ஈழத்தமிழருக்காக எவருமே குரல் கொடுக்காத நேரத்தில் அவர் ஒருவர் தான் குரல் கொடுத்தார் ..அவரை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று என் அன்புக்கு பாத்திரமான ஒரு சகோதரர் எழுதிய போது மிகவும் மனவருத்தமாகத் தான் இருந்தது. ஆனால் உண்மையில் ஈழத்தமிழரையும், எங்கள் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவது எங்களைப் பொறுத்தவரை சீமான் தான் ! நாங்கள் அல்ல!!
சீமான் 30 வருடத்துக்கும் மேலான எங்கள் போராட்டத்தையும், மாவீரர்களையும், எங்கள் தலைவரையும் தன்னுடைய ஒவ்வொரு செய்கையாலும் கொச்சைப்படுத்துகிறார். மாவீரர் நாளுக்கான தனிப்பெரும் பாடலை தன் கட்சியின் ஆவணமாக்கினார். விடுதலைப்புலிகளின் சின்னத்தையும், கொடியையும் தன் கட்சிக் கொடியாக்கினார். சாதி பேதங்களை அழிக்க வேண்டுமென்ற தேசியத்தலைவரின் பெயரை சொல்லிக் கொண்டே அவர் என்னென்ன சாதி கூட்டங்களில் பங்கெடுக்கிறார் என்று எல்லோரும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்??
இதென்ன அவர் டைரக்ட் பண்ணும் சினிமாவா??? இவர் யார் போராளியா அல்லது அரசியல்வாதியா? இவர் ஒரு இரண்டுங்கெட்டான். தேசியத்தலைவருடன் நின்று எடுத்த ஒரே ஒரு போட்டோவுடன் சினிமாவை விட்டு அரசியலில் குதித்து தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆயுதம் தான் ஈழத்தமிழருக்காக கொடுக்கும் குரல்!! 2008ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திலிருந்து 2009 மே17ம் திகதி வரை (நீங்கள் சொன்னீர்களே எல்லோரும் வாய் மூடிக் கொண்டிருந்த நாளில் இவர் மட்டும் தான் குரல் கொடுத்தார் என்று??!அன்றைய நாட்களில்) அவருடன் தொடர்பிலிருந்த ஈழத்தமிழர்களில் நாங்களும் அடக்கம். அதனால் நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே சீமானை அறிந்து , தெரிந்து, பின் உணர்ந்து விலகியவர்களில் நான் அடக்கம்! அதனால் கொச்சைப்படுத்தல் எங்கு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் முழுத்தகுதியும் எங்களுக்கு இருக்கிறது.
உண்மையான போராளிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி வருசக்கணக்காக தங்கள் தங்கள் துறையில் கடுமையான உழைப்பிலும், பயிற்சியிலும், மக்கள் சேவையிலும் ஈடுபட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்;மடிபவர்கள். தேசியத் தலைவரின் பின்னால் படை வந்தது என்றால் அந்தப் படை உண்மையான ஆயுதங்களை கைகளில் ஏந்தி கல்லிலும், முள்ளிலும், காடுகளிலும் , புளுதிகளிலும் அல்லல்பட்டு , கடும் உழைப்பிலும், பயிற்சியிலும் தேர்ந்த உண்மையான களப்போராளிகள்...இந்த மாதிரி நாடக காஸ்டியூம் போட்டுக் கொண்டு வந்து நின்றவர்கள் அல்ல. இங்கு இதில் இந்த கரும்புலிகள் போல் வேசம் போட்டுக் கொண்டு நிக்கும் இந்த நபர்கள் யார்?? துணை நடிகர்களா?? இவர்கள் என்ன பயிற்சியில் தேர்ந்தவர்கள்?? இது என்ன வகையான படையணி?? இதை எப்படி சீமான் அங்கீகரித்தார்??? புலியை பார்த்து பூனை சூடு போட்டால் பூனை புலியாகாது..
எங்களுக்காக குரல் கொடுத்தார் எங்களுக்காக குரல் கொடுத்தார் என்று சொல்லியே எங்கள் வாயை மூடிக் கொண்டிருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் கேட்டு கிண்டல் பண்ணிச் சிரிக்கிறோம்..! எங்களுக்காக இவர் மட்டும் தானா குரல் கொடுத்தார்??? அமீர் குரல் கொடுக்கவில்லையா?? சிறை செல்லவில்லையா?? சத்யராஜ் குரல் கொடுக்கவில்லையா?? மணிவண்ணன் சார் குரல் கொடுக்கவில்லையா? இவர்கள் எல்லாம் 2009ல் தான் குரல் கொடுக்க பழகினார்கள். ஆனால் அதற்கு முன்னமே காலம் காலமாய் வைகோவும், நெடுமாறன் ஐயாவும் எங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே....இவர்கள் யாரும் எங்களை வைத்து , அல்லது எங்களுக்காக குரல் கொடுத்தேன் பேர்வழி என்று சொல்லி பிழைப்பு நடத்தவில்லை ...சீமானை தவிர!!
சீமானின் பின்னால் போகும் அத்தனை இளைஞர்களும் சீமானுக்காக போகவில்லை. அவருடைய கட்சிக் கொடியிலிருக்கும் புலி -பிரபாகரன் என்ற மாவீரனின் சின்னம் என்ற உணர்வில் , அவர்களையும் விடுதலைப் புலிகளாய் நினைக்க வைக்கிறது. தேசியத்தலைவரை மனதார நேசிக்கும் அப்பாவிகளான ஆனால் தமிழ் உணர்வு கொண்ட இளைஞர்கள் அவர்கள். ..பிரபாகரன் வழியில் சீமான் செல்கிறார் என்று நம்பிக் கொண்டு பின்னால் செல்கின்றனர். ஒரே ஒரு நாள் சீமான் தனக்கான கொள்கை என்று ஒன்றை தனியாகச் சொல்லி, விடுதலைப் புலிகளுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சும்மாவேனும் சொல்லிப் பார்க்கட்டுமேன்...ஆந்த வினாடியிலிருந்து கட்சியில் சீமானைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்...இது என்னுடைய சவால். அப்படி இல்லை சீமானுக்காக தான் இருக்கிறோம் என்றால் சீமான் விடுதலைபுலிகளின் கொடிச்சின்னத்திலும், மாவீரர் பாடல்வரிகளிலும் கை வைக்காமல் தனக்கென்று தனிப்பட்ட சின்னத்தையும் கொடியையும் ஆவணத்தையும் தயாரித்திருக்க வேண்டும்!!
நடிகன் என்றைக்குமே நடிகன் தான்...அரசியல்வாதி என்றைக்குமே அரசியல்வாதி தான்..இரண்டு ஜாதியும் சாக்கடைகளுக்கு சமமானவை...போராளிகள் என்று சொல்லி வேசம் தான் போட முடியுமே தவிர இவர்களால் போராளிகளாக ஆக முடியாது.
எங்களுக்காக குரல் கொடுத்தார்கள் என்பதற்காக எங்களுக்காக உயிரையே கொடுத்த எங்கள் மாவீரர்களின் மதிப்பிலும், மாண்பிலும் புளுதி சேர்ப்பவர்களை பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தால் எங்களைப் போல் ஈனப்பிறவிகள் வேறு யாரும் இருக்க முடியாது..!