; இரண்டாவதான பார்வை காதல்நோயைத் தணிக்கும் மருந்தாக அமைந்து அவள் அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்ற குறிப்பையும் தந்தது. அடுத்து களவுப் பார்வையால் அதாவது அவனுக்குத் தெரியாமல் சிறுது கணம் பார்க்கிறாள். அது அவன்மீது அவளுக்குள்ள காதலை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. அடுத்த சந்திப்பில் நேராகவே பார்க்கிறாள். அவன் அவளை எதிர்நோக்கு கொள்கிறான். உடனே அவள் ஏதோ கருத்தை உட்கொண்டு நாணித் தலைகவிழ்ந்து கொள்கிறாள். அவர்களது புதிய உறவு தொடர்வது உறுதிப்பட்டுவிட்டதற்கான குறிப்பு கிடைத்தது. அவன் அவளைப் பார்க்கும்பொழுது தலைகவிழ்ந்து நிலத்தைப் பார்த்தாள்; அவன் அவளைப் பார்க்காது கண்ணை வாங்கிக்கொண்டவுடன் அவள் அவனைப் பார்த்து புன்முறுவல் புரிகிறாள். பின்னர் கடைக்கண் பார்வை வீசினாள்; காதல் கலந்த ஓரக்கண் பார்வை அவளது எண்ணத்தில் அவனே நிறைந்திருக்கிறான் என்பதைக் குறிப்பாகக் காட்டி அவளது காதலை உறுதி செய்தது. பழகத் தொடங்கியபின் ஒருவர் உள்ளத்தை மற்றவர் புரிந்துகொள்ள முயல்கின்றனர். அவளது பெண்மைக் குணமும் அவனுக்கு ஒரு ஈர்ப்பாகிறது. இன்னும் வெளிஉலகுக்கு அவர்கள் காதலர்கள் என்பதைக் தெரிவித்துக் கொள்ளவில்லை. எனவே பொது இடங்களிலே ஒருவரையொருவர் காணநேரும்போது முன்பின் அறிமுகமற்ற அயலாரைப் பார்ப்பதுபோல் நடந்துகொள்கின்றனர்.

இக்காட்சி:

அவளது மருந்துப்பார்வை, களவுச்சிறுநோக்கு, சிறக்கணித்தல், புன்முறுவல், முகமலர்ச்சி, பொதுநோக்கு, இறைஞ்சுதல், கண்வழிபேசுதல் ஆகியவற்றின் வழி தலைவன் குறிப்பு அறிகிறான் என்று இவ்வதிகாரத்து முந்தைய பாடல்கள் கூறின.

இப்பாடலில், காதலர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டபின், அவர்கள் கண்கள் சந்திப்பது காட்டப்படுகிறது. நெஞ்சில் உள்ள காதல் உணர்வு அவர்கள் கண்களில் புலப்பட்டது. இருவரது கண்களும் பார்வையால் பேசின. அவை ஒன்றுபட்டு ஒரே நோக்காகிவிடுகிறது. ஒத்த தன்மையான அந்தப் பார்வையிலே ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் முழுமையாகக் குடி புகுந்துவிட்டனர் என்பது தெளிவானது. அவ்வளவுதான், அவர்கள் தம் காதலை வாய்ச்சொற்களால் புலப்படுத்தத் தேவையே இல்லை. இங்குள்ள நோக்கு என்பது கண்பார்வையல்ல உள்ளப்பார்வை. சொற்களல்லாத தொடர்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  


இராமனும் சீதையும் மிதிலையில் முதல் முதலாக சந்திக்கும் போது அவர்கள் இருவரும் பேசவில்லை…! இருவர் கண்களும் தான் பேசிக் கொண்டனவாம்….


எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.

கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று

உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.

அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்   


இன்றளவும் நமது பரத நாட்டியக் கலை நயனம், உடல் அசைவு, பாவம், விரல் சேர்வை, பாத தாளம், சலங்கையொலின் சந்தம் என்பவற்றின் கலவையாலனது. சொற்களாலான பாடல் இல்லாமலேயே நடனத்தால் ஒரு முழுக் கதையையும் சித்தரிக்க முடியும்…! நடன அசைவுகள் மூலம் அனார்க்கலி சலீமுக்கு காதல் சமிக்சை கொடுத்தாள் என்பது அவர்களின் சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டவொன்று. 


அதே போல் பண்டைய இந்துக் கோவில்களிலும் சரி மாமல்லபுர சிற்பங்களிலும் சரி ஒவ்வொரு கல்லும் ஒவ்வொருவகையான சொற்களல்லாத தொடர்பில் கதைகளையும் வரலாறுகளையும் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 


இங்கே எல்லோரா , அஜந்தா, சிகிரியா போன்ற குகை ஓவியங்களையும் குறிப்பிடலாம். அவையும் இதே NVC சம்மந்தப்பட்டவையே…! 


அதே போல் காதலில் மட்டுமல்ல வேறு பல சூழல்களிலும் நாம் நம்மையறியாமலோ அல்லது அறிந்தோ சொற்கள்லல்லாத தொடர்பு மூலம் நமது கருத்துகளை பரிமாறவோ , எமக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்யவோ செய்கிறோம். 


 பழைய பேரரசுகள் இந்த நான்வெர்பல் தொடர்பாடலைக் கொண்டு சில நூற்றாண்டுகள் ஆட்சி செய்துள்ளனர் அவற்றில் ஒன்று  முந்துதிராவிடர் மேல்நிலையில் இருந்து ஆண்ட சிந்துவெளி நாகரிகம். இதில் ~400 குறியீடுகளைக் கொண்டு சில தொடர்களை அமைத்து பல மொழிக்குடும்பத்தினருக்கும் அறிவித்துள்ளனர். ஒரு சில வார்த்தைக்கு ஒரு குறியீடு. அரசாண்டவர்களுக்கு அவர்களின் முந்து-த்ராவிட மொழியில் என்ன (Phonetic and Verbal) என்று தெரியும்.  

ஆனால், மற்றவர்களுக்கு உத்தேசமாக என்ன பொருள் (இங்கே, சிந்து எழுத்து non-verbal, non-phonetic ஆகிறது) என அந்த வரியைப் பார்த்தால் புரியும். உ-ம்: 1, 2, 3, ... என்ற எண்கள் காட்டுவர். கையில் 1 விரல், 2 விரல் காட்டினால் என்ன எனப் புரிந்துகொள்ளலாம் அல்லவா? எந்த பாஷையினரும். இதனைச் சற்றே விரித்து, தங்களுக்கு முக்கியமான சின்னங்களைக் குறியீட்டால் காட்டியுள்ளனர் அக்காலத்தில் என்பதை அகழ்வாராய்ச்சிகள் கண்டு பிடித்திருக்கின்றனர். 


இதே போல்  தென்னமெரிக்காவில் இன்க்கா பேரரசு 3 நூற்றாண்டுகளாக வண்ண, வண்ணக் கயிறுகளால் முடிச்சுகள் மூலம் ஆட்சி நடத்தியது. இதனையும் non-phonetic என்பார்கள். இன்க்கா பாஷை தெரியாதாருக்கும், இந்த முடிச்சுகளின் பொருள் தெரிய வைத்துள்ளனர்.  


சொற்களல்லாத தொடர்பு பற்றி இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம். மீத ஆராய்வை மற்றொரு இன்னொரு பதிவாக்கி மீண்டும் வர முயற்சிக்கிறேன். இதை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.


நன்றி !!